அகத்தி, நமக்கு எளிதில் கிடைக்கும் கீரைகளில் முக்கியமானது. நூறு கிராம் அகத்திக் கீரையில் புரதம் 8.4 கிராம், நார்ச்சத்து 2.2 கிராம், மாவுச்சத்து 11.8 கிராம், கொழுப்புச் சத்து 1.4 கிராம், உயிர்ச் சத்து சி 169 மி.கி., உயிர்ச் சத்து ஏ (கரோட்டீன்) 5400 மை.கி., இரும்புச் சத்து 3.9 மி. கி., சுண்ணாம்பு 1130 மி.கி., தாதுப்புகள் 3.1 கிராம், பாஸ்பரஸ் 80 மி.கி. உள்ளன.
அகத்திக் கீரையை உண்டால், பித்தம் சார்ந்த நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் செரிக்கும். அகத்தியிலைச் சாற்றை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவில் குடித்தால், இருமல் குறையும். அகத்தியிலைச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் வயிற்றுவலி தீரும்.
அகத்தி இலைகளை அரைத்துக் கட்டி வந்தால், அடிபட்ட புண்கள் ஆறும். அகத்திக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். அகத்திப்பூ சாற்றை நெற்றியில் தடவி வந்தால், தலைவலி தீரும். அகத்திக் கீரையைக் காய வைத்துப் பொடியாக்கி, நீர் அல்லது பாலில் கலந்து குடித்து வந்தால், நாள்பட்ட வயிற்றுவலி குணமாகும்.
அகத்திச் சாற்றை இரண்டு துளிகள் மூக்கில் விட்டால், தும்மல், சளி தீரும். தலையில் தேய்த்துக் குளித்தால், மனநிலைப் பாதிப்புகள் குறையும். பச்சையாகச் சாப்பிட்டால் தொண்டைப் புண், தொண்டை வலி குணமாகும். அகத்திக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வேண்டும்.
இதனால், உடல் வெப்பம் தணிந்து கண்கள் குளிர்ச்சியுறும். மலம், சிறுநீர் தாராளமாகக் கழியும். கீரையுடன் பருப்பைச் சேர்த்துக் கூட்டாகச் சமைத்துச் சாப்பிட்டால் செரிமானத் தொல்லைகள் அகலும். தனிக் கீரையாகவும், சாம்பாரில் சேர்த்தும் சமைத்து உண்ணலாம்.
முனைவர் மா.விமலாராணி, இணைப் பேராசிரியை, வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.
சந்தேகமா? கேளுங்கள்!