வீட்டுத் தோட்டத்துக்கும் உயிர்வேலியை அமைக்கலாம்!

Uyir veli

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020

யிர்வேலி என்பது நமது நிலத்தைக் காப்பதற்காக உயிருள்ள தாவரங்களால் அமைப்பது. கற்களை வைத்து வீட்டுச் சுற்றுச்சுவரை கட்டுவது வழக்கம். ஆனால், கேரளம், மணிப்பூர், மிசோரம், அருணாசலப் பிரதேசம் போன்ற மலை மாநிலங்களில் செடிகளை வைத்தே வேலி அமைப்பார்கள். அவற்றின் மூலம் பாதுகாப்பு மட்டுமின்றி மேலும் பல நன்மைகளும் கிடைக்கும்.

இந்த உயிர்வேலி மண்ணரிப்பைத் தடுக்கும். அனுமதி இல்லாமல் பண்ணைக்குள் யாரும் வராமல் காக்கும். பல உயிரினங்களின் உறைவிடமாக, அவற்றின் உணவிடமாக இருக்கும். கால்நடைகளுக்கான பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யும். பசுந்தாள் உரத்தைத் தரும். விறகை, மரச்சாமான்களைத் தரும். மூலிகைகளைத் தரும்.

இவ்வகையில், பாச்சான், கொட்டைச்செடி, கள்ளி, அகத்தி, சூபாபுல், சவுண்டல், கிளைரிசிடியா, கிளுவை, மல்பெரி, செடி முருங்கை, கல்யாண முருங்கை போன்றவற்றைக் கொண்டு உயிர்வேலி அமைக்கலாம். விவசாய நிலத்தில் ஐந்தடுக்கு உயிர்வேலியை அமைப்பது நல்லது.

முதல் வரிசையில், முள் நிறைந்த மற்றும் ஆட்டுத்தீவனமாகப் பயன்படும், இலந்தை, களாக்காய், கொடுக்காய்ப்புளி, காரைமுள், சூரைமுள், வில்வம், சப்பாத்திக்கள்ளி, முள் கிளுவை, சூடான் முள், முள் கள்ளி, பரம்பை முள், கருவேல், குடைவேல், காக்காமுள், சங்க முள், யானைக் கற்றாழை போன்றவற்றை வளர்க்க வேண்டும்.

இரண்டாம் வரிசையில், பறவைக்கான உணவு மற்றும் அதன் வீடு மற்றும் மனிதர்களுக்கான உணவுக்காடு. ஆலமரம், அரச மரம், அத்தி மரம், நாவல், இலுப்பை, கோடை ஆப்பிள், சர்க்கரைப்பழம் எனப்படும் சிங்கப்பூர் செர்ரீ, வேம்பு, கொய்யா, மாதுளை, மா, பலா, சீத்தா, ஈச்சை, பேரீச்சை, நெல்லி, புளியமரம், சப்போட்டா, முந்திரி, ஆரஞ்சு, சாத்துக்குடி, நாரத்தை, பேரி, எலுமிச்சை, விளாம்பழ மரம், பாதாம், தென்னை, பனைமரம், பாக்கு மரங்களை வளர்க்கலாம்.

மூன்றாம் வரிசையில், பணமதிப்புள்ள, விறகுக்கான, பசுந்தாள் உரத்துக்கான, வனக்காட்டுக்கான, சவுக்கு, மூங்கில், சில்வர் தேக்கு, மலைவேம்பு, குமிழ், வேங்கை, புங்கை, புன்னை, வேங்கை, கடம்பு, தீக்குச்சி மரம், வாகை, சந்தனம், செஞ்சந்தனம், கொன்றை, மருதம், கருங்காலி, உசிலை, தடசு, மந்தாரை, நீர் மருது, மஞ்சனத்தி, பூவரசு, மகிழம், வன்னி போன்ற மரங்களை வளர்க்கலாம்.

நான்காம் வரிசையில், கால்நடைத் தீவனமாகப் பயன்படும், அகத்தி, சூபாபுல், சவுண்டல், கிளைரிசிடியா, கிளுவை, மல்பெரி, செடி முருங்கை, கல்யாண முருங்கை போன்றவற்றை வளர்க்கலாம்.

ஐந்தாம் வரிசையில், மூலிகை மற்றும் பூச்சிவிரட்டி மற்றும் உணவுப் பொருள்களாகப் பயன்படும், அன்னாசி, பிரண்டை, தூதுவளை, முடக்கற்றான், பண்ணைக்கீரை, கறிவேப்பிலை, கோவக்காய், வெற்றிலை, செம்பருத்தி, வெட்டிவேர், எலுமிச்சைப்புல், கற்பூரவள்ளி, பூனைமீசை, மருதாணி, சோற்றுக் கற்றாழை, நிலவேம்பு, சிறியாநங்கை, பெரியாநங்கை, முசுமுசுக்கை, திருநீற்றுப் பச்சிலை, துளசி, துத்தி, தும்பை, குப்பைமேனி, கீழாநெல்லி, அம்மான் பச்சரிசி, ஆடாதோடை, ஆடுதின்னாப்பாளை, நொச்சி, ஆவாரை, ஊமத்தை, காட்டாமணக்கு, ஆமணக்கு, எருக்கு, நீர்முள்ளி, சிறுகண்பீளை, சிறுநெருஞ்சி, வேலிப்பருத்திப் போன்றவற்றை வளர்க்கலாம்.

இட்டேரி என்பது உயிர்வேலிப் பாதையாகும். இருபுறமும் அடர்ந்த உயிர்வேலிக்கு நடுவில் பாதை இருக்கும். கள்ளி வகைகள், முள் செடிகளுக்கு இடையே வேம்பு, மஞ்சக்கடம்பு, நுணா, பூவரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடி வகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடி வகைகள் மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகளும் இந்த உயிர்வேலியில் நிறைந்திருக்கும். இவை விவசாய நிலங்களுக்கு அரணாக இருக்கும்.

இந்த உயிர்வேலியில் கரையான் புற்றுகள், எலி வளைகள் நிறைய இருக்கும். நிழலும், ஈரமும், இலைக்குப்பைகளும் எப்போதும் இந்தப் பகுதியில் இருப்பதால், இந்தப் பகுதியில் எண்ணற்ற பூச்சியினங்களும் வாழும். இவற்றை உணவாகக் கொண்டு, வண்டுகள், நண்டுகள், பாம்பிராணிகள், உடும்புகள், ஓணான்கள், கோழிகள், குருவிகள், அலுங்குகள் என்று பல வகை உயிர்கள் வாழும். இவற்றை உணவாகக் கொண்டு, பாம்புகள், பருந்துகள், நரிகள் போன்ற உயிர்கள் வாழும். கோவைப்பழம், கள்ளிப்பழம், சூரிப்பழம், பிரண்டைப்பழம், கோவைக்காய், களாக்காய், பிரண்டைக் கொழுந்து, சீகைக் கொழுந்து என்று சமையலுக்கு உதவும் பொருள்களும், மூலிகைகளும் கிடைக்கும்.

இந்த உயிர்வேலியில் வாழும் குருவிகள், ஓணான்கள், தவளைகள், பயிர்களைச் சேதப்படுத்தும் பல்வேறு வகையான பூச்சிகளை அழிக்கும். பாம்புகள், ஆந்தைகள் போன்ற உயிரினங்கள் எலிகளைக் கட்டுப்படுத்தும் பறவைகளைப் பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தும். பாம்புகள் பெருக்கத்தை மயில்கள் கட்டுப்படுத்தும். மயில்களின் பெருக்கத்தை, நரிகளும், காட்டுப் பூனைகளும் கட்டுப்படுத்தும்.

விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறத் தொடங்கியதும் இத்தகைய உயிர்வேலிகள் அழிக்கப்பட்டன. மிஞ்சியிருக்கும் விவசாய நிலங்களிலும் உயிர்வேலிகளை அழித்து, காக்கை, குருவிகள் கூடுகட்ட முடியாத வகையில் கம்பிவேலிகளை அமைத்து விட்டோம். உயிர்வேலி என்னும் பெயரில், நாம் வளர்க்கும் மரங்கள், செடிகள், கொடிகள், புதர்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் பலன்கள் அதிகம்.

ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்குத் தீவனம் தரும் சூபாபுல், கருவேல மரங்களை வளர்க்கலாம். மண்ணுக்கு வளம் சேர்க்கும் பசுந்தழை உரமான ஆவாரை, எருக்கு, ஆடாதொடை போன்றவற்றை வளர்க்கலாம். நமக்குத் தீமை செய்யும் எலி போன்ற உயிரினங்களை அழிக்கும் வகையில், பாம்புகள் வாழும் புதர்களை வளர்க்கலாம். பக்கத்து வயல் பங்காளி வரப்பு வெட்டுவதாகச் சொல்லிக் கொஞ்சம் கொஞ்சமாக நமது நிலத்தை அபகரிக்காமல் இருக்க அணை போடலாம்.

அத்தி, நாவல் போன்ற மரங்களை வளர்த்து, அடையாளம் தெரியாத பறவைகளை ஈர்த்து உணவு கொடுத்து, வெவ்வேறு விதைகள் மற்றும் எச்சங்களை உரமாகப் பெறலாம். பயிர்களைத் தாக்கும் புழு, பூச்சிகளைத் தின்னும், ஓணான் மற்றும் பறவைகளை ஈர்க்கலாம். காற்றானது நம் நிலம் வழியே செல்லும்போது ஈரத்தை உறிஞ்ச விடாமல் தடுக்கலாம். புயல் போன்ற ஆபத்தான காலங்களில் காற்றின் வேகத்தைத் தடுத்து, சேதத்தைக் குறைக்கலாம். மழைக்காலத்தில் சத்துமிக்க மேல்மண் அரிக்கப்படாமல் தடுக்கலாம்.

மனிதர்களுக்கும், ஆடு மாடுகளுக்கும் தேவையான மூலிகைச் செடிகள், மரங்கள், நொச்சி, சோற்றுக் கற்றாழையை வளர்க்கலாம். கோடையில் வெப்பத்தின் தாக்கத்தைச் சரிக்கட்ட நுங்கு போன்ற குளிர்ச்சியான உணவுப் பொருள்களை எவ்விதச் செலவோ, பராமரிப்போ இல்லாமல் பெறலாம்.

எதிர்பாராத அவசரச் செலவுக்கு மரங்களை வெட்டி விற்றுச் சமாளிக்கலாம். இலையுதிர்க் காலத்தில் இலவசமாக மூடாக்கைப் பெறலாம். தோட்டத்தைச் சுற்றி நடந்து சுத்தமான மூச்சுக்காற்றைச் சுவாசித்து, உடல் நலத்தை மேம்படுத்தலாம். தேனீக்கள் போன்றவை இருந்தால், தோட்டத்துக்கு மகரந்தம், நமக்குத் தேன் என நன்மைகளைப் பெறலாம்.

வீட்டுத்தோட்ட உயிர்வேலி

தற்போது வீட்டுத் தோட்டம் மற்றும் மாடித் தோட்டம் மக்களிடையே பிரபலமாகி வருவதால் அவற்றுக்கும் உயிர்வேலிகளை அமைக்கலாம்.

நல்ல உயிர்வேலி என்பது, அடர்த்தியாகவும் விரைவாக வளரும் வகையிலும் இருக்க வேண்டும். ஆடாதொடை, ஆடுதின்னாப்பாலை, கிளைரிசிடியா, மருதாணி, கற்றாழை, லெச்சகெட்ட கீரை போன்றவை உயிர்வேலிக்கு ஏற்றவை. இவற்றை ஆடு, மாடுகள் சாப்பிடாது. பாகற்கொடி, அவரைக்கொடி போன்றவை படர உயிர்வேலி உதவுவதால், அவற்றுக்குப் பந்தல் அமைக்கும் செலவும் மிச்