கரும்பு, இந்தியாவில் மிக முக்கியமான பணப்பயிர். கரும்பு சாகுபடிக்கு அதிக வேலையாட்கள் தேவை. அத்துடன், கரும்பில் வேலை செய்வது அவ்வளவு எளிதான செயலும் அல்ல. எனவே, கரும்பில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதிகமாகக் கூலி தர வேண்டி உள்ளது.
உதாரணமாக, ஒரு எக்டர் நிலத்தைத் தயாரித்துப் பார் பிடிக்க, 25 ஆண்கள் தேவை. நடவு செய்ய, 50 ஆட்கள் தேவை. களையெடுக்க, உரமிட, மண் அணைக்க, பாசனம் செய்ய, 60 ஆட்கள் தேவை. அறுவடை செய்து கட்டுகள் கட்டி, லாரியில் ஏற்ற, 150 ஆட்கள் தேவை.
அதுவும், சரியான நேரத்தில், போதிய ஆட்கள் கிடைப்பதில்லை. எனவே, சாகுபடியைச் சரியாகச் செய்ய முடியாமல் போவதால், மகசூல் இழப்பும் சாகுபடிச் செலவும் அதிகமாகி விடுகின்றன. இதனால், கரும்பில் அதிக இலாபம் கிடைக்காமல், விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் சாகுபடிப் பரப்பைக் குறைத்து வருகிறார்கள்.
இந்தச் சிக்கல்களைப் போக்கவும், கரும்பு உற்பத்திச் செலவைக் குறைக்கவும், அதிக இலாபம் பெறவும், கரும்பு சாகுபடியில் இயந்திரங்களின் வரவு மிகவும் அவசியமாகிறது. நடவு முதல் அறுவடை வரை, கரும்பு சாகுபடியில் எல்லா வேலைகளையும் இயந்திரங்களைக் கொண்டே செய்ய முடியும்.
இதற்காக, கரும்பு நடவு முறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். உதாரணமாக, இப்போது கடைப்பிடிக்கும் 90 செ.மீ. இடைவெளியில் இருந்து மாறி, 120 செ.மீ. அல்லது 160 செ.மீ. இடைவெளியைப் பின்பற்றினால், நடவு செய்தல், களையெடுத்தல், மண் அணைத்தல், உரமிடுதல் போன்ற அனைத்து வேலைகளையும் இயந்திரங்கள் மூலம் செய்ய முடியும்.
இன்றைய சூழ்நிலையில், கரும்பு சாகுபடியில், இயந்திரங்களின் பங்கு மிகவும் அவசியம். கரும்பு சாகுபடிக்கு உதவும் கருவிகளை, நிலம் தயாரிக்கப் பயன்படும் கருவிகள், நடவு செய்யப் பயன்படும் கருவிகள், பின்செய் நேர்த்தி செய்யப் பயன்படும் கருவிகள், அறுவடைக் கருவிகள், கட்டைப்பயிர் சாகுபடிக்குப் பயன்படும் கருவிகள் என, ஐந்து வகையாகப் பிரிக்கலாம்.
நிலம் தயாரிக்கப் பயன்படும் கருவிகள்
சிசல் கலப்பை: நிலத்தைக் குறிப்பிட்ட ஆழத்தில் மட்டுமே தொடர்ந்து உழுதால், அந்த ஆழத்துக்குக் கீழேயுள்ள மண் இறுக்கமாகி, கடினத் தட்டாக மாறி விடும். இத்தகைய நிலத்தில் கரும்பைப் பயிரிட்டால், அதன் வேர்கள், அந்தக் கடினத் தட்டுக்குக் கீழே இறங்க முடியாமல், பந்தைப் போல உருண்டு, வளர்ச்சிக் குன்றி விடும்.
மேலும், மண்ணில், குறிப்பிட்ட ஆழத்துக்குக் கீழேயுள்ள சத்துகளை எடுக்க முடியாது. இதனால், பயிரின் வளர்ச்சிக் குன்றி மகசூல் இழப்பு ஏற்படும். இக்குறையைச் சரி செய்ய, உளிக்கலப்பை என்னும் சிசல் கலப்பை மூலம் உழுதால், சுமார் 50 செ.மீ. ஆழம் வரையுள்ள மண்ணின் கடினத் தன்மை உடைபடும். இது, நீர் இறங்கவும், வேர்கள் நன்றாக வளர்ந்து மண்ணில் உள்ள சத்துகளை எடுத்துக் கொள்ளவும் உதவும்.
சட்டிக் கலப்பை: இது, 45 முதல் 70 செ.மீ. விட்டம் வரையுள்ள இரும்புச் சட்டிகளைப் போன்ற அமைப்பில் இருக்கும். இதை டிராக்டரில் இணைத்து உழுதால், சுமார் 40 செ.மீ. ஆழம் வரையுள்ள கட்டிகளைப் பெயர்த்துப் போடும். கரும்பு அறுவடை முடிந்ததும், சட்டிக் கலப்பையால் உழுதால், கரும்புக் கட்டைகளை நிலத்தில் புதைத்து, நிலத்தை நல்ல முறையில் பண்படுத்தலாம்.
டில்லர் கலப்பை அல்லது கல்ட்டிவேட்டர்: இந்தக் கலப்பையை டிராக்டரில் இணைத்து, ஏற்கெனவே சட்டிக் கலப்பையால் உழுத வயலில் இயக்கினால், பெரிய மண் கட்டிகளை, சிறு சிறு கட்டிகளாக உடைத்துப் புழுதியாக மாற்றும். மேலும், முதலில் உழுத பிறகு முளைத்து வரும், சிறு களைகளையும் அழித்து, மண்ணைப் பண்படுத்தும்.
ரோட்டாவேட்டர் கலப்பை: இந்தக் கலப்பையை டிராக்டரில் இணைத்து, ஏற்கெனவே டில்லர் கலப்பையால் உழுத வயலில் மீண்டும் உழுதால், சிறு மண் கட்டிகளைக் கூடப் பொடியாக்கி, மண்ணைப் புழுதியாக ஆக்கி விடும். ரோட்டாவேட்டர் மூலம் உழுத வயலில், மண், புட்டு மாவைப் போல, பொலபொலவென ஆகி விடுவதால், பயிர்கள் எளிதில் முளைக்கும்.
பார்கள் பிடிக்கும் கலப்பை: புழுதியாக உழுத வயலில், பார்களைப் பிடிக்கும் கலப்பை மூலம், 4 அடி பார், 4 அடி பாரில் இணை வரிசையில் கரணை நடவுப் பார் மற்றும் 5 அடி பார் என, தேவைக்கு ஏற்ப, குறைந்த செலவில், குறைந்த நேரத்தில் போட முடியும். இதனால், நேரம், பணம் மீதமாகும்.
குழியெடுக்கும் கருவி: குழிமுறை கரும்பு சாகுபடிக்கு, குழியெடுக்கும் கருவியை டிராக்டரில் இணைத்து, 120 செ.மீ. விட்டம், 150 செ.மீ. ஆழமுள்ள குழிகளை, குறைந்த நேரத்தில் எடுக்க முடியும். ஒரு மணி நேரத்தில் சுமார் 250 குழிகளை எடுக்கலாம்.
நடவு செய்யப் பயன்படும் கருவிகள்
கரணை வெட்டும் கருவி: கரும்பு நடவுக்கு 2-3 பருக்கள் உள்ள விதைக் கரணைகள் பயன்படுகின்றன. ஒரு ஏக்கர் கரும்பு நடவுக்கு, 30 ஆயிரம் இரு பருக் கரணைகள் வேண்டும். இதற்கு, சுமார் 4 டன் விதைக் கரும்பு தேவை. இங்கே 2-3 பருக்கள் உள்ள கரணைகளை நடவு செய்யும் போது, பருக்கள் முளைப்புக்குத் தகுந்து, பயிர் எண்ணிக்கை வேறுபடுகிறது.
இதனால், பயிர் இடைவெளி, கிளைப்புத் திறன் மற்றும் கரும்பு எண்ணிக்கை குறைந்து விடுகிறது. தற்போது கரும்பில் குறைந்தளவு விதைக் கரும்புகளை நடவு செய்து, அதிக விளைச்சலைப் பெரும் பொருட்டு, ஒருபருக் கரணை நடவு பரிந்துரை செய்யப்படுகிறது.
குறைந்த செலவில், வேகமாகப் பழுதடையாத ஒருபரு, இருபரு மற்றும் மூன்று பருக் கரணைகளைத் தயாரிக்க இக்கருவி உதவுகிறது. முக்கியமாக, ஒருபருக் கரணைகளைத் தயாரிக்க, இக்கருவி மிகவும் பயன்படுகிறது. ஒரு ஏக்கருக்கு, சுமார் 20 ஆயிரம் ஒருபருக் கரணைகள் தேவை. ஒருபருக் கரணை வெட்டும் வேலையை, ஆட்கள் மூலம் செய்யும் போது, 5-6 சதக் கரணைப் பருக்கள் சேதமாகும்.
இதனால், கரும்பின் முளைப்புத் திறன் பாதிக்கப்பட்டு, அதிக இடைவெளி ஏற்படுகிறது. மேலும், ஒரு ஏக்கருக்கு வேண்டிய ஒருபருக் கரணைகளைத் தயார் செய்ய, சுமார் 11 ஆட்கள் தேவை என்பதுடன், பணச் செலவும் கூடுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு, குறைந்த செலவில் ஒருபருக் கரணை வெட்டும் கருவியை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்டு உள்ளது.
இக்கருவி, அரைக் குதிரைத் திறன் மோட்டார் உதவியுடன் இயங்குகிறது. மோட்டார், வட்ட ரம்பக் கத்தி, நாற்காலி ஆகியன இதன் முக்கியப் பாகங்கள் ஆகும். இக்கருவி மூலம், ஒரு ஏக்கருக்குத் தேவையான 20 ஆயிரம் ஒருபருக் கரணைகளை, ஆறு மணி நேரத்தில் வெட்டலாம். இதற்கு, கரணைகளை வெட்ட, கரணைகளைப் பிரிக்க என, இரண்டு ஆட்கள் மட்டும் போதும். கரணைகளை வெட்டிய பிறகு, தரமான ஒருபருக் கரணைகளைப் பிரித்து எடுக்க வேண்டும்.
கருவியின் சிறப்புகள்: ஒருபரு மற்றும் இருபருக் கரணைகளைத் தயார் செய்யலாம். கரணை வெட்டும் செலவில் சுமார் 80 சதம் மிச்சமாகும். இதன் எடை, 15-17 கிலோ எனக் குறைவாக இருப்பதால், தேவையான இடத்துக்கு எளிதாக எடுத்துச் செல்லலாம்.
கரணைத் தயாரிப்பில் ஏற்படும் சேதாரம் ஒரு சதம் மட்டுமே. தரமான ஒரு பருக் கரணைகளைத் தயார் செய்யலாம். மிகக் குறுகிய காலத்தில் அதிகப் பரப்புக்கான விதைக் கரணைகளைத் தயாரிக்கலாம்.
கரும்பு நடவு இயந்திரம்: கரும்பு நடவில் உள்ள, உடல் உழைப்பைக் குறைக்க, நடவுச் செலவைக் குறைக்க, கரும்பு நடவு இயந்திரம் அவசியம். டிராக்டர் மூலம் இயங்கும் நடவு இயந்திரம், சால் அமைத்தல், கரணைகளை வெட்டுதல், அடியுரம் இடுதல், கரணைகளைச் சால்களில் இட்டு மூடுதல் ஆகிய வேலைகளைச் செவ்வனே செய்து முடிக்கும். இந்த இயந்திரம், மூன்றடி இடைவெளியில், இரண்டு வரிசைகளில், கரணைகளை நடும்.
இந்த இயந்திரத்தில் இரண்டு ஆட்கள் அமர்ந்து கொள்ள ஏதுவாக இரண்டு இருக்கைகள் உள்ளன. முழு விதைக் கரும்புகள், டிராக்டர் பி.டீ.ஒ. தண்டால் சுழற்றப்படும் போது, ஒரே அளவுள்ள கரணைகளாக வெட்டப்பட்டு, நிலத்தில் உள்ள சால்களின் மத்தியில் விழும். இயந்திரத்தின் பின்னால் உள்ள கொத்துகள், கரணைகளில் மண்ணைப் போட்டு மூடிவிடும். கரணைகள் சால்களில் விழும் போது, சூப்பர் பாஸ்பேட்டை அடியுரமாக இடும் அமைப்பு, இந்த இயந்திரத்தில் உள்ளது.
இயந்திரத்தின் சிறப்புகள்: இந்த இயந்திரம் 1.5 அடி நீளத்தில் கரணைகளை வெட்டும். இதை இயக்குவதற்கு, டிராக்டர் ஓட்டுநர், கரும்பை எடுத்து இயந்திரத்தில் செலுத்த இருவர், கரும்பை டிராக்டருக்குக் கொண்டு வருவதற்கு இருவர் என, ஐந்து ஆட்கள் தேவை.
இந்த இயந்திரம் மூலம் ஒருநாளில் 1.2 எக்டர், அதாவது, 3 ஏக்கரில் கரும்பு நடவைச் செய்யலாம். நடவுக்கு, எக்டருக்கு 2,500 ரூபாய் செலவாகும். இந்த இயந்திரம் மூலம், அனைத்து வேலைகளையும் குறைந்த நேரத்தில், குறைவான ஆட்களைக் கொண்டு செய்து முடிக்கலாம்.
