நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பா.செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
எருமைப்பட்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய்க் கிராமங்களிலும் இருக்கும் விவசாயிகள், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காரீப் பருவத்தில் பயிரிடப்படும், நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், பருத்தி, சிறிய வெங்காயம், தக்காளி, மரவள்ளி, மஞ்சள், வாழை ஆகிய பயிர்களுக்குக் காப்பீடு செய்து கொள்ளலாம்.
தேசிய வங்கிகள், பொது சேவை மையங்கள் மூலம் அல்லது தொடக்கக் கூட்டுறவு சங்கங்கள் மூலம், விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். அதாவது, கீழே குறிப்பிட்டுள்ள வகையில், பிரீமியம் தொகையைச் செலுத்த வேண்டும். நிலக்கடலைப் பயிருக்கு ரூபாய் 420, சோளப் பயிருக்கு ரூபாய் 136. இதை, ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் செலுத்தி, காப்பீட்டைப் பதிவு செய்ய வேண்டும்.
சிறிய வெங்காயப் பயிருக்கு ரூபாய் 1,230, தக்காளிப் பயிருக்கு ரூபாய் 1,017. இதை, ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் செலுத்தி, காப்பீட்டைப் பதிவு செய்ய வேண்டும். மக்காச்சோளப் பயிருக்கு ரூபாய் 638, பருத்திக்கு ரூபாய் 499, மரவள்ளிக்கு ரூபாய் 619, மஞ்சள் பயிருக்கு ரூபாய் 3,215, வாழைக்கு ரூபாய் 1,857. இந்தத் தொகையை, செப்டம்பர் 16-ஆம் தேதிக்குள் செலுத்தி, பயிர்க் காப்பீட்டைப் பதிவு செய்ய வேண்டும்.
விதைப்புத் தவிர்தல், விதைப்புத் தோல்வியுறுதல், விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர்க் காலத்தில் ஏற்படும் பயிரிழப்பு, அறுவடைக்குப் பின் ஏற்படும் மகசூல் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை இடர்களால் ஏற்படும் பயிர் இழப்பு ஆகியவற்றுக்குக் காப்பீடு வழங்கப்படுகிறது.
பயிர்க் காப்பீடு செய்ய, முன்மொழிவுப் படிவம், சிட்டா அடங்கல் அல்லது பயிர் சாகுபடிச் சான்று, ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முன்பக்க நகல் ஆகிய ஆவணங்கள் தேவை. எனவே, காரீப் பருவப் பயிர்களைப் பயிரிட்டுள்ள, எருமப்பட்டி வட்டார விவசாயிகள், இத்திட்டத்தில் சேர்ந்து பயன் அடையலாம்.
செய்தி: எருமப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.
சந்தேகமா? கேளுங்கள்!