My page - topic 1, topic 2, topic 3

அரளிப்பூ சாகுபடி!

அரளிப்பூ

நீரியம் ஒலியாண்டர், அபோ சைனேசியே குடும்பத்தைச் சார்ந்தது அரளி. செடியின் எல்லாப் பகுதிகளிலும் விஷத்தன்மை இருக்கும். அரளிப்பூ உதிர் மலர்களாக, சரங்களாகத் தொடுக்கப் பயன்படுகிறது.

குட்டை வகை அரளிச் செடியை தொட்டியில் அழகுச் செடியாக வளர்க்கலாம். இதில், தனி ரோஸ், தனி வெள்ளை, தனிச் சிவப்பு என மூன்று வகைகள் உள்ளன.

மண் மற்றும் தட்பவெப்ப நிலை

கரிசல் அல்லது மணல் கலந்த செம்மண் ஏற்றது. நல்ல வடிகால் வசதி, நீர்வளம், அதிக வெப்பம் மற்றும் அதிகக் குளிரிலும் நன்கு வளரும். சூரியவொளி நிறையவுள்ள பகுதிகளில் அரளியை நட வேண்டும். நிழலில் செடி சரியாக வளராது.

இனவிருத்தி மற்றும் நடவு

இரண்டடி நீளமுள்ள கடின அல்லது மிதக்கடினக் குச்சிகளை மண்ணில் வளைவாகப் பதித்துப் பயிர்ப் பெருக்கம் செய்யலாம். வேர்விட்ட குச்சிகளை இரண்டு மீட்டர் இடைவெளியில் ஒரு அடிக் குழியில், ஜுன் ஜுலையில் நடலாம். நடுமுன் குழியில் தொழுவுரம், செம்மண் மற்றும் மேல் மண்ணை இட வேண்டும்.

பின்செய் நேர்த்தி

தேவைப்படும் நேரத்தில் பாசனம் செய்ய வேண்டும். ஜனவரி ஆகஸ்ட்டில் எக்டருக்கு 10 டன் தொழுவுரத்தை இட வேண்டும். இரசாயன உரங்கள் தேவையில்லை.

கவாத்து

அரளிப்பூ புதிய தளிர்களில் மட்டுமே பூக்கும். எனவே, கவாத்து செய்ய வேண்டும். காய்ந்த, பூச்சி, நோய்கள் தாக்கிய கிளைகளை நீக்கிவிட வேண்டும்.

பூச்சி, நோய் மேலாண்மை

அசுவினி: நல்ல மஞ்சள் மற்றும் கறுப்பாக இருக்கும் அசுவினிகள் கூட்டம் கூட்டமாக அரளிச் செடியின் இளந் தண்டுகளைத் தாக்கும். இவை குளிர் காலத்தில் மிகுதியாகவும், பிற காலங்களில் குறைவாகவும் இருக்கும்.

தீர்வு: பொறி வண்டுகளை நிலத்தில் விடலாம். மூன்று சத வேப்ப எண்ணெய்க் கரைசல் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 1.5 மில்லி டைமெத்தயேட் வீதம் கலந்து தெளிக்கலாம்.

செதில்பூச்சி: வட்டமாக, மிகச் சிறிதாக, வெள்ளை நிறத்தில் அரளி இலைகளின் மேலே அல்லது அடியில் இருக்கும்.

தீர்வு: மூன்று சத வேப்ப எண்ணெய்க் கரைசலைத் தெளிக்கலாம்.

கம்பளிப்புழு: ஆரஞ்சு நிறக் கம்பளிப் புழுக்கள் பெருமளவில் அரளி இலைகளைச் சேதப்படுத்தும்.

தீர்வு: இப்புழுக்கள் சிறிதாக இருக்கும் போது அல்லது பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்த முடியாத போது, பேசிலஸ் துரிஞ்சியன்சைப் பயன்படுத்தலாம்.

இலைக்கருகல் நோய்: இதனால் தாக்கப்பட்ட இலைகள் மஞ்சளாகவும், இலையின் ஓரமும் நுனியும் கருகியிருக்கும். கடைசியில் செடியே காய்ந்து விடும்.

தீர்வு: ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் டைத்தேன் எம்.45 வீதம் தெளிக்கலாம். அதிகமாகப் பாதிக்கப்பட்ட செடிகளைப் பிடுங்கி அழித்து விட வேண்டும்.

பூக்கும் பருவம்

நட்டு நான்கு மாதத்தில் இருந்து ஆண்டு முழுவதும் பூத்துக் கொண்டே இருக்கும். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையில் அதிகமாகப் பூக்கும். ஒருநாளில் ஒரு எக்டர் அரளிச் செடிகளில் இருந்து 100-120 கிலோ பூக்கள் கிடைக்கும்.

பின்செய் நேர்த்தி

செய்தித்தாள் உள்ளுறையாக உள்ள அட்டைப் பெட்டிகளில் அரளிப் பூக்களை வைத்து துபாய், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

தனி ரோஸ் வகையே அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்ளூரில், துளசி, மரு போன்ற வாசனை இலைகளுடன் அரளிப் பூக்களும் சேர்த்துத் தொடுக்கப்பட்டு வழிபாட்டில் பயன்படுத்தப்படுகின்றன.


முனைவர் அ.சங்கரி, முனைவர் எம்.கவிதா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், முனைவர் எம்.ஆனந்த், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு, கே.கயல்விழி, வேளாண்மைப் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுழூர்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks