My page - topic 1, topic 2, topic 3

மருத்துவக் குணங்கள் நிறைந்த துளசி!

துளசி

ந்தியர் அனைவரும் அறிந்த புனிதமான தாவரம் துளசி. தாவரங்கள் தமது தனிப்பட்ட குணங்களால், பலவகைகளில் நமக்குப் பயன்படுகின்றன. இவற்றின் அரிய பயன்களை நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தி உள்ளனர்.

தாவரங்களின் தன்மைக்கு ஏற்ப, அவற்றைப் பல பிரிவுகளாக வகைப்படுத்தி உள்ளனர். அவற்றில் மணமூட்டும் தாவரங்கள் ஒரு பிரிவாகும். இவை, மணம் மற்றும் மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளன.

ஆன்மிகத்தோடு இணைந்த துளசி, ஒவ்வொரு வீட்டிலும் புனிதமாக வளர்க்கப்படுகிறது. துளசியின் நெடி, விஷப் பூச்சிகளை, கொசுக்களை விரட்டும். இதன் மணம் சிலவகை நோய்க் கிருமிகளை அழிக்கும். ஆன்மிக நோக்கில் அணியும் துளசி மாலை, சிலவகைத் தொற்று நோய்களைத் தடுக்கும், கிருமிகளை ஒழிக்கும் என்பது, அறிவியல் உண்மை.

வேறு பெயர்கள்

துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ண துளசி, இராமதுளசி எனப் பல பெயர்கள் துளசிக்கு உள்ளன. மேலும் துளசியில், நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்த்துளசி ஆகிய இனங்கள் உள்ளன.

வளரும் தன்மை

துளசியின் தாயகம் இந்தியா. தானாக வளரும் இச்செடி, அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் பரவியுள்ளது. வடிகால் வசதியுள்ள குறுமண், செம்மண், வண்டல் மண் மற்றும் களி கலந்த மணற் பாங்கான இருமண்ணில் நன்கு வளரும்.

மண்ணின் கார அமிலநிலை 6.5-7.5 இருக்க வேண்டும். 25-35 டிகிரி வெப்ப நிலை அவசியம். விதை மற்றும் இளந் தண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். கற்பூர மணமுள்ள இலைகள், கதிராக வளரும் பூங்கொத்துடன் இருக்கும்.

பயன் தரும் பாகங்கள்

துளசியிலை, தண்டு, பூ, வேர் என, அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணமுள்ளவை. துளசியில் லினனுள், தைமால், லினனுள் சல்பேட் ஆகிய வேதிப் பொருள்கள் உள்ளன. துளசியிலை மூலம், சிறந்த மணமுள்ள எண்ணெய் கிடைக்கிறது. இது, வாசனைப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.

மருத்துவப் பயன்கள்

துளசியிலையைத் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு சார்ந்த சிக்கல்கள் வராது. துளசியிலை ஊறிய நீரைத் தொடர்ந்து பருகி வந்தால், நீரிழிவு குணமாகும். செரிக்கும் திறனும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். வாய் நாற்றம் அகலும். துளசியிலை ஊறிய நீரில் குளித்தால் உடலில் நாற்றம் வராது.

துளசியை எலுமிச்சைச் சாறு விட்டு மைபோல் அரைத்து, தோலில் தடவி வந்தால், படையும் சொறியும் காணாமல் போகும். சிறுநீரகச் சிக்கல் உள்ளோர், துளசி விதையை நன்கு அரைத்து உண்டு வரலாம். கூடவே, தேவையான அளவில் நீரையும் பருகி வந்தால் சிக்கல் சரியாகும்.

ஆயுர்வேத மருத்துவ முறையில், காய்ச்சலைத் தடுக்கத் துளசி பயன்படுகிறது. உடலின் பாதுகாப்புக் கட்டமைப்பைச் சீராக்கும் வல்லமை துளசிக்கு உண்டு. எவ்வித வைரஸ் தாக்குதலையும் தடுக்கும். பன்றிக் காய்ச்சலையும் போக்கும்.

துளசியைச் சூரணமாக, கஷாயமாகச் சாப்பிடலாம். இருமல், சளி, காய்ச்சலைப் போக்கும். உடலில் வெப்பத்தை ஏற்படுத்தி, சளியை அகற்றி, உடல் சூட்டைக் குறைக்கும். தொற்று நீக்கியாக, கிருமி நாசினியாகச் செயல்பட்டு, பல்வேறு நோய்களை, பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்.

வியர்வையைப் பெருக்கும். துளசிச் சாற்றில் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளின் சளி, இருமல் குணமாகும். துளசியிலையை நீர்விட்டு அரைத்துப் பூசி வந்தால், உடல் கொப்புளங்கள் எளிதில் குணமாகும்.

இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து, காலை மாலையில் 5 மில்லி வீதம் பருகி வந்தால் நன்கு பசியெடுக்கும். இதயம், கல்லீரல் பலமாகும். தாய்ப்பாலைப் பெருக்கும். இலையைக் கதிருடன் வாட்டி, காலை, மாலையில் 2 துளிச் சாறு வீதம் காதில் விட்டு வந்தால், பத்து நாட்களில் காது மந்தம் தீரும்.

ஐந்து அரிசி எடையில் துளசி விதைச் சூரணத்தைத் தாம்பூலத்துடன் கொள்ள, தாது கட்டும். மழைக் காலத்தில் துளசியிலையை, தேநீர் போலக் காய்ச்சிக் குடித்து வந்தால் மலேரியா, விஷக் காய்ச்சல் போன்றவை அண்டாது.

துளசியிலைக் கஷாயம் தொண்டைப் புண்ணுக்கு நல்ல தீர்வாகும். துளசிச்சாறு, எலுமிச்சைச் சாறு இரண்டையும் சமமாகக் கலந்து, வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து, ஒருமணி நேரம் கழித்துக் குளித்து வந்தால், பேன் தொல்லை அகலும்.

துளசியிலைச் சாறுடன் சிறிதளவு கற்பூரத்தைக் கலந்து, பல் வலியுள்ள இடத்தில் தடவினால் வலி குறையும். துளசிச் சாற்றைத் தடவி வந்தால் வெட்டுக் காயங்கள் விரைவில் குணமாகும். வீடுகளில் துளசியிலைக் கொத்தைக் கட்டி வைப்பது மற்றும் வீட்டைச் சுற்றி, துளசிச் செடிகளை வளர்ப்பதன் மூலம் கொசுக்களை விரட்டலாம்.


முனைவர் ஜெ.செல்வி, முனைவர் தி.உமா மகேஸ்வரி, முனைவர் கி.சாந்தி, உணவியல் மற்றும் சத்தியல் துறை, சமுதாய அறிவியல் கல்லூரி, மதுரை – 625 104.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks