My page - topic 1, topic 2, topic 3

பொன்னாங் கண்ணிக் கீரையின் பயன்கள்!

பொன்னாங் கண்ணி

பொன்னாங் கண்ணியில் நாட்டு இரகம், சீமை இரகம் என உண்டு. இவற்றில் பச்சையாகக் கிடைக்கும் நாட்டுப் பொன்னாங் கண்ணி தான் மருத்துவக் குணங்கள் மிக்கது.

பொன்னாங் கண்ணி தூக்கத்தைத் தூண்டும். மத்திய நரம்பு மண்டலத்தைச் சீராக்கிச் சாந்தமாக்கும். பல்வேறு நரம்பு நோய்களைக் குணமாக்கும். நினைவாற்றலைத் தூண்டும். கண்ணுக்கும் மூளைக்கும் குளிர்ச்சியைத் தரும். தலைவலி, மயக்கத்தைத் தணிக்கும்.

பொன்னாங் கண்ணிச் சாறு, பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை மிக்கது. இரத்த வாந்தியை நிறுத்தும். ஈரலைப் பலப்படுத்தும். மஞ்சள் காமாலைக்கும் இது மருந்தாகும். இக்கீரையைச் சாப்பிடுவதால், எண்ணெய்யில் சேர்த்துக் காய்ச்சி வைத்துக் கொண்டு தலைக்குத் தடவுவதால், தலைமுடி செழுமையாக வளரும்.

இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், கொனேரியா என்னும் பால்வினை நோய் நீங்கும். ஆண்களின் மலட்டுத் தன்மை, இயலாமை அகலும். சர்க்கரை நோயாளிகளின் சத்தான உணவாகிச் சோர்வைப் போக்கும் மருந்தாக வேலை செய்யும்.

தலைவலியை, தலைச் சுற்றலைத் தணிக்கும். நெஞ்சு சளியைக் கரைக்கும். ஆஸ்துமா, நுரையீரல் சிக்கலையும் அகற்றும். மார்பு இறுக்கத்தைப் போக்கும். புண்களை ஆற்றும். இரத்தத்தில் சேரும் கழிவுகளைப் போக்கி, புற்றுநோய் வராமல் தடுக்கும்.

பார்வைத் திறனை அதிகரிக்கும். 27 நாட்கள் பொன்னாங் கண்ணியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பகலிலும் நிலவைப் பார்க்கலாம் என்பது பழமொழி. அந்தளவுக்குப் பார்வையைத் துல்லியமாக்கும்.

பொன்னாங் கண்ணிச் சாறு, நல்லெண்ணெய், நெல்லிக்காய்ச் சாறு, பசும்பால் ஆகியவற்றைச் சமமாக எடுத்து, சிறிதளவு அதிமதுரத்தைப் பாலில் அரைத்துச் சேர்த்துக் காய்ச்சி, மெழுகு பதத்துக்கு வந்ததும் வடிகட்டித் தலையில் தேய்த்து வந்தால், 96 வகையான கண் நோய்கள் தொலைந்து போகுமாம்.

பொன்னாங் கண்ணிக் கீரையை வதக்கி, மிளகையும் உப்பையும் சேர்த்து, கற்ப மருந்தாக ஒரு மண்டலம் சாப்பிட்டால், உடம்பு வனப்பையும், பொன்னிறத்தையும் பெறும். கண்கள் குளிர்ச்சி அடையும். புகைச்சல், ஈரல் நோய்கள் குணமாகும்.


தொகுப்பு: பசுமை

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks