My page - topic 1, topic 2, topic 3

பொம்ம சமுத்திரத்தில் காரிப்பருவப் பயிற்சி முகாம்!

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டார வேளாண்மைத் துறை மூலம் செயல்படும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ், பொம்ம சமுத்திரம் கிராமத்தில், விவசாயிகளுக்கான காரிப்பருவப் பயிற்சி முகாம் 15.07.2024 அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த, எருமப்பட்டி வட்டார வேளாண்மை அலுவலர் முனைவர் சி.பாபு, வேளாண்மைத் துறையின் மானியத் திட்டங்கள், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ஆகிய திட்டங்களைப் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

துணை வேளாண்மை அலுவலர் அந்தோணிசாமி, ஒருங்கிணைந்த பண்ணையம், பயிர்ப் பெருக்கத் திட்டம், பயிர்க் காப்பீடு மற்றும் பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்தும், அவற்றின் மூலம் பயன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளிடம் விளக்கிப் பேசினார்.

வேளாண்மைத் துறையில் இருந்து ஓய்வு பெற்ற துணை வேளாண் அலுவலர் மாதேஷ், மண் மற்றும் நீர்ப் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை இடுபொருள்கள் மூலம் மண்ணை மேம்படுத்துதல் மற்றும் மண்ணுக்கும் நீருக்கும் ஏற்ற, பயிர் சாகுபடி முறைகளை எடுத்துரைத்தார்.

எருமப்பட்டி வட்டாரத் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் முனைவர் வாசு, தோட்டக்கலைத் துறையில் உள்ள மானியத் திட்டங்கள் மற்றும் பழப்பயிர் இடுபொருள்கள், நுண்ணூட்டங்கள், உயிரியல் கட்டுப்பாடு ஆய்வகத்தின் மூலம் வழங்கப்படும் டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

உதவி தோட்டக்கலை அலுவலர் பிரகாஷ், காய்கறிகள் மற்றும் மலர் சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றிப் பேசினார். இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை இடுபொருள்களைப் பற்றி, வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் செ.நந்தகுமார் எடுத்துரைத்தார்.

உதவி வேளாண்மை அலுவலர்கள் ம.கார்த்திகேயன், இரமேஷ் ஆகியோர், நுண்ணீர்ப் பாசனம் மற்றும் பயிர்க் காப்பீடு பற்றி விளக்கிக் கூறினர். இந்தப் பயிற்சி முகாமில் பொம்ம சமுத்திரம் பகுதி விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டனர். உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் திரேகபிரியா, காவியா ஆகியோர், பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


செய்தி: எருமப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks