கோழியின் எச்சம் சிறந்த இயற்கை உரமாகும். ஆயிரம் கோழிகள் மூலம் தினமும் 125 கிலோ எச்சம் கிடைக்கும். இதில், நைட்ரஜன் மிகுதியாக இருப்பதால், இதை அப்படியே பயிர்களுக்கு இடக்கூடாது. இதை மட்க வைத்து இட வேண்டும்.
மட்கிய கோழியெருவில், 3 சதம் தழைச்சத்து, 2 சதம் மணிச்சத்து, 2 சதம் சாம்பல் சத்து இருக்கும். மேலும், கால்சியம், மக்னீசியம், செம்பு, இரும்பு, மாங்கனீசு, சோடியம், ஜிங்க், சல்ஃபர், போரான் போன்ற சத்துகளும் இருக்கும்.
கோழியெருவில் உள்ள சத்துகள் யாவும் பயிருக்கு உடனே கிடைக்கும். குறிப்பாக, தழைச்சத்தான யூரியா, அமில வடிவில் இருக்கிறது. கோழியெருவைச் சேமித்து வைக்கும் போது, இது யூரியாவாகவும், பிறகு அம்மோனியா கார்பனேட்டாகவும் மாறும்.கோழியெருவைக் குவியலாகப் போட்டு வைத்தால், வெப்பம் ஏற்பட்டு, அம்மோனியம் கார்பனேட்டில் இருந்து அம்மோனியம் வெளியேறி விடும். எனவே, இதைத் தவிர்க்க, 100 கிலோ கோழியெருவில், 10 கிலோ சூப்பர் பாஸ்பேட், 40 கிலோ உலர் தழைகளைக் கலந்து வைக்க வேண்டும்.
விதைப்புக்கு முன் நிலத்தில் கோழியெருவை இட வேண்டும். குறிப்பாக, காய்கறிப் பயிர்கள், பழமரங்கள், உருளைக் கிழங்கு மற்றும் தேயிலை, காப்பிப் பயிர்கள் சாகுபடிக்கு, கோழியெச்சம் மிகவும் ஏற்றது. இதில், கால்சியம் மிகுதியாக இருப்பதால், இது, அமிலத் தன்மையுள்ள மலைப்பகுதி மண்ணுக்கு மிகவும் ஏற்றதாகும்.
யூரியா போன்ற செயற்கை உரங்களைக் காட்டிலும், கோழியெச்சம் சிறப்பு மிக்கது. பெட்ரோலிய பொருள்களை இறக்குமதி செய்து, இரசாயன உரங்கள் உற்பத்திச் செய்யப்படுகின்றன.
இந்த உரங்கள் இடப்படும் நிலங்கள், காலப்போக்கில் உற்பத்தித் திறனை வெகுவாக இழக்கும். மேலும், கால்சியம், மக்னீசியம் போன்ற சில சத்துகளும், இந்த இரசாயன உரங்களால் கிடைப்பதில்லை.
எனவே, எப்போதும் கிடைப்பதும், மண்ணுக்கு நன்மை செய்வதுமான, கோழியெச்சம் போன்ற இயற்கை உரங்களை, பயிர்களுக்கு இடுவதே சாலச் சிறந்தது.
தொகுப்பு: பசுமை