கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021
மண் வளமும் தரமும் இடத்துக்கு இடம் மாறுபடும். மண், பயிர்களுக்குத் தேவையான சத்துகளைச் சேமித்து வைக்கும் அறையாக விளங்குகிறது. பயிரிடும் நிலத்தின் வளத்தைப் பொறுத்துத் தான் மகசூல் திறன் அமையும்.
கார அமிலத் தன்மை, நீரில் கரையும் உப்புகளின் நிலை, மண்ணிலுள்ள சத்துகளின் அளவு போன்ற விவரங்கள் தெரிந்தால் தான், பயிருக்குத் தேவையான சத்துகளை முறைப்படி கொடுக்க முடியும்.
இதைப்போல, கார அமில நிலை, உப்பின் நிலை தெரிந்தால் தான் பாசனநீரின் குணத்தை அறிய முடியும். இந்த விவரங்களை, மண் மற்றும் நீர் பரிசோதனை மூலம் அறிய முடியும்.
மண் மாதிரி எடுக்கும் முறை
பொருள்கள்: மண் மாதிரியை எடுப்பதற்குத் தட்டு, மண்வெட்டி மற்றும் துணிப்பை வேண்டும். நுண் சத்துகள் சோதனைக்கான மண்ணை எடுப்பதற்கு மரத்தால் ஆன கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.
மண் மாதிரி எடுக்கக் கூடாத இடங்கள்: மர நிழல், வரப்பு மற்றும் வயலோரம், நீர்த் தேங்கும் பகுதி, பயிருள்ள நிலம், குப்பைக் கிடங்கு.
தகுந்த காலம்: மண் மாதிரியை எடுப்பதற்கான நிலம் நன்றாகக் காய்ந்திருக்க வேண்டும். எனவே, ஏப்ரல்-ஜூன் காலம் மிகவும் ஏற்றது.
மண் சேகரிப்பு: வரப்பில் இருந்து பத்தடி தள்ளி, ஒரு ஏக்கரில் பரவலாகப் பத்து இடங்களில் மண்ணை எடுக்க வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் மண் வெட்டியால் V வடிவத்தில் வெட்டி, வெட்டிய மண்ணை அகற்றி விட்டு, சரிவின் ஓரங்களில் இருக்கும் மண்ணைச் சேகரிக்க வேண்டும்.
பிறகு, இந்த மண்ணைச் சுத்தமான இடத்தில் கொட்டி, வட்டமாக அல்லது சதுரமாகப் பரப்பி, நான்கு பாகங்களாகப் பிரித்து, எதிரெதிரே இருக்கும் இரு பாகங்களின் மண்ணிலிருந்து அரைக் கிலோ அளவுக்குத் துணிப்பையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மரப் பயிர்கள்
தரையில் இருந்து இரண்டடி நீள அகலத்தில் குழியெடுக்க வேண்டும். இதில், 30 செ.மீ. ஆழத்தில், 60 செ.மீ. ஆழத்தில், 90 செ.மீ. ஆழத்தில் மண்ணைச் சேகரித்துத் துணிப்பையில் இட்டு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். மரப்பயிர்கள் மண் மாதிரி சேகரிப்பில் பகுத்தல் பிரித்தல் முறையெல்லாம் கிடையாது. களர், உவர் நிலங்களுக்குத் தனித்தனியாக மண் மாதிரிகளை எடுக்க வேண்டும்.
இப்படிச் சேகரித்த மண்ணுடன், விவசாயியின் பெயர், முகவரி, நிலத்தின் சர்வே எண், வடிகால் மற்றும் பாசன வசதி, முன்பு சாகுபடி செய்த பயிர், இனி சாகுபடி செய்யவுள்ள பயிர் போன்றவை அடங்கிய குறிப்புச் சீட்டை இட்டு அனுப்ப வேண்டும்.
பாசனநீர் சோதனை
பயிர் நன்றாக வளர்ந்து அதிக மகசூலைக் கொடுக்க, வளமான நிலமும் நீரும் அவசியம். வேளாண்மைக்குத் தேவையான முக்கிய இடுபொருளான நீரை, மண்ணின் தன்மைக்கு ஏற்பவும், பயிரின் வளர்ச்சிப் பருவங்களுக்கு ஏற்பவும் பயன்படுத்த வேண்டும்.
மேலும், பாசன நீரின் குணம் மற்றும் தரத்தை அறிந்து கொள்ளுதல் மிகவும் முக்கியமாகும்.
நீர் மாதிரி எடுக்கும் முறை: நீர் மாதிரியை எடுப்பதற்குச் சுத்தமான புட்டியைப் பயன்படுத்த வேண்டும். பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை என, 2-3 முறை நீரை எடுத்து ஒன்றாகச் சேர்க்க வேண்டும்.
மின்சார மோட்டார் பொருத்தப்பட்ட கிணற்றில் இருந்து நீர் மாதிரி எடுப்பதாக இருந்தால், குறைந்தது 15 நிமிடங்கள் மோட்டாரை ஓட விட்ட பிறகு நீரை எடுக்க வேண்டும். நீர் மாதிரியை எடுத்த நாளிலேயே ஆய்வுக்கு அனுப்பி விட வேண்டும்.
ஆய்வுக் கட்டணம்
நீர் ஆய்வுக் கட்டணம் 50 ரூபாயாகும். இதில், நீரின் கார அமில நிலை, உப்பின் நிலை அடங்கிய விவரங்கள் கிடைக்கும். மண்ணாய்வுக் கட்டணம் 100 ரூபாய். இதில், மண்ணின் கார அமில நிலை, உப்பின் நிலை, கரிமச்சத்து, தழைச்சத்து, மணிச்சத்து சாம்பல் சத்து ஆகிய விவரங்கள் கிடைக்கும்.
விவசாயிகள் தங்கள் விளைநிலம் மற்றும் பாசன நீரின் தன்மைகளை ஆய்வு செய்து பயனடைய, புதுக்கோட்டை மாவட்டம், வம்பனில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம்.
முனைவர் தா.ஷெரின் ஜெனிட்டா இராஜம்மாள்,
முனைவர் ஞா.பிரபுகுமார், பி.கருப்பசாமி, வேளாண்மை அறிவியல் நிலையம்,
வம்பன், புதுக்கோட்டை-622303.
சந்தேகமா? கேளுங்கள்!