வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021
மனிதனின் தலையிலும், பிற பகுதிகளிலும் ஒட்டுண்ணியாக வாழ்ந்து வரும் பேன் எப்போது உருவானது என்பதற்கான சான்று எதுவும் கிடைக்கவில்லை. Pedicules humanus corporis என்னும் அறிவியல் பெயரைக் கொண்ட பேன், பூச்சியினத்தைச் சார்ந்த அனோப்டிரா வரிசையில், பெடிகுலிடா என்னும் குடும்பத்தில் இடம் பெற்றுள்ளது. உலகளவில் பரவியுள்ள பேன் வகைகள்: உடல் பேன், தலைப்பேன், நண்டுப் பேன் அல்லது அந்தரங்கப் பேன்.
பேனின் வாழ்க்கை
பேனின் உடல் தட்டையாக, இறக்கைகள் அற்று, உறிஞ்சும் வாயுடன் இருக்கும். தலைப்பேன் சுமார் 100 முட்டைகளை இடும். உடல் பேன் சுமார் 300 முட்டைகளை இடும். இந்த முட்டைகள் ஆங்கிலத்தில் நிட்ஸ் (nits) எனப்படும். இவற்றிலிருந்து 28 நாட்களில் சிறிய பேன்கள் உருவாகும்.
பாதிப்பு
Nymphs எனப்படும் இளம் பேன்களும் முதிர்ந்த பேன்களும் கடிப்பதன் மூலம் நமது தோலில் புண்களை உருவாக்கும். தலைப்பேன், தலை மற்றும் கழுத்தின் பின் பகுதியையும், உடல் பேன், உடலில் துணி படும் இடங்களிலும், நண்டுப்பேன், உடலின் அந்தரங்கப் பகுதியையும் தாக்கும். இந்தப் பேன்களின் உணவு மனித இரத்தமாகும். இதை எடுப்பதற்காக உடலைக் கடிக்கும் இடத்தில் ஒரு வகையான இரசாயனத்தைச் செலுத்தும். இதனால் கடிபட்ட இடத்தில் ரோசா வண்ணத்தில் பருக்களைப் போலத் தோன்றிக் கடுமையான அரிப்பை ஏற்படுத்தும்.
பேன்கள் மிகுதியாக மனிதனைத் தாக்குவது பெடிகுலோசிஸ் எனப்படும். இதனால், நிற மாற்றம், தோல் கடினமாதல் மற்றும் தோலில் பல மாற்றங்கள் நிகழும். உடல் பேனும் தலைப் பேனும், டைபஸ் டிரன்ச் காய்ச்சல், மற்றும் ஐரோப்பிய ரிலாஸ்பிங் காய்ச்சலைக் கடத்துவதில் ஈடுபடுகின்றன.
கட்டுப்படுத்தும் முறைகள்
உடல் பேனை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில், இது துணியிலும் ஒட்டிக் கொண்டிருக்கும். எனவே, தகுந்த மருந்தை வாங்கி உடல் மற்றும் துணிகளில் நுண்ணுயிர் நீக்கம் செய்தால் இந்தப் பேனைக் கட்டுப்படுத்தலாம். தலைப்பேனைக் கட்டுப்படுத்த, பூச்சி மருந்துகளான பைரித்ரம், ரோடினான் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். எல்லாவற்றுக்கும் மேலாகத் தன் சுத்தம் மிகவும் முக்கியம்.
பாட்டி வைத்தியம்
வேப்ப எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய்யைக் கலந்து தலையில் தடவி, ஒரு மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இப்படித் தொடர்ந்து மூன்று வாரங்களுக்குச் செய்தால், நீண்ட நாட்களாக இருக்கும் பேன், ஈறு, பொடுகுத் தொல்லை குறையும். அடுத்து, வேப்பிலையை அரைத்துத் தலையில் தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இப்படிச் செய்யலாம். அடுத்து, தலையணை மீது வேப்பிலை, துளசியிலைகளைப் பரப்பி அதன்மேல் ஒரு துணியைப் போட்டுத் தூங்கலாம்.
வெந்தயப் பொடி
ஊறவைத்த 2 தேக்கரண்டி வெந்தயத்துடன் அரைக்கிண்ணத் தேங்காய்ப் பாலைச் சேர்த்து நன்கு மையாக அரைக்க வேண்டும். இத்துடன் 3 தேக்கரண்டி எலுமிச்சைச் சாற்றைக் கலந்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.
குப்பைமேனிச் சாறு
பேன்களை அகற்றுவதில் குப்பைமேனிக்கு முக்கியப் பங்குண்டு. இந்த இலைகளை அரைத்துச் சாறெடுத்துத் தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.
சீத்தாப்பழக் கொட்டை
சீத்தாப்பழக் கொட்டைகளைக் காய வைத்துப் பொடியாக்கி, தேங்காய் எண்ணெய்யில் கலந்து இரவில் தலையில் தேய்த்துக் காலையில் வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் பேன்களின் தொல்லை ஒழியும்.
முனைவர் ம.சி.நளின சுந்தரி,
உதவிப் பேராசிரியர், ம.த.கௌரி, முனைவர் பட்ட ஆய்வு மாணவி,
விலங்கியல் துறை, இராணி மேரி கல்லூரி, சென்னை-04.
சந்தேகமா? கேளுங்கள்!