இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பயிராகும் மூலிகைகளில் ஒன்று தூதுவளை. இதற்கு, சிங்கவல்லி, அளர்க்கம் என்னும் பெயர்களும் உண்டு. இதன் இலை, பூ, காய், வேர் ஆகிய பாகங்கள், மருத்துவப் பயன்களைக் கொண்டவை.
தூதுவளையைச் சுத்தம் செய்து மிளகு, சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கித் துவையலாக்கி ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வலிமை கிடைக்கும்.
இருமல், இரைப்பு, சளி ஆகியன நீங்கும். ஆண்மை அதிகரிக்கும். இதில், கால்சியம் அதிகமாக இருப்பதால், எலும்பும் பற்களும் வலுவடையும். அதனால், தூதுவளைக் கீரையைப் பருப்புடன் சேர்த்துச் சமைத்து, நெய் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும்.
தூதுவளையை நன்கு அரைத்து, அடை போலச் செய்து சாப்பிட்டு வந்தால், தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல், நமைச்சல், பெருவயிறு மற்றும் மந்தம் அகல, தூதுவளைக் கீரை சிறந்த மருந்தாகும். மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர்ச்சுரப்பு, பல் ஈறுகளில் நீர்ச்சுரப்பு மற்றும் சூலை நீருக்குத் தீர்வைத் தருவது தூதுவளைக் கீரை.
தூதுவளைக் கீரை, வேர் மற்றும் காயை, வற்றல், ஊறுகாய் செய்து 48 நாட்கள் சாப்பிட்டால், கண் எரிச்சல், கண் நோய்கள் நீங்கும். தூதுவளைக் கீரையைக் குடிநீராக்கி அருந்தி வந்தால், இருமல், இரைப்பு நோய் அண்டாது. கற்ப முறைப்படி தூதுவளையை உண்டு வந்தால், நெடுவாழ்வைப் பெறலாம்.
தொகுப்பு: பசுமை
சந்தேகமா? கேளுங்கள்!