தென்னையின் வளர்ச்சி, நீடித்த மகசூல் மற்றும் நிலவளத்துக்கு, 16 சத்துகள் தேவை. இவற்றுள், தழை, மணி, சாம்பல் ஆகிய பேரூட்டங்கள் அதிகமாகத் தேவை. இவற்றைத் தவிர, கால்சியம், மக்னீசியம், கந்தகம் போன்ற இரண்டாம் நிலைச் சத்துகள்;
துத்தநாகம், இரும்பு, போரான், மாலிப்டினம், கார்பன், மாங்கனீசு, குளோரின் ஆகிய நுண் சத்துகள் குறைந்தளவில் தேவை. இவற்றில் ஒன்றிரண்டு சத்துகள் குறைந்தாலும், தென்னையின் வளர்ச்சியும் உற்பத்தியும் பாதிக்கும். எனவே, தென்னைக்குச் சரிவிகிதச் சத்துகள் அவசியமாகும்.
நட்டு ஆறு மாதத்தில் இருந்து தென்னைக்கு உரமிட வேண்டும். இரசாயன உரங்களுடன், தொழுவுரம், பசுந்தாள் உரம், மட்கிய ஆலை மற்றும் தென்னை நார்க் கழிவை இட வேண்டும்.
இவை, மண்ணின் நீர்ப்பிடிப்புத் திறன் மற்றும் சத்துகளை, பயிர்கள் ஈர்க்கும் திறனைக் கூட்டும். வளர்ந்த மரத்துக்கு ஆண்டுக்கு 540 கிராம் தழைச்சத்து, 250 கிராம் மணிச்சத்து, 820 கிராம் சாம்பல் சத்து தேவை.
உரமிடும் காலம்
தென்னையின் வளர்ச்சியிலும் மகசூலிலும், தழை மற்றும் சாம்பல் சத்துக்குப் பெரும் பங்குண்டு. தழைச்சத்து பெண் பூக்கள் உற்பத்திக்கும், சாம்பல் சத்து குரும்பை உதிர்வைத் தடுக்கவும், கொப்பரை மற்றும் எண்ணெய் கூடவும் உதவும். மண்ணாய்வின்படி உரமிட்டால் உரச்செலவு குறையும்.
ஆடி மற்றும் மார்கழியில் உரமிட வேண்டும். உரத்தைப் பிரித்து இட்டால் சத்துகள் வீணாவது குறையும். ஆனால், இதற்கு அதிகச் செலவாகும். வேர்களும் இருமுறை வெட்டப்பட்டால் தென்னை பாதிக்கப்படும்.
எனவே, ஓராண்டுக்கான உரத்தை, ஏதாவது ஒரு பருவத்தில் இடலாம். இரசாயன உரங்களைத் தொழுவுரத்தில் கலந்து இட்டால், சத்துகள் வீணாவது குறையும்.
உர அளவு: நெட்டை இரகங்கள்
முதல் ஆண்டில்: தொழுவுரம், பசுந்தாள் உரம் 10 கிலோ, யூரியா 325 கிராம், சூப்பர் பாஸ்பேட் 500 கிராம், பொட்டாஷ் 500 கிராம், வேப்பம் புண்ணாக்கு 1.5 கிலோ.
இரண்டாம் ஆண்டில்: தொழுவுரம், பசுந்தாள் உரம் 20 கிலோ, யூரியா 650 கிராம், சூப்பர் பாஸ்பேட் 1,000 கிராம், பொட்டாஷ் 1,000 கிராம், வேப்பம் புண்ணாக்கு 2.5 கிலோ.
மூன்றாம் ஆண்டில்: தொழுவுரம், பசுந்தாள் உரம் 30 கிலோ, யூரியா 975 கிராம், சூப்பர் பாஸ்பேட் 1,500 கிராம், பொட்டாஷ் 1,500 கிராம், வேப்பம் புண்ணாக்கு 3.750 கிலோ.
நான்காம் ஆண்டில்: தொழுவுரம், பசுந்தாள் உரம் 40 கிலோ, யூரியா 1.300 கிராம், சூப்பர் பாஸ்பேட் 2,000 கிராம், பொட்டாஷ் 750 கிராம், வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ.
