நெல்லிக்காய், இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். எனவே, நீரிழிவு நோயாளிகள் ஒரு தேக்கரண்டி நெல்லிச் சாறுடன், சிறிது பாகற்காய்ச் சாற்றைச் சேர்த்துக் கலந்து குடித்து வருவது நல்லது.
செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர்.
உடலை நலமாக வைத்துக் கொள்வதில் உணவுப் பொருள்களும், பழக்க வழக்கங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, உணவுப் பொருள்களில், காய்கறிகள், பழங்கள் பெரிதும் உதவியாக உள்ளன. அவற்றில் ஒன்று தான் நெல்லிக்காய்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி மிகுதியாக உள்ளது. மலை நெல்லி தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. ஆயுர்வேதத்தில் நெல்லிக்காயின் பயன்பாடு மிகுதி. நெல்லி யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். இது, உயரமான இலையுதிர் மரம். காய் உருண்டையாக, சதை மிக்கதாக, ஆறு பிரிவாகப் பிரிந்து, வெளிரிய பச்சை அல்லது மஞ்சளாக இருக்கும்.
என்றும் குன்றாத இளமையைத் தரும் அமிழ்தம் நெல்லிக்கனி. ஒரு மனிதனின் நலத்துக்கு அடிப்படை, அவனது உடம்பில் ஓடும் சுத்தமான இரத்தம். அந்நியப் பொருள்கள் கலந்து விட்டால், இரத்தம் கெட்டு நோய்கள் உண்டாகும்.
அவற்றைத் தடுக்கும் அல்லது எதிர்க்கும் ஆற்றல் உடலில் குறைவதால், இளமையிலேயே முதுமை வந்து விடுகிறது. உடல் நலத்தில் அக்கறை உள்ள மக்கள், நோய் எதிர்ப்பையும், வனப்பையும் தரும் மூலிகைப் பானங்களை அன்றாடம் குடித்து வருகின்றனர். அவற்றில் கற்றாழைச் சாறு, நெல்லிச்சாறு போன்றவை குறிப்பிடத்தக்கவை.
நூறு கிராம் நெல்லிக்காயில் உள்ள சத்துகள்
புரதம் 0.4 கி., கொழுப்பு 0.5 கி., மாச்சத்து 14 கி., கால்சியம் 15 மி.கி., பாஸ்பரஸ் 21 மி.கி., இரும்பு 1 மி.கி., நியாசின் 0.4 மி.கி., வைட்டமின் பி1 28 மி.கி., வைட்டமின் சி 20 மி.கி., கரிச்சத்து, சுண்ணாம்பு, தாதுப் பொருள்கள், கலோரிகள் 60. மற்ற எந்தப் பழத்திலும் இல்லாத அளவுக்கு, வைட்டமின் சி கூடுதலாக உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம் பழங்களில் உள்ள வைட்டமின் சி உள்ளதாகக் கருதப்படுகிறது.
பயன்கள்
புற்றுநோயைத் தடுக்கும்: நெல்லிக்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட், புற்றுநோயை வரவிடாமல் தடுக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாற்றைக் குடித்து வந்தால், வயிற்றுப்புண் குணமாகும். தீமை தரும் டாக்ஸின்கள் உடலிலிருந்து வெளியேறுவதால், உடல் எடை குறையும்.
நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து, குடலியக்கத்தைச் சீராக்கி, மலச்சிக்கலைத் தடுக்கும். தினமும் ஒரு நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
நெல்லிக்காய், மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்தும். அதிலும், நெல்லிப் பொடியைத் தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இரத்த ஓட்டத்தைச் சீராக்கும்: நெல்லிக்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட், கண்களின் ரெட்டினாவைப் பாதுகாக்கும். இதிலுள்ள வைட்டமின் சி-யால், பார்வை மேம்படும். கண்களில் நீர் வழிதல், கண்ணெரிச்சல், கண்கள் சிவத்தல் தடுக்கப்படும்.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதயத்துக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து, இரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்: நெல்லிக்காய், இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். எனவே, நீரிழிவு நோயாளிகள் ஒரு தேக்கரண்டி நெல்லிச் சாறுடன், சிறிது பாகற்காய்ச் சாற்றைச் சேர்த்துக் கலந்து குடித்து வருவது நல்லது.
