ஆர்கிட் மலர்களை கி.மு. 500 ஆம் நூற்றாண்டில் இருந்தே மனிதன் அறிந்திருந்தான். ஆர்கிட் என்னும் பெயரானது ஆர்கிஸ் என்னும் கிரேக்கப் பதத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. ஆர்கிட் மலர்களின் அடிக் கிழங்குகள் ஆண் இனப்பெருக்க உறுப்பு வடிவில் இருப்பதால், ஆர்கிட் எனப் பெயரிடப் பட்டது.
ஐரோப்பிய நாடுகளின் ஆர்கிட் மலர்கள், பாலுணர்வின் அடையாளமாகக் குறிப்பிடப் படுகின்றன. ஆர்கிட் மலர்கள் சார்ந்துள்ள ஆர்கிடேசடியே என்னும் தாவரக் குடும்பம் சிற்றினங்கள் மற்றும் பேரினங்களைப் பெருமளவில் கொண்டுள்ள பெரிய தாவரக் குடும்பமாகும்.
அதாவது, 600-800 பேரினங்களை, 25,000-35,000 சிற்றினங்களைக் கொண்டுள்ளது. மேலும் செயற்கை முறையில் 45,000 கலப்பின இரகங்களும் உருவாக்கப்பட்டு உள்ளன. இவற்றின் முக்கியத்தை உணர்ந்து, அமெரிக்க ஆர்கிட் சங்கம் போன்ற சங்கங்கள் ஒவ்வொரு நாட்டிலும் செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட 140 பேரினங்கள் 1,300 சிற்றினங்கள், இமயமலை அடிவாரம், மராட்டியம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், அந்தமான் நிகோபர் தீவுகள் ஆகியவற்றில் பெருவாரியாகப் பரந்துள்ளன.
ஆர்கிட் மலர்களின் சொர்க்கம்
இந்தியாவில் ஆர்கிட் மலர்கள் சாகுபடி செய்யப்படும் இடங்களில் காலிம்பாங் என்னும் இடத்தில், இம்மலர் சாகுபடிக்கு உகந்த எல்லாக் கால நிலைகளும் நிலவுவதால், அப்பகுதி, ஆர்கிட்களின் சொர்க்கம் எனப்படுகிறது.
ஆர்கிட் மலர்களின் பயன்கள்
டென்ரோபியம் யூட்லி என்னும் ஆர்கிட் வகை, கூடைகள் செய்யவும், கைகளில் அணியும் அலங்கார வளையங்கள் செய்யவும் பயன்படுகின்றன. பழங்குடி மக்கள், ஆர்கிட் செடிகளின் இலைகள், கிழங்குகள் போன்றவற்றை உணவாகக் கொள்கிறார்கள்.
கிழங்குகள் மற்றும் இலைகளில் இருந்து மருந்துகள் தயாரிக்கப் படுகின்றன. சிம்போடியம் ஜய்ஜான்டியம் என்னும் செடிகளின் இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு, காயம்பட்ட இடங்களில் இரத்தம் உறைய உதவுகிறது.
சிம்போடியம் கேனலிகுலேட்டம் என்னும் சிற்றினத்தின் பழங்களும், கிழங்குகளும் வயிற்றுப்போக்குக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. மேலும், முடக்குவாத வலி, வயிற்றுவலி, நுரையீரல் நோய்கள், தலைவலி, உடல்வலி போன்றவற்றைக் குணமாக்க உதவுகின்றன.
ஆர்கிட் மலர்கள், மக்களின் சமுதாய மற்றும் சமய வழிபாடுகளில் பெருமளவில் பயன்படுகின்றன. சிம்போடியம் பினலி சோனியானம் என்னும் ஆர்கிட் இரகத்தை, மலேசிய மக்கள், அசுத்த ஆவிகளை ஊரை விட்டுத் துரத்துவதற்குப் பயன்படுத்துகிறார்கள்.
ஆர்கிட் பூச்செடிகள் உற்பத்தி
ஆர்கிட் செடிகள், விதைகள், வேர்க்குச்சிகள், பக்கக் கன்றுகள் மற்றும் திசு வளர்ப்பு முறைகளில் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. முதிர்ந்த ஆர்கிட் காயில் 1,300 முதல் 40 இலட்சம் வரையில், மிகச்சிறிய வெள்ளை, இளம் பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, பழுப்பு நிற விதைகள் உற்பத்தியாகின்றன.
இந்த விதைகளில், என்டோஸ்பாம் என்னும், முளைப்புக்குத் தேவையான சத்துகள் இல்லாமல் இருப்பதால், இவை இயற்கையான சூழலில் முளைப்பது இல்லை.
ஆகவே, இவை கூட்டு சிம்பையாட்டிக் முறையில் வாழும் பூசணங்களான, ரைதுக்டோனியா சிற்றினங்களுடன் கலந்து முளைக்க வைக்கப்படுகின்றன. ஆனால், இம்முறையிலும் எதிர்பார்க்கும் முளைப்புத் திறன் கிடைப்பதில்லை.
ஆகவே மாவுப் பொருள்கள், புரதம், சர்க்கரைப் பொருள்கள் மற்றும் தாதுப் பொருள்கள் கலந்த நட்சன் வளர்ச்சி ஊடகத்தைப் பயன்படுத்தி, விதைகளை முளைக்க வைப்பதன் மூலம் 100 சத அளவில் வளர்ந்து வருகின்றன.
சில வாரங்களில் விதைகள் முளைத்து அரை அங்குலம் வளர்ந்ததும், அவற்றைப் பிடுங்கி, சிறிய தொட்டிகளில் நட வேண்டும். அதாவது, தொட்டிகளின் அடிப்பகுதியில், உடைந்த செங்கல் துண்டுகளைப் போட்டு, அவற்றின் மேல் பகுதியில் கரித்துண்டுகள் மற்றும் மர நார்கள் போன்ற கலவையை நிரப்பி நட வேண்டும்.
வான்டா, டென்ட்ரோபியம், எபிடென்ட்ரம் போன்ற இனங்கள், வேர்க்குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. நுனிக் குச்சிகளைத் தயாரித்து, அவற்றை, 2000 பி.பி.எம். அளவில் கலந்த ஐ.ஏ.ஏ என்னும் வளர்ச்சி ஊக்கிக் கலவையில் நனைத்து நட்டால் வேர்ப்பிடிப்பு அதிகமாகும்.
பெல்னாப்சிஸ் ஆர்கிட் செடிகள், அவற்றில் உருவாகும் கைகிஸ் என்னும் பக்கக் கன்றுகள் மூலமும், வான்டா பேரினம் விண் பதியன்கள் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.
வைரஸ் தாக்காத கன்றுகளைப் பெருமளவில் உற்பத்தி செய்ய, திசு வளர்ப்பு முறை பயன்படுகிறது. வளர்நுனிக் கணுத் துண்டுகள், பக்கக் கன்றுகளின் நுனிகள், பூக்காம்புத் துண்டுகள் ஆகியவற்றை, எம்.எஸ், வளர்ச்சி ஊடகத்தில் வளர்த்து, பெருமளவில் இனப்பெருக்கம் செய்யலாம்.
நிலம் மற்றும் மண் ஊடகம் தயாரித்தல்
ஆர்கிட்கள் பெரும்பாலும் தரைகளிலும் தொட்டிகளிலும் வளர்க்கப்படுகின்றன. ஆர்கிட்களை தரையில் வளர்க்கும் போது அவற்றின் வளர்ச்சிக்கு உகந்த வளர்ச்சி ஊடகம் இருக்க வேண்டும்.
இதற்கு, ஒரு பங்கு இலைமட்கு (கியூமஸ்), ஒரு பங்கு ஆஸ்முன்டா நார் மற்றும் ஸ்பெக்னம் மாஸ் மற்றும் அரைப் பங்கு மாட்டு எருவைக் கலந்து, வளர்ச்சி ஊடகத்தைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். தொட்டிகளில் வளர்க்க, ஒவ்வொரு விதமான ஆர்கிடு வகைக்கும், ஒவ்வொரு விதமான வளர்ச்சி ஊடகம் தேவைப்படுகிறது.
ஒட்டுண்ணியாக வளரும் ஆர்கிட்களுக்கு இரண்டு பங்கு ஆஸ்முன்டா நார் அல்லது மரப்பட்டைச் சீவல்கள் மற்றும் ஒரு பங்கு ஸ்பெகினம் மாசைக் கலந்து வளர்ச்சி ஊடகத்தைத் தயாரிக்க வேண்டும்.
ஒட்டுண்ணி வகை ஆர்கிட்களான, கேட்லியா, எபிடென்ட்ரம், பெலனாப்சிஸ், வான்டா, டென்ரோபியம், ரிங்கோஸ்டைலிஸ் ஆகியவற்றுக்கு இந்த வளர்ச்சி ஊடகம் சிறந்தது.
தரையில் வளர்க்கும் ஆர்கிட்களான, சிம்பீடியம், சைப்பிரிபீடியம், கேலந்தி ஆகியவற்றுக்கு, ஒரு பங்கு தோட்ட மண், ஒரு பங்கு சில்வர் மணல், ஒரு பங்கு இலை மட்கு, அரைப்பங்கு கரித்துண்டுகள் மற்றும் அரைப்பங்கு பழைய மார்ட்ர் துண்டுகளைக் கலந்து, வளர்ச்சி ஊடகத்தைத் தயாரிக்க வேண்டும்.
ஆர்கிட் நடவு நிலம் தயாரித்தல்
தரையில் வளரும் ஆர்கிட் வகைகளான, வான்டா, சிம்பீடியம், டென்ரோபியம், எபிடென்ட்ரம், பேப்பிலோபிடிலம், அருன்டினா, கேலந்தி, கிரிப்டோ போடியம் ஆகியவற்றை, பாத்திகளில், நீண்ட வாய்க்கால்களில் நிரப்பப்பட்ட வளர்ச்சி ஊடகத்தில் வளர்க்கலாம். இவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான வடிகால் வசதிக்கு, மலைப்பகுதியில் உள்ள சரிவான நிலப்பகுதி மிகவும் உகந்தது.
மேலும், தரைப்பகுதியில் மேட்டுப் பாத்திகளின் மூலமும் நல்ல வடிகால் வசதியை ஏற்படுத்தலாம். முதலில் 25-30 செ.மீ. அகலமுள்ள நீண்ட வாய்க்கால்களை 40×40 செ.மீ. இடைவெளியில் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, உடைந்த செங்கற்களை 5-7.5 செ.மீ. அளவுக்கு நிரப்பி, அவற்றின் மீது வளர்ச்சி ஊடகத்தை நிரப்பி, 40 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
தொட்டிகளில் நடவு செய்தல்
தொட்டிகளில், அரைப்பகுதி வரை உடைந்த செங்கல் துண்டு, கரித்துண்டு போன்றவற்றை இட்டு நிரப்ப வேண்டும். பிறகு ஒட்டுண்ணி மற்றும் தரையில் வளரும் ஆர்கிட்களுக்கு என, முன்னர் குறிப்பிட்ட வளர்ச்சி ஊடகக் கலவையைத் தொட்டிகளில் நிரப்ப வேண்டும். அடுத்து, தொட்டிகளின் நடுவில் கன்றுகளை நட வேண்டும். நடவு செய்த செடிகள் காற்றில் அசையாமல் இருக்க, குச்சிகளை ஊன்றிக் கட்டி விட வேண்டும்.
மரங்களில் வளர்த்தல்
கரடுமுரடான மரப்பட்டைகளைக் கொண்ட மா, ஓக், பலா மற்றும் காய்ந்த மரக்கிளைகளில், திறந்த வெளியிலும் ஆர்கிட் செடிகளை வளர்க்கலாம். ஒட்டுண்ணி ஆர்கிட்களான கேட்லியா, டென்ட்ரோபியம் எபிடென்டரம் மற்றும் வான்டாவை,
ஒட்டுண்ணி வகை ஆர்கிட்களுக்கான வளர்ச்சி ஊடகத்தில் சேர்த்து, தென்னை நார் மற்றும் நைலான் நார் வலை அமைப்புக்குள் வைத்து, மரப்பட்டைகளில் இறுக்கமாகக் கட்டிவிட வேண்டும். அடுத்து, அவை வளர்ந்து வரும் வரை, நல்ல வெளிச்சமும் நீரும் கொடுக்க வேண்டும்.
பாறைகளில் வளர்த்தல்
துளைகள் உள்ள மிருதுவான வல்கானிக் பாறைகளில், கேட்லியா, லைலியா, எபிடென்ட்ரம், டென்ட்ரோபியம் போன்ற ஆர்கிட் வகைகளை வளர்க்கலாம். பாறைகளில் உள்ள குழிகளில், ஆஸ்முன்டா நார், பெரணி நார், ஸ்பெக்னம் மாஸ் ஆகியவற்றை நிரப்பி, அவற்றில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். இவ்வகை ஆர்கிட்களுக்கு, சுத்தமான நீரில் கலந்த உரத்தை வாரம் ஒருமுறை கொடுப்பது அவசியம்.
ஆர்கிட் செடிகளில் பாசனம்
காலநிலை, வளர்ச்சி ஊடகம், தொட்டிகளின் அளவு, ஆர்கிட் செடிகளின் வளரியல்பு ஆகியவற்றைப் பொறுத்து, அவற்றின் பாசனத் தேவை வேறுபடும். பொதுவாக 6-7 அமில காரத் தன்மையுள்ள நீரை, செடிகளுக்குத் தர வேண்டும். வளர்ச்சி ஊடகத்தில் நீரை அடிக்கடி தெளித்து ஈரமாக வைத்திருக்க வேண்டும்.
புதிதாக நட்ட செடிகளுக்கு குறுகிய இடைவெளியில் பாசனம் செய்ய வேண்டும். முறையான பாசனம் மூலம், புதிய தளிர்கள் உருவாகி வேர்ப் பிடிப்பு அதிகமாகும். செடிகள் பூக்கத் தொடங்கியதும், நீரின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.
செடிகளில் நீரை மெதுவாகத் தெளிக்க வேண்டும். அதிகாலையில் அல்லது பின் மாலையில் நீரைத் தெளிக்கக் கூடாது. தெளிக்கப்பட்ட நீர் இரவுக்கு முன் இலைகளில் இருந்து உலர்ந்துவிட வேண்டும்.
ஆர்கிட் செடிகளுக்கு உரமிடுதல்
செடிகளின் முறையான வளர்ச்சிக்கும், மலர்களின் உற்பத்திக்கும் தகுந்த முறையில் திரவச் சத்துகளைப் பயன்படுத்த வேண்டும். திரவச் சத்துகளை, செடிகள் விரைவாக உறிஞ்சுவதால், குறுகிய கால இடைவெளியில் திரவச் சத்துகளைக் கொடுக்க வேண்டும். ஆர்கிட் செடிகள் மெதுவாக வளர்வதால், ஆஸ்ம கோட் என்னும், மெதுவாக வெளியாகும் சத்தைத் தருவது நல்லது.
தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 10:12:10 வீதம் கலந்த கலவையில், மற்ற சத்துகளான, மெக்னீசியம், கால்சியம், மாங்கனீசு, இரும்பு, போரான், துத்தநாகம் கலந்த கலவையை, கொஞ்சமாகச் சேர்க்க வேண்டும். கேட்லியா, வான்டா, டென்ட்ரோபியம், பெலனாப்ஸிஸ் போன்ற இரகங்களுக்கு, நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
நன்கு வளர்ந்து பூக்கும் செடிகளுக்கு, 2 தேக்கரண்டி வீதம், மேலே குறிப்பிட்டுள்ள உரக் கலவையை, 5 காலன் நீரில் கலந்து வாரம் ஒருமுறை தெளிக்க வேண்டும்.
இளஞ்செடிகளுக்கு ஒரு தேக்கரண்டி வீதம் எடுத்து, 5 காலன் நீரில் கலந்து வாரம் ஒருமுறை தெளிக்க வேண்டும். சிம்பீடியம் ஆர்கிட் செடிகளுக்கு ஒருவார இடைவெளியில் 3 தேக்கரண்டி வீதம் எடுத்து, 5 காலன் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
முனைவர் அ.சங்கரி, இணைப் பேராசிரியர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை.
சந்தேகமா? கேளுங்கள்!