கேள்வி:
மண்வள மேம்பாடு குறித்துக் கூறுங்கள்.
-சரவணன், மதுரை.
பதில்:
பல பயிர்களை சாகுபடி செய்து மண் வளத்தைக் கூட்டலாம். (தானிய வகையில், கம்பு அரைக்கிலோ, சோளம் 1 கிலோ, தினை கால் கிலோ, சாமை கால் கிலோ,
எண்ணெய் வித்துகளில் நிலக்கடலை 2 கிலோ, எள் அரைக்கிலோ, ஆமணக்கு 2 கிலோ, சூரியகாந்தி 2 கிலோ,
பயறு வகையில், உளுந்து 1 கிலோ, பாசிப்பயறு 1 கிலோ, கொண்டைக் கடலை 1 கிலோ, தட்டைப் பயறு 1 கிலோ,
உரப் பயிர்களில், தக்கைப்பூண்டு 2 கிலோ, சணப்பு 2 கிலோ, கொள்ளு 1 கிலோ, நரிப்பயறு அரைக்கிலோ,
நறுமணப் பயிர்களில், கொத்தமல்லி 1 கிலோ, கடுகு அரைக்கிலோ, வெந்தயம் கால் கிலோ, சீரகம் கால் கிலோ வீதம் எடுத்து, இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து விதைத்து, 50-60 நாட்களில் மடக்கி உழுதால் மண் வளமாகும்.
ஆடு மாடுகளின் சாணம் எவ்வளவு வேண்டுமானாலும் போடலாம். விவசாயக் கழிவுகளை நிலத்தில் மட்க வைக்க வேண்டும். பயறு வகைப் பயிர்களைப் பயிரிடலாம்.
பஞ்சகவ்யா, ஜீவாமிர்தக் கரைசலை, பாசன நீரில் கலந்து விடலாம். நெல் சாகுபடியில் பசுந்தாள் உரத்தை அவசியம் பயன்படுத்த வேண்டும். இயற்கை உரங்கள் எல்லாமே, மண்ணை வளப்படுத்தும் பொருள்கள் தான்.
கேள்வி:
தென்னந் தோப்பில் ஊடுபயிர் என்ன செய்யலாம். அதிகபட்சமாக 24 அடி இடைவெளி. கோடையில் தண்ணீர் TDS 1500 வரை வரும். மற்ற நாட்களில் குளத்தில் எடுப்போம். உள்ளே பாக்கு, மிளகு, ஜாதிக்காய் சாத்தியமா?
-பொறிஞர் கே.ஏ.மணிகண்டன், ஈரோடு
பதில்:
உங்களுக்குத் தேவையான விளக்கங்கள் கீழேயுள்ள கட்டுரையில் உள்ளன.
கேள்வி:
ஒரு மாட்டுப் பண்ணை தொடங்க வேண்டும் என்றால், எந்த மாதிரியான இடத்தைத் தேர்வு செய்வது? என்னென்ன சாப்பிடக் கொடுக்க வேண்டும் மற்றும் எப்போது எல்லாம் மருத்துவரை அணுக வேண்டும் என்று கூறுங்கள்.
-கிருபா, எம்.வி.குப்பம்.
பதில்:
உங்களுக்கு வேண்டிய தகவல்களை இங்கே முழுமையாகச் சொல்ல முடியாது. ஏனெனில், அது பெரிய கடலைப் போன்றது. www.pachaiboomi.in இணைய தளத்தில் உங்களுக்குத் தேவையான அத்தனை தகவல்களும் உள்ளன. அவற்றைப் படியுங்கள்.
மேலும், நீங்கள் கறவை மாட்டுப் பண்ணை அமைக்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகி, பால்பண்ணைப் பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கேள்வி:
நான் சிறுதானியம் பயிரிட ஆவலாய் உள்ளேன். பத்து ஏக்கர் மானாவாரி நிலம் உள்ளது. அதற்கான பயிற்சியைப் பெற விரும்புகின்றேன். எனக்கு உதவுங்கள்.
-இராஜமாணிக்கம், முகையூர், விழுப்புரம் மாவட்டம்.
பதில்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் அத்தியந்தல் என்னும் ஊரில் சிறுதானிய மகத்துவ மையம் உள்ளது. அங்கே, சிறுதானிய சாகுபடி மற்றும் அதைச் சார்ந்த பயிற்சிகளை விவசாயிகள் பெறலாம். எனவே, அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
முகவரி: பேராசிரியர் மற்றும் தலைவர், சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல், திருவண்ணாமலை மாவட்டம். தொலைபேசி; 04175 298001.
கேள்வி:
மாட்டின் வலது பக்க வயிறு இடது பக்க வயிற்றைக் காட்டிலும் பெரிதாக உள்ளது. காரணம் தெரிவிக்கவும்.
-இராஜகண்ணன், சேந்தமங்கலம்.
பதில்:
உடனே உங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்கு மாட்டை ஓட்டிச் சென்று, மருத்துவரிடம் காட்டி சிகிச்சை செய்யப் பாருங்கள்.
கேள்வி:
கோழிகளுக்கு வரும் நோய்களைத் தடுக்க மருந்து இருந்தால் சொல்லுங்கள்.
-வெங்கடேஷ், சங்கம்பட்டி.
பதில்:
நாட்டுக் கோழிகளை முக்கியமாகத் தாக்குவது, வெள்ளைக் கழிச்சல் என்னும் கொக்கு நோவு தான். இந்த நோய் தாக்கிய கோழிகள் பிழைப்பது கடினம். ஆனால், இதற்குத் தடுப்பு மருந்து உள்ளது. உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவ மனையை அணுகுங்கள். கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவமும் உள்ளது.
கேள்வி:
கறிக்காடை வளர்ப்பில் இலாபம் கிடைக்குமா அல்லது முட்டைக் காடை வளர்ப்பில் இலாபம் கிடைக்குமா?
-மணிகண்டன், தெற்குப் பொய்கை நல்லூர்.
பதில்:
கறிக்காடைகளை ஆறு வாரத்தில் விற்றுக் காசாக்கி விடலாம். ஆனால், முட்டைக் காடை ஆறு வாரத்துக்குப் பிறகு தான் முட்டை வைக்கத் தொடங்கும். இதற்குப் பிறகு தான் வருமானம் வரும். அதற்காகக் காத்திருக்க வேண்டும். அதனால், சிறியளவில் காடைகளை வளர்ப்பதாக இருந்தால், கறிக்காடைகளை வளர்ப்பது நல்லதாகப் படுகிறது.
மேலும், காடை வளர்ப்பைப் பற்றி அறிய கீழேயுள்ள கட்டுரையைப் படியுங்கள்.
கேள்வி:
காய்கறிகளை உலர்த்த உதவும் சூரிய மின் உலர்த்தி, விவசாயிகளுக்கு மானியத்தில் கிடைக்குமா?
-கருணாநிதி, ஆவடையார்பட்டு.
பதில்:
கிடைக்கும். உங்கள் பகுதியில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகம் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிக் கேட்டால், முழு விவரம் கிடைக்கும்.
கேள்வி:
பால் பண்ணை அமைக்கும் விவரம் வேண்டும்.
-கே.வேல்முருகன், தஞ்சாவூர்.
பதில்:
உங்கள் கேள்விக்கான தகவல்கள், www.pachaiboomi.in இணையதளத்தில் உள்ளன. அவற்றைப் படியுங்கள். ஏனெனில், இந்த இடத்தில் அவை அனைத்தையும் முழுமையாகச் சொல்ல முடியாது.
மேலும், பால் பண்ணை அமைக்கும் நோக்கம் இருந்தால், தஞ்சாவூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகி, பயிற்சியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
கேள்வி:
பச்சை வாழைப் பழத்தோலை ஆட்டுக்கு உணவாகத் தரலாமா? காய வைத்துத் தரலாமா?
-மு.வேலுச்சாமி, திருப்பூர்.
பதில்:
காய வைத்துத் தர வேண்டியது இல்லை. பச்சையாகவே தரலாம். முன்பெல்லாம், ஊர்களில் பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள், கடைக்கு முன், ஒரு ஆட்டைக் கட்டி வைத்திருப்பார்கள்.
அந்தக் கடையில் வாழைப் பழத்தை வாங்கிச் சாப்பிடுவோர், போடும் தோலையே தீனியாகக் கொடுத்து, அந்த ஆட்டை நன்றாக வளர்த்து விடுவார்கள். அந்த ஆடு 2-3 குட்டிகளை ஈனும். அதனால், வாழைப்பழத் தோலை, பச்சையாகவே ஆடுகளுக்குக் கொடுங்கள். தவறேதும் இல்லை.
கேள்வி:
ஊறுகாய் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அல்லது வினிகர் பயன்படுத்தினால் 1 கிலோ ஊறுகாயில் எவ்வளவு சேர்க்க வேண்டும்?
-கார்த்திக், போளூர், திருவண்ணாமலை.
பதில்:
ஊறுகாய் கெடாமல் இருக்க, பீங்கான் அல்லது மண் பாத்திரத்தில் ஊறுகாயை வைக்க வேண்டும். ஊறுகாயை இடுவதற்கு முன், ஊறுகாய்ப் பாத்திரத்தை வினிகரால் சுத்தம் செய்ய வேண்டும்.
ஊறுகாயைக் கையால் எடுக்கக் கூடாது. மரக்கரண்டியில் எடுத்தால் நல்லது. ஊறுகாய் உள்ள பாத்திரத்தின் வாயைத் துணியால் மூடி வைக்க வேண்டும். ஈரத்தன்மை அதிகமாக இருந்தால் ஊறுகாய் கெட்டுப் போகும்.
எலுமிச்சை விதைகளை நீக்கி விட்டு ஊறுகாய் போட்டால் பல நாட்கள் கெடாமல் இருக்கும். அதைப் போல, முற்றிய மாங்காயை ஊறுகாயாகப் போட்டால் பல நாட்கள் நன்றாக இருக்கும். ஆனால், பிஞ்சு மாவடுக்களை ஊறுகாயாகப் போட்டால், நெடுநாட்கள் தாங்காது.
ஊறுகாயில் வினிகரைச் சேர்க்கத் தேவையில்லை.
ஆலோசனை: முனைவர் விமலாராணி, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் நிலையம், கள்ளக்குறிச்சி.
சந்தேகமா? கேளுங்கள்!