பின்செய் நேர்த்திக்குப் பயன்படும் கருவிகள்
பவர் டில்லர்: இது, இடையுழவு செய்தல், களையெடுத்தல், மண் அணைத்தல் ஆகிய வேலைகளை, நான்கடிப் பாரில் சிறப்பாகச் செய்யும். இந்த பவர் டில்லரை இயக்குபவர் நடந்து செல்ல வேண்டும். இயக்குபவர் உட்கார்ந்து செல்லவும், குறைந்த நேரத்தில் அதிகப் பரப்பில் களையெடுத்து மண் அணைக்கவும், மினி டிராக்டர் பயன்படுகிறது.
மினி டிராக்டர்: இது, 5.2 அடி இடைவெளிப் பார்களில் எளிதாக இயங்கி, குறைந்த நேரத்தில் களையெடுத்து, மண் அணைக்கும் வேலையைச் செய்கிறது. இதனால், ஆட்கள் தேவை குறைகிறது. செலவு மிச்சமாகிறது. குறைந்த நேரத்தில் அதிகப் பரப்பில் வேலை செய்ய முடிகிறது.
விசைத் தெளிப்பான்: பயிர்ப் பாதுகாப்பு மற்றும் நுண்சத்துக் குறையைப் போக்க, விசைத் தெளிப்பான் தேவை. இதை, பவர் டில்லர் மூலம் இயக்கி, குறைந்த நேரத்தில் பூச்சி மருந்துகளைத் தெளிக்கலாம். நுண் சத்துகளை இலைவழி ஊட்டமாகத் தரவும் உதவும்.
காய்ந்த தோகைகளை உரிக்கும் கருவி: கரும்பில் காய்ந்த தோகைகளை, நடவு செய்த 5-வது மாதமும் 7-வது மாதமும் உரிக்க வேண்டும். இதை இப்போது ஆட்கள் மூலம் செய்கிறோம். இவ்வகையில், ஒரு எக்டரில் தோகைகளை உரிக்க, 45 ஆட்கள் தேவை.
இப்போது கரும்புத் தோகைகளை உரிப்பதற்கு என, எளிய கருவி உள்ளது. இதன் மூலம் 55 சத ஆட்கள் தேவையைக் குறைத்து, குறைந்த செலவில், சிரமமின்றி, கரும்புத் தோகைகளை எளிதாக உரிக்கலாம்.
அறுவடைக்குப் பயன்படும் கருவிகள்
கரீப் கரும்பு அறுவடை இயந்திரம்: இதை, டிராக்டரில் இணைத்து, கரும்பை அறுவடை செய்யலாம். இந்த இயந்திரம் மேற்கிந்திய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இதன் அடிப்பாகத்தில் இருக்கும் இரண்டு கத்திகள், குறிப்பிட்ட உயரத்தில் முழுக் கரும்பாக வெட்டும். இதற்கு, கரும்பு சாயாமல் நேராக இருக்க வேண்டும்.
இந்த அறுவடை இயந்திரம் மண் மட்டத்தில் இருந்து 2 செ.மீ. ஆழத்தில் கரும்பை வெட்டுவதால், மறுதாம்புப் பயிருக்குக் கட்டை சீவும் வேலை குறைகிறது. இதன் மூலம் ஒருநாளில் 100 டன் கரும்பை அறுவடை செய்ய முடியும்.
மினி கரும்பு அறுவடை இயந்திம்: இதை, 60 எச்.பி. டிராக்டர் மூலம் இயக்க வேண்டும். கரும்பு சாயாமல் நேராக இருக்க வேண்டும். முழுக் கரும்பாக வெட்டும். எட்டு மணி நேரத்தில் 50 டன் கரும்பை அறுவடை செய்யும். இந்த இயந்திரத்தின் எடை சுமார் 350 கிலோ ஆகும்.
தேயிலைக் கவாத்து இயந்திரம்: இதிலுள்ள, வட்டச் சக்கரத்தில் கூரிய பற்கள் போன்ற அமைப்பு இருக்கும். இதை, பாட்டரி மூலம் ஒரு ஆள் இயக்க முடியும். பல் சக்கரம் அதிக வேகத்தில் சுற்றும் போது, கரும்பு வெட்டிச் சாய்க்கப்படும். ஜப்பானில் உருவாக்கப்பட்ட இந்த இயந்திரம், ஒரு நாளில் சுமார் 8 டன் கரும்பை அறுவடை செய்யும்.