உடலில் இன்சுலின் சுரப்பைக் கூட்டும். கல்லீரல் சீராக இயங்க உதவும். இதிலுள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட், உடலில் சேர்ந்துள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரலைப் பாதுகாக்கும்.
இதய தசைகளை வலுவாக்கும்: இரத்த நாளங்கள் மற்றும் தமனிகள் சுத்தமாக இருக்க உதவும். இதிலுள்ள இரும்புச்சத்து, புதிய இரத்தச் செல்களை உருவாக்கி, மாரடைப்பு, பக்கவாதத்தை வரவிடாமல் தடுக்கும்.
முதுமையைத் தடுக்கும்: நெல்லிக்காய்ச் சாற்றைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் குடித்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுகள் வெளியேறும்.
இளமைக்குக் காரணமான கொலாஜன் செல்களின் உற்பத்தி மிகும். இதனால் சருமம் சுருக்கம் நீங்கி இளமையுடன் இருக்கும். சருமத்தில் கருமையான திட்டுகள் இருந்தால், வயதான தோற்றத்தைத் தரும். இதைத் தவிர்க்க, தினமும் நெல்லிச் சாற்றைப் பருக வேண்டும்.
அழகான உடல்: தினமும் உடற் பயிற்சியுடன், நெல்லிக்காய்ச் சாற்றையும் பருகி வந்தால், உடலின் மெட்டபாலிசம் மிகுந்து, கொழுப்புக் கரைந்து, உடல் எடை குறையும்.
தினமும் ஒரு டம்ளர் நெல்லிச் சாற்றைக் குடித்து வந்தால், அதிலுள்ள வைட்டமின் சி, முடியின் வலிமையைக் கூட்டி, முடி வெடிப்பு, நரைமுடி, பொலிவிழந்த முடி போன்றவற்றை மாற்றி, கூந்தலை வளமாக்கும். பொடுகுத் தொல்லையைப் போக்கும்.
இஞ்சி – நெல்லிச்சாறு: இரண்டு பெரிய நெல்லிக் காய்களை நறுக்கிக் கொள்ள வேண்டும். தோல் நீக்கிய சிறிய இஞ்சித் துண்டைத் துருவ வேண்டும். இவற்றுடன், அரைக் குவளை நீரைச் சேர்த்து மின்னம்மியில் அரைக்க வேண்டும்.
பிறகு, இரண்டு தேக்கரண்டி சர்க்கரை, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் தேக்கரண்டி சீரகத்தூள், ஒரு தம்ளர் நீர் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து வடிகட்டிக் குடிக்கலாம். இதைத் தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.
நெல்லிக்காய் சாறுடன் வெந்தயப் பொடியைக் கலந்து குடித்து வந்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஒரு தேக்கரண்டி வெந்தயப் பொடியை, மூன்று தேக்கரண்டி நெல்லிச் சாறுடன் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இதில் மிகுந்துள்ள வைட்டமின் சி, இரத்தச் சர்க்கரையைக் குறைக்கும் என்பதால், சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம். புரதத்தை உறிஞ்சும் சக்தியை உடம்புக்கு அளிக்கும் வல்லமை, இந்தப் பானத்துக்கு இருப்பதால், உடலின் மெட்டபாலிச அளவு கூடி, உடல் எடை குறையும்.
இந்தப் பானத்தில் உள்ள வைட்டமின்கள், ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள், இதய தசைகளின் வலிமையைக் கூட்டி, இதய நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும். இதிலுள்ள வைட்டமின் சி, உடல் செல்களுக்கு ஊட்டமளித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
பித்தப்பை மற்றும் கல்லீரலில் கொலஸ்ட்ரால் இறுக்கமாவதைக் குறைத்து, பித்தக் கற்கள் உருவாவதைத் தடுக்கும். இந்தப் பானத்தில் உள்ள பல்வேறு சத்துகள், பார்வை நரம்புகளுக்கு ஊட்டமளித்து, கண் பார்வையை மேம்படுத்தும்.
இப்படி, எண்ணற்ற நன்மைகளைத் தரும் நெல்லிக்காயை, நமது அன்றாட உணவில் சேர்த்துப் பயனடைவோம்.
சு.சுபாஷினி, சு.நிவேதிதா, டி.பாஸ்கரன், உணவு மற்றும் பால்வளத் தொழில் நுட்பக் கல்லூரி, கோடுவெளி, சென்னை – 600 052
சந்தேகமா? கேளுங்கள்!