பழங்கால மருத்துவத்தின் முக்கிய அங்கமாக மூலிகைகள் விளங்கின. அப்போது உருவான இவற்றின் பயன்பாடுகள் இப்போதும் தொடர்கின்றன. இந்திய ஊரகப் பகுதிகளில் ஏராளமான மூலிகைகள் வளர்ந்து கிடக்கின்றன. அவற்றில் முக்கியமானது ஆவாரஞ் செடி.
இதன் பூ முதல் வேர் வரையான அனைத்துப் பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுகின்றன. குறிப்பாக ஆவாரம் பூவை மிக எளிதாக எல்லோரும் பயன்படுத்தலாம். ஆவாரைப் பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ என்னும் பழமொழி இதன் சிறப்பை உணர்த்தும்.
ஆவாரையின் அறிவியல் பெயர் சென்னா ஆரிக்குலட்டா என்பதாகும். இது, ஆங்கிலத்தில் டானர்ஸ் காஸியா எனப்படும். மஞ்சளாகப் பூக்களைப் பூக்கும் ஆவாரஞ்செடி, பல்வேறு மருந்துத் தயாரிப்புகளில் பயன்படுகிறது.
நன்மைகள்
அவாரம் பூவில் மூலிகைத் தேநீரைத் தயாரிக்கலாம். நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருப்பதால், காபி போன்ற பானங்களுக்குச் சரியான மாற்றாக இருக்கிறது. இயற்கை இரத்தச் சுத்தியாகச் செயல்படுகிறது.
இரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உடலிலுள்ள இன்சுலின் அளவை இயல்பாகவே அதிகரிக்கச் செய்கிறது. வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நீரிழிவு நோய்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
ஆவாரம் பூச்சாறு, வலியுடன் சிறுநீர்க் கழித்தல் போன்ற சிறுநீர்ப் பாதை நோய்களைக் குணமாக்க உதவுகிறது. இரைப்பைக் குழாயில் ஏற்படும் சிக்கல், மலச்சிக்கல்லை அகற்ற, கல்லீரலின் இயக்கத்தை மேம்படுத்த ஆவாரம்பூ உதவுகிறது.
ஆவாரை விதையில் வலுவான கிருமிநாசினிப் பண்புகள் உள்ளன. கொனேரியா மற்றும் கண் நோய் சிகிச்சையில் பயன்படுகிறது. ஆவாரம் பட்டையும் விதைகளும், கிருமிகள் மற்றும் கீல்வாதம் போன்ற சீரழிவு நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றன. எனவே, ஆவாரையின் பயனறிந்து பயன்படுத்தினால் நோயற்று வாழலாம்.
முனைவர் சி.சிவானந்த், ஜே.எஸ்.ஏ.வேளாண்மைக் கல்லூரி, பொடையூர், கடலூர் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!