ஆஸ்டாப்ட் 7000 கரும்பு அறுவடை இயந்திரம்: இது, ஒரு சமயத்தில் ஒரு வரிசைக் கரும்பை மட்டுமே அறுவடை செய்யும். கரும்பின் அடிப்பாகத்தை வெட்டும் கத்தி மூலம், வேர்ப்பகுதி வரை சென்று வெட்டும். அதன் பிறகு, வெட்டும் உருளை வழியாகச் செலுத்தப்படும். இது, கரும்பு மற்றும் தோகையை 10-12 அங்குலத் துண்டுகளாக வெட்டி, அதிவேகக் காற்றழுத்தம் மூலம் சுத்தம் செய்து, ஆலைக்குச் செல்லும் வண்டியில் கொட்டும்.
சிறப்புகள்: இந்த இயந்திரம் ஒருநாளில், 400 டன் கரும்புகளை அறுவடை செய்யும். எனவே, ஒரே நாளில் அதிகப் பரப்பில் கரும்பு அறுவடையைச் செய்யலாம். ஆட்கள் தரை மட்டத்தில் இருந்து 3-4 செ.மீ.க்கு மேலே வெட்டுகிறார்கள். ஆனால், இந்த இயந்திரம் நில மட்டத்தில் இருந்து கீழே வெட்டும். இதனால், 1-2 பருக் கரணைகள் அதிகமாக அறுவடை செய்யப்படும்.
கரும்பை 1-2 மணி நேரத்தில் வெட்டி, ஆலையில் கொண்டு போய்ச் சேர்த்து விடலாம். இதனால், கரும்பின் எடையோ, சர்க்கரைச் சத்தோ குறைவது இல்லை. கரும்புத் துண்டுகளின் கொள்ளளவு குறைவாக இருப்பதால், வண்டியில் அதிக எடையில் எடுத்துச் செல்லலாம். எனவே, கரும்பை எடுத்துச் செல்லும் செலவும் குறையும்.
பாரம் சுமக்கும் கருவி: சாலை வசதியில்லாத நிலங்களில் அறுவடை செய்த கரும்பை, சாலைக்குக் கொண்டு வரும் வேலையை ஆட்களே செய்கிறார்கள். இதை, ரோப் கார் என்னும் இழுவை இயந்திரம் மூலம், தேவையான இடத்துக்குக் கொண்டு செல்லலாம். மேலும், அறுவடை செய்த முழுக் கரும்பையும் எடுத்து, வண்டியில் ஏற்றும் வேலையைச் செய்யவும் கருவிகள் உள்ளன.
கட்டைப்பயிர் சாகுபடிக்குப் பயன்படும் கருவிகள்
தோகையைப் பொடியாக்கும் இயந்திரம்: இது, டிராக்டரில் இயங்கக் கூடியது. கரும்பு அறுவடை செய்த நிலத்தில் உள்ள தோகைகளைச் சிறிய துண்டுகளாக ஆக்கி, மண்ணில் அமிழ்த்தி விடும். இதனால், கரும்புத்தோகை மண்ணில் மட்கி எருவாகும்.
கரும்புக் கட்டைகளைச் சீவும் இயந்திரம்: இதை, டிராக்டர் மற்றும் பவர் டில்லர் மூலம் இயக்கினால், நில மட்டத்தில் இருந்து 5 செ.மீ.க்குக் கீழ் இயங்கி, கரும்புக் கட்டைகளை வெட்டி, கட்டைப் பயிரில், புதிய தூர்கள் வளர வகை செய்யும்.
தமிழ்நாட்டில் கரும்பு விவசாயத்தில் இயந்திரங்கள் இன்னமும் முழு அளவில் பயன்படவில்லை. குறிப்பாக நிலம் தயாரிக்கவும், களை எடுக்கவும் மட்டுமே பயன்படுகின்றன. இயந்திரம் மூலமான கரும்பு அறுவடை, குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே செய்யப்படுகிறது.
எதிர் காலத்தில் கரும்பு வேலைக்கு ஆட்கள் கிடைப்பது இன்னும் அரிதாகும். கூலியும் அதிகமாக இருக்கும். எனவே, கரும்பு சாகுபடிக்கு இயந்திரங்கள் மிகவும் அவசியமாகி விடும்.
தமிழ்நாட்டுக்கு ஏற்ற, கரும்பு அறுவடை இயந்திரங்களை உருவாக்க, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், சர்க்கரை ஆலை நிர்வாகம், வேளாண்மைத் துறை ஆகியன சீரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த இயந்திரம் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டு விட்டால், கரும்பு விவசாயிகள் மிகவும் பயனடைவர் என்பதில் ஐயமில்லை.
முனைவர் மு.சண்முகநாதன், இணைப் பேராசிரியர், பயிர் இனப்பெருக்கத் துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!