இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவாக இருந்தால் அல்லது மூச்சுக்காற்றை எடுத்துச் செல்லும் ஹீமோ குளோபின் என்னும் புரதம், நூறு மில்லி இரத்தத்தில், 12 கிராமுக்கும் குறைவாக இருந்தால், அது இரத்தச்சோகை எனப்படும். உணவில் புரதம், இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12, தைராய்டு சுரப்பு நீர் போன்றவை குறைவாக இருந்தால், இரத்தச் சோகை ஏற்படும்.
அறிகுறிகள்
உடல் அசதி, தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல், கை கால் குடைச்சல், உடல் வலி, மூச்சு வாங்குதல், மாதவிடாயில் சிக்கல், நெஞ்சுவலி, கை கால் முகம் வீக்கம் போன்றவை.
தீர்வு
பாலுடன் பேரீச்சம் பழத்தைச் சேர்த்துச் சாப்பிடலாம். தினமும் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், இரத்த விருத்தி ஏற்படும். அத்திப்பழம், புதினா, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, புளிச்சக் கீரை, அரைக்கீரை, பீட்ரூட், காரட், ஆரஞ்சு, காய்கறிகள், திராட்சை, பப்பாளி, நெல்லிக்காய் ஆகியவற்றைச் சாப்பிட்டு வரலாம்.
தினமும் காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் வீதம், தேனை எடுத்து, ஆறிய வெந்நீர் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் கூடும்.
தக்காளிச் சாறு, எலுமிச்சைச் சாறு மற்றும் தேனைச் சமமாகக் கலந்து, காலை, மாலையில் 30 மில்லி வீதம் கலந்து குடித்து வந்தால், இரத்தம் பெருகும்.
இதயம் வலுவாகும். இது, காச நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும், முளைக் கட்டிய பச்சைப்பயறு, முந்திரிப் பருப்பு, உளுந்தங்களி, பாதாம், பிஸ்தா பருப்பு போன்றவற்றை உணவில் சேர்த்து வரலாம்.
கேழ்வரகில் கால்சியமும், இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளன. பாலை விடக் கேழ்வரகில் கால்சியம் அதிகமாக உள்ளது. எனவே, கேழ்வரகைத் தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் வலுவாகும். உடற்சூடு தணியும்.
தினமும் கேழ்வரகுக் கூழைக் குடித்து வந்தால், குடற்புண் குணமாகும். மலச்சிக்கல் அகலும். ஆனால், சர்க்கரை நோயாளிகள், கேழ்வரகைக் கூழாகக் குடிக்கக் கூடாது. அடையாக, புட்டாகச் செய்து சாப்பிடலாம்.
இரத்த விருத்தி பானம்
கொத்தமல்லித் தழை, புதினா, கறிவேப்பிலை தலா 2 கைப்பிடி, பேரீச்சம் பழம், 4, வெல்லம் 50 கிராம், தேங்காய்த் துண்டு 1, இஞ்சித் துண்டு 1, ஊற வைத்த பாதாம் 4 மற்றும் 2 நெல்லிக்காய்.
இந்தப் பொருள்களை 2-3 டம்ளர் நீரை விட்டு அரைத்துச் சாறாகப் பிழிந்து, எலுமிச்சம் சாற்றைச் சேர்த்துக் குடித்து வந்தால், இரத்த விருத்தியும், புத்துணர்வும் கிடைக்கும்.
மரு.சு.சத்தியவாணி எம்.டி., வளசரவாக்கம், சென்னை – 600 087.
சந்தேகமா? கேளுங்கள்!