கொழுந்து இலைகளைச் சேகரித்து நீர்விட்டுக் காய்ச்சிக் குடிநீராகக் குடித்து வந்தால், சீதக்கழிச்சல் நிற்கும். இந்த இலைகளுடன் உப்பைச் சேர்த்து அரைத்துப் பூசி வந்தால், உடலிலுள்ள சொறிசிரங்கு குணமாகும்.
கீழாநெல்லி இலைகளை விழுதாக அரைத்துப் பற்றுப் போட்டு வந்தால், அடிபட்ட காயம், சதைச் சிதைவு ஆகியன குணமாகும். கீழாநெல்லித் தண்டில் சாறெடுத்து, விளக்கெண்ணெய் சேர்த்து ஊற வைத்து, கண்ணில் துளியளவு விட்டால், கண்கள் தூய்மையும் குளிர்ச்சியும் பெறும். கண்காசம் விலகும்.
கீழாநெல்லி இலைகளையும் வேரையும் உலர்த்திப் பொடியாக்கிக் கழுநீரில் குழைத்துப் பூசி வந்தால் புண் புரை வீக்கங்கள் ஆறும். இந்த இலைகளையும் வேரையும் நீரிலிட்டுக் காய்ச்சிக் குடித்து வந்தால், சுரம் தணியும். இதன் வேரை வெந்நீரில் அரைத்துக் கலக்கி அருந்தினால், பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு நீங்கும்.
கீழாநெல்லியின் வெண்மையான பச்சை வேரை 20 கிராம் எடுத்து, நீரில் கழுவிச் சுத்தம் செய்து, பசும்பாலைச் சேர்த்து விழுதாக அரைத்து, மூன்று வேளையென மூன்று நாட்கள் அருந்தினால், சோகை, காமாலை, பாண்டு, வாத, பித்தப் பிணிகள் குணமாகும். உடலில் இரத்த விருத்தி உண்டாகும். கண்கள் குளிர்ச்சி அடையும்.
கீழாநெல்லி, மஞ்சள் காமாலைக்கும் நீரிழிவுக்கும் மருந்தாகும். இச்செடியைப் பிடுங்கி அப்படியே சுத்தம் செய்து நீர்விட்டு மைய அரைக்க வேண்டும். இதில், சிறு எலுமிச்சைப்பழ அளவுக்கு எடுத்து, வெண்ணெய் நீக்கப்பட்ட கால் லிட்டர் மோரில் கலந்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.
காமாலைப் பிணியாளர்கள் இந்த மருந்தை உண்ணும் காலத்தில், உப்பு, புளி சேர்க்காத கஞ்சி, இருமுறை வடித்த சோறு, தாளிக்காத காய்கறிகள், மோர், வெள்ளாட்டுப் பால் ஆகியவற்றை உணவாகக் கொள்ளலாம்.
எண்ணெய், வெண்ணெய், நெய், புகையிலை, புகைப்பிடித்தல் ஆகியவை ஆகாது. அன்றாடம் பசுமையான கீழாநெல்லி கிடைக்காத சூழலில், மொத்தமாக வாங்கி நிழலில் காய வைத்துப் பயன்படுத்தலாம்.
மரு.ப.குமாரசுவாமி, மேனாள் அரசு சித்த மருத்துவர், செங்கல்பட்டு.
சந்தேகமா? கேளுங்கள்!