ஐந்தாம் ஆண்டில்: தொழுவுரம், பசுந்தாள் உரம் 50 கிலோ, யூரியா 1.300 கிராம், சூப்பர் பாஸ்பேட் 2,000 கிராம், பொட்டாஷ் 2,000 கிராம், வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ.
வீரிய ஒட்டு இரகங்கள்
முதல் ஆண்டில்: தொழுவுரம், பசுந்தாள் உரம் 15 கிலோ, யூரியா 500 கிராம், சூப்பர் பாஸ்பேட் 375 கிராம், பொட்டாஷ் 750 கிராம், வேப்பம் புண்ணாக்கு 1.5 கிலோ.
இரண்டம் ஆண்டில்: தொழுவுரம், பசுந்தாள் உரம் 30 கிலோ, யூரியா 1,000 கிராம், சூப்பர் பாஸ்பேட் 750 கிராம், பொட்டாஷ் 1,500 கிராம், வேப்பம் புண்ணாக்கு 2.5 கிலோ.
மூன்றாம் ஆண்டில்: தொழுவுரம், பசுந்தாள் உரம் 45 கிலோ, யூரியா 1,500 கிராம், சூப்பர் பாஸ்பேட் 1,150 கிராம், பொட்டாஷ் 2,250 கிராம், வேப்பம் புண்ணாக்கு 3.75 கிலோ.
நான்காம் ஆண்டில்: தொழுவுரம், பசுந்தாள் உரம் 60 கிலோ, யூரியா 2,250 கிராம், சூப்பர் பாஸ்பேட் 1,500 கிராம், பொட்டாஷ் 3,000 கிராம், வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ.
ஐந்தாம் ஆண்டில்: தொழுவுரம், பசுந்தாள் உரம் 60 கிலோ, யூரியா 2,250 கிராம், சூப்பர் பாஸ்பேட் 1,500 கிராம், பொட்டாஷ் 3,000 கிராம், வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ.
தென்னையில் நீடித்த மகசூல் மற்றும் மண்வளத்தைக் காக்க, 50 சதம் தழைச்சத்தை அங்கக உரமாகவும், 50 சதம் தழைச்சத்தை, இரசாயன உரமாகவும் இடலாம்.
உரமிடும் முறைகள்
வட்டப்பாத்தி: இம்முறையில், முதலாண்டில் தென்னையின் தூரிலிருந்து 60 செ.மீ., இரண்டாம் ஆண்டில் 90 செ.மீ., மூன்றாம் ஆண்டில் 120 செ.மீ., நான்காம் ஆண்டில் 150 செ.மீ., ஐந்தாம் ஆண்டிலிருந்து 180 செ.மீ. ஆரமுள்ள வட்டப் பாத்திகளை அமைத்து, உரத்தைப் பரவலாக இட்டுக் கொத்தி விட்டு நீரைப் பாய்ச்ச வேண்டும். தென்னையின் 90 சத வேர்கள், 180 செ.மீ. ஆரமுள்ள வட்டத்திலேயே இருப்பதால், இடும் சத்துகளை நன்றாக எடுத்துக் கொள்ளும்.
அரைவட்டப் பாத்தி: இம்முறையில், மரத்தில் இருந்து 180 செ.மீ. ஆரத்தில் 30 செ.மீ. அகல, ஆழத்தில் அரைவட்டப் பாத்தியை அமைத்து, தேவையான உரங்களை இட்டு நீரைக் கட்ட வேண்டும். ஆண்டுதோறும் எதிரெதிர்த் திசையில் அரைவட்டப் பாத்திகளை அமைத்து உரமிட வேண்டும்.
மானாவாரித் தோப்புகளில் மழைக் காலத்தில் உரத்தை இட வேண்டும். ஓராண்டில் ஒரு மரம், 35-40 மட்டைகள் மற்றும் 15 குலைகளை உற்பத்தி செய்ய, ஆண்டுதோறும் உரமிடுதல் அவசியம்.
அங்கக உரம்
பசுந்தாள் உரம்: மழைக் காலத்தில், சணப்பு, தக்கைப் பூண்டு, பாசிப்பயறு, தட்டைப் பயறு, கலப்பக் கோணியம் ஆகியவற்றில் ஒன்றை, வட்டப் பாத்திகளில், 25-35 கிராம் வீதம் விதைத்து, பூக்கும் பருவத்தில் மடக்கிக் கொத்தி விட்டு நீரைக் கட்டலாம். இதனால் மரத்துக்கு 10-15 கிலோ வீதம் பசுந்தாள் உரம் கிடைக்கும்.
இப்படி, மூன்று மாதத்துக்கு ஒருமுறை செய்தால், தனியாக இயற்கை எரு தேவையில்லை. இதனால், நிலத்தில் அங்ககப் பொருள்களின் அளவு உயர்ந்து, நீர்ப்பிடிப்பு மற்றும் சத்துகளை ஈர்க்கும் திறனும் மண்வளமும் மேம்படும்.
தென்னை நார்க்கழிவு: மட்கிய தென்னை நார்க் கழிவை இட்டால், மண்ணில் செல்லுலோஸ் என்னும் கரிமப் பொருள் கூடும். இதனால், மண்ணின் பௌதிகக் குணங்கள் மேம்படும்; நீர்ப்பிடிப்புத் திறன் கூடுவதால், வறட்சியைத் தாங்கித் தென்னை வளரும்; மண் பொலபொலப்பாகிக் காற்றோட்டம் மிகும்.
மேலும், அமிலத் தன்மையுள்ள தென்னை நார்க் கழிவு, நிலத்தின் களர் உவர் தன்மையை மாற்றும். களரில்லா நிலத்திலும் நல்ல பலனைத் தரும். மண்வளத்தைக் காக்கும் வகையில், நுண்ணுயிர்களின் செயல் திறனை மேம்படுத்தும். களைகள் வளர்வதைக் கட்டுப்படுத்தும்.
குளோரின்: தென்னைக்கு குளோரின் முக்கியமாகும். இதை, குளோரைடு உருவில் கிரகித்துக் கொள்ளும். கடலோரத் தென்னைக்கு, கடல் காற்றின் மூலம் குளோரின் கிடைத்து விடும். கடினச் செம்மண் நிலத்தில் இருக்கும் தென்னை மரங்களுக்கு, 2 கிலோ வீதம் சாப்பாட்டு உப்பை இடலாம். ஆனால், களர் உவர் நிலங்களில் இடக்கூடாது.
குளோரின் பற்றாக்குறை இருந்தால், இலைகள் மஞ்சளாக, ஆரஞ்சுப் புள்ளிகளுடன் இருக்கும். வேர் மற்றும் குரும்பை உற்பத்தியை, குளோரின் கூட்டுவதால், காய்ப்பு மிகுந்து, கொப்பரை மகசூல் 10 சதம் அதிகமாகும்.
நுண் சத்துகளின் பங்கு
போரான்: இது, சர்க்கரைப் பொருள்களை ஓரிடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது. தென்னையின் சாறு ஓட்டம் நடக்கவும், தழைச்சத்து மற்றும் கார்போ ஹைட்ரேட்டை, தென்னையில் சேமிக்கவும், சுண்ணாம்புச் சத்து பயிருக்குக் கிடைக்கவும் உதவுகிறது.
இலையின் உலர் எடையில் இது, 10 பிபிஎம் அளவுக்குக் கீழ் குறைந்தால் பற்றாக்குறை அறிகுறிகள் தோன்றும். இத்துடன் சாம்பல் சத்தும் குறைந்தால், ஒல்லிக் காய்கள் நிறைய உண்டாகும். ஓலைகளும் சரிவரப் பிரியாமல் நுனி வளைந்து இருக்கும். குலைகளில் தேங்காய்கள் சிறிதும் பெரிதுமாக இருக்கும்.
துத்தநாகம்: இது, பச்சையம் மற்றும் கார்போஹைட்ரேட் உற்பத்திக்கும், பயிர் ஊக்கியான இன்டோல் அசிட்டிக் அமில உற்பத்திக்கும் அவசியம். துத்தநாகக் குறையிருந்தால், மட்டைகள் முரண்பட்டு நெருக்கமாக இருக்கும். இலைகள் சிறுத்தும், குறுகியும், கொத்தாகவும், பச்சையற்றும் இருக்கும். குரும்பைகள் அதிகமாக உதிரும்.
இரும்பு: இது, ஓலைகள் உணவைத் தயாரிக்கவும், தாவர உயிரணுக்கள் சுவாசிக்கவும் அவசியம். சுண்ணாம்பு மிகுந்த நிலங்களில் இது குறைவாக இருக்கும். இதனால், ஓலைகள் பசுமை குறைந்தும், மட்டைகள் மஞ்சள் நிறத்தில் கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டும் இருக்கும்.
மாங்கனீஸ்: இது, நொதிகள் மற்றும் புரத உற்பத்திக்கு, தழைச்சத்தைச் சேமிக்க, பயிர்கள் சுவாசிக்க மற்றும் திரட்சியான பருப்பு உற்பத்திக்குத் தேவை. இது குறைந்தால் பசுமைச் சோகை ஏற்படும். ஓலை நரம்புகளின் இடைப்பகுதி மஞ்சளாக மாறும். இது, இளந் தளிர்களில் தெளிவாகத் தெரியும்.
தாமிரம்: இது, நொதிகள் உற்பத்திக்கு, சுவாசத்துக்கு, உணவுத் தயாரிப்புக்கு, குருத்து வளர்ச்சிக்கு, ஓலைகள் விரிவதற்கு அவசியம். கருவுறவும் தாமிரம் தேவை. இது குறைந்தால், குருத்துகள் விரியாமல் கருகும். மட்டைகளும் சீராக இருக்காது.
மாலிப்டினம்: இது, நொதிப் பொருள்கள் மற்றும் புரதத் தயாரிப்புக்குத் தேவை. அமில நிலங்களில் இது குறைவாக இருக்கும். மரத்தின் வளர்ச்சி பாதிக்கும். ஓலைகள் வெளிர் மஞ்சளாக இருக்கும்.
நுண்ணுரக் குறைக்கான காரணங்கள்
களர், உவர் நிலங்கள். அங்ககச் சத்துக் குறைந்த, மணற்சாரி மானாவாரி நிலங்கள். போதிய பராமரிப்பற்ற நிலங்கள். சரிவிகிதப் பயிர் உணவைக் கையாளாத சூழல். நீரினால் சத்துகள் அடித்துச் செல்லப்படுதல். இயற்கை எருவை இடாமல், தொடர்ந்து இரசாயன உரங்களை மட்டுமே இடுதல்.
குறைகளைக் களைதல்
மண்ணாய்வு செய்து நுண் சத்துகளின் தேவைக்கேற்ப உரமிடுதல். முறையான பராமரிப்பு, போதிய வடிகால் வசதி மூலம் நிலத்திலுள்ள நுண் சத்துகளைத் தென்னைக்குக் கிடைக்கச் செய்தல். பசுந்தாள் உரப் பயிர்களை வளர்த்து, மண்ணின் அங்கக வளத்தை அதிகரித்தல்.
இரசாயன உரங்களுடன் தொழுவுரம் மற்றும் கம்போஸ்ட்டை இடுதல். வளர்ந்த மரங்களுக்கு, துத்தநாக சல்பேட் 200 கிராம், போராக்ஸ் 100 கிராம், காப்பர் சல்பேட் 50 கிராம், மாங்கனீஸ் சல்பேட் 100 கிராம், சோடியம் மாலிப்டேட் 10 கிராம் அடங்கிய நுண்ணுரக் கலவையை, மூன்று ஆண்டுக்கு ஒருமுறையாவது இடுதல்.
சாகுபடியில் உள்ள சிக்கல்கள்
தென்னையில் உருவாகும் பெண் பூக்களில் 30 சதம் மட்டுமே காய்களாகும். இது, நல்ல பராமரிப்புள்ள தோப்புகளில் மட்டுமே சாத்தியம். ஏனைய தோப்புகளில் காய்ப்புத் திறன் மேலும் குறையும். தென்னை வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகளைச் சரியான நேரத்தில் அறிந்து, அவற்றைக் களையா விட்டால், வளர்ச்சியும் மகசூலும் பாதிக்கப்படும்.
குரும்பை உதிர்தல்
இது, பலவிதக் காரணங்களால் ஏற்படுகிறது. பாரம்பரியம், மண்ணின் அதிக உவர் களர் தன்மை, கடும் வறட்சி, நீர்த் தேங்கியிருத்தல், சத்தற்ற நிலம், மகரந்தச் சேர்க்கைக் குறை, பயிர்வினை ஊக்கிக் குறை மற்றும் பூச்சி, நோய் போன்றவற்றால் குரும்பைகள் உதிரும்.
இளம் மரங்களில் குரும்பை கொட்டுதல் தவிர்க்க இயலாத பாரம்பரியப் பண்பாகும். இது, காலப்போக்கில் தானாகவே சரியாகி விடும்.
பாரம்பரியம்: சில மரங்களில் பாளை வெடிக்கத் தொடங்கியது முதல் எல்லாக் குரும்பைகளும் உதிர்ந்து கொண்டே இருக்கும். இத்தகைய மரங்களை அகற்றி விட வேண்டும்.
அதிக உவர், களர் தன்மை: மண்ணில் அமிலத் தன்மை 5க்குக் குறைவாக அல்லது காரத் தன்மை 8க்கு மேலாக இருந்தால் குரும்பைகள் கொட்டும். எனவே, அமிலத் தன்மை மிகுந்த நிலத்தில் சுண்ணாம்பையும், காரத்தன்மை மிகுந்த நிலத்தில் ஜிப்சத்தையும் இட வேண்டும். சுண்ணாம்பு, ஜிப்சத்தை எவ்வளவு இடுவது என்பதை மண்ணாய்வு மூலம் அறியலாம்.
பாசனம்: தென்னைக்கு நீர் எவ்வளவு முக்கியமோ, அதைப்போல வடிகால் வசதியும் அவசியம். வடிகால் வசதியற்ற மண்ணில் வேர்களுக்குப் போதிய காற்றோட்டம் கிடைக்காது. இதனால், பயிருக்கு வேண்டிய சத்துகளை, வேர்களால் கிரகிக்க முடியாமல் போவதால், தாவர உணவுத் தயாரிப்பும் தடைபடும்.
எனவே, இளம் கன்றுகளில் வளர்ச்சிக் குறைந்து இலைகள் மஞ்சளாக மாறும். வளர்ந்த மரங்களில் குரும்பைகளும், இளங் காய்களும் அதிகமாக உதிரும். ஆகவே, இதைச் சரி செய்ய, நல்ல வடிகால் வசதி அவசியம்.
கடும் வறட்சி அல்லது பாசனப் பராமரிப்பு இல்லாத தென்னை மரங்களில் குரும்பைகள் அதிகமாக இருக்காது. மட்டைகள் தொங்கும். இதைச் சரி செய்ய, மழைக் காலத்தில் தோப்புகளில் தென்னை மட்டைகளைப் புதைத்தும், தென்னை நார்க் கழிவை இட்டும், மழைநீரை ஈர்த்து வைக்கலாம்.
இதனால், கோடையில் குரும்பைகள் உதிர்வது வெகுவாகக் குறையும். மண்ணின் தன்மைக்கு ஏற்ப, பத்து நாட்களுக்கு ஒருமுறை நீரைப் பாய்ச்சலாம்.
சத்துக்குறை: போதிய அளவில் பயிருக்கு உணவு கிடைக்காத போது, குரும்பைகள் உதிரும். சரிவிகிதச் சத்துகளை அளித்தால் இக்குறையைச் சரி செய்யலாம்.
மண்ணாய்வு வசதி இல்லையெனில், ஒரு மரத்துக்கு, யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 2 கிலோ, மட்கிய 50 கிலோ தொழுவுரம் வீதம் ஆண்டுதோறும் இட வேண்டும்.
மேலும், 40 மில்லி தென்னை டானிக்கை, 160 மில்லி நீரில் கலந்து, ஆறு மாதத்துக்கு ஒருமுறை, வேர் மூலம் செலுத்தினால், குரும்பைப் பிடிப்பு அதிகமாகும்.
மகரந்தச் சேர்க்கைக் குறைவு: காற்று மற்றும் தேனீக்களால் ஏற்படும் அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் தென்னை கருவுறுகிறது. இது, போதியளவில் நடக்காத போது, அதிக மழை மற்றும் காற்றினால் பெண் பூக்கள் குரும்பைகளாக உதிரும். இதைச் சரி செய்ய, ஏக்கருக்கு மூன்று தேனீப் பெட்டிகள் வீதம், தென்னந் தோப்பில் வைத்துத் தேனீக்களை வளர்க்கலாம்.
பயிர் வினையூக்கிகள்: குரும்பைகளின் வளர்ச்சிக்குப் பயிர்வினை ஊக்கிகள் தேவை. இவற்றின் உற்பத்திக் குறைந்தால் குரும்பைகள் அதிகமாக உதிரும். இதைத் தவிர்க்க, பிளானோபிக்சை, பாளைகள் வெடித்து ஒரு மாதம் கழித்து, ஒரு லிட்டர் நீருக்கு அரை மில்லி வீதம் கலந்து பாளைகளில் தெளிக்கலாம்.
பூச்சிகள், நோய்கள்: பாளை வெடித்துக் குரும்பைகள் கருவுறும் போது, சாற்றை உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் பூசண நோய்கள் தாக்கலாம். இவற்றைத் தடுத்து விட்டால் குரும்பைகள் உதிராது.
ஒல்லிக்காய்
தேங்காய் உற்பத்தியில் 3 சதம் வரை ஒல்லிக் காய்கள் இருக்கலாம். வீரிய ஒட்டு இரகங்களில் 6 சதம் வரை இருக்கும். கோடையில் ஒல்லிக் காய்கள் அதிகமாக இருக்கும். சத்துப் பராமரிப்பற்ற மற்றும் மானாவாரித் தோப்புகளில் 10 சதம் வரை ஒல்லிக் காய்கள் இருக்கும்.
இது, பருப்பற்ற சிரட்டையாக அல்லது முழுதும் நார்ப்பகுதியாக அல்லது பாதிப் பருப்புடன் இருக்கும். சிரட்டை வெடித்து, பூசணத்தால் தாக்கப்பட்டு அழுகிக் கறுப்பாகவும் இருக்கும்.
சில மரங்களில் நுனிப் பிளந்த நிலையில் காய்கள் கீழே உதிரும். அல்லது சிரட்டை பிளந்திருக்கும். சில மரங்களில் மரபுக் குணத்தால் தொடக்கம் முதலே ஒல்லிக் காய்கள் காய்க்கும். இவ்வகை மரங்களை வெட்டிவிட வேண்டும்.
மண்ணின் சத்துக்குறை தான் ஒல்லிக்காய் உருவாகக் காரணம். தேங்காயில் பருப்பு உண்டாகி வளர, சாம்பல் சத்தும், போராக்சும் தேவை. முறையான உரங்களுடன் கூடுதலாக 2 கிலோ பொட்டாஷ் மற்றும் 200 கிராம் போராக்சை, தொடர்ந்து மூன்று ஆண்டுக்கு இட்டால், ஒல்லிக் காய்களைக் கணிசமாகக் குறைக்கலாம்.
கொண்டை வளைதல்
போரான் குறைந்தால் ஓலைகள் சிறுத்தும் விரியாமலும் இருக்கும். மூன்று வயது மரங்களின் ஓலைகள் இயல்பாக விரியாமல் பின்னிக் கொண்டு வெளிவர முடியாமல் இருக்கும். வளர்ந்த மரங்களின் ஓலைகள் வளராமலும், தென்னை மட்டைகள் குருத்திலிருந்து வளைந்தும் இருக்கும்.
இக்குறை, முற்றிய மரத்தில் இருந்தால், குரும்பைகளும், இளங்காய்களும் கொட்டும். இதைச் சரி செய்ய, மரத்துக்கு 50 கிராம் வீதம் போராக்சை, மூன்று மாத இடைவெளியில் இரண்டு முறை தொடர்ந்து இட வேண்டும். 25 பிபிஎம் அளவில் போரான் கரைசலை வேர் மூலம் செலுத்த வேண்டும். போராக்சை மண்ணில் இடுவதே நெடுநாள் பயனை அளிக்கும்.
நுனிச் சிறுத்தல்
தொடக்க நிலையில் மட்டைகள் மஞ்சள் கலந்த பச்சையுடன் தெரியும். ஓலை இணுக்குகளில் பச்சையம் குறைவதால், தாவர உணவுத் தயாரிப்பு வெகுவாகத் தடைபடும். இதனால், மரமும் சரியாக வளராமல், மட்டைகளின் நீள அகலமும் குறைந்து விடும்.
புதிதாக ஓலைகள், பாளைகள் வருவது குறைவதுடன், அளவிலும் சிறுத்து விடும். இதனால், காய் உற்பத்தியும், காயின் அளவும் குறைந்து விடும். காய்களில் நீர் வற்றியும், பருப்பின் அளவு குறைந்தும் இருக்கும்.
நுனிச் சிறுத்தல் முற்றி விட்டால், மரத்தின் வளர்ச்சிப் பகுதிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு, தண்டுப்பகுதி பென்சில் முனையைப் போல மாறிவிடும். நீண்ட காலமாகப் பராமரிப்பு இல்லாத போதும், தென்னை வளர்ச்சிக்கான சூழ்நிலை அமையாத போதும் நுனிச் சிறுத்தல் அதிகமாகும்.
இதன் தொடக்க நிலையில் உள்ள மரங்களை மட்டுமே காப்பாற்ற இயலும். முற்றிய நிலையில் உள்ள மரங்களை வெட்டி விட்டு, தரமான கன்றுகளை நட வேண்டும்.
ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் பெர்ரஸ் வீதம் கலந்து வேரில் செலுத்தலாம். மேலும், பத்து நாட்களுக்கு ஒருமுறை மண்ணின் தன்மைக்கு ஏற்ப, பாசனம் செய்வது அவசியம். பரிந்துரை அளவில் இரசாயன மற்றும் இயற்கை உரங்களை ஆண்டுதோறும் இட்டால், மரத்தின் வளமும், காய்க்கும் திறனும் காக்கப்படும்.
மஞ்சள் இலைகள்
முழுமையாக வளர்ந்த ஓலைகள் மஞ்சளாக மாறுவது, மக்னீசியக் குறையின் அறிகுறியாகும். தென்னைக்கு அதிகளவில் மக்னீசியம் தேவை. தோப்புகளில் நீர்த் தேங்கியிருத்தல் அல்லது தொடர் மழையால், மண்ணிலுள்ள சத்துகள் கிடைக்காத நிலையில் மட்டைகள் மஞ்சளாக மாறும்.
இந்த நிற மாற்றம் ஓலைகளின் நுனியில் தொடங்கி, நாளடைவில் ஓலை முழுவதும் பரவி விடும். இதைச் சரி செய்ய, முறையான உரங்களையும், கூடுதலாக மரத்துக்கு 500 கிராம் வீதம் மக்னீசியம் சல்பேட்டையும் இட வேண்டும்.
நீண்டகாலப் பயிர் என்பதாலும், தொடர்ந்து மகசூலைத் தருவதாலும், போதுமான மண்வளம் தென்னைக்கு அவசியம். இதைப் புரிந்து செயல்பட்டால், நல்ல மகசூலையும் எடுத்து, மண்வளத்தையும் காக்கலாம்.
முனைவர் க.செ.விஜய் செல்வராஜ், முனைவர் ஆ.கார்த்திகேயன், தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம், தஞ்சை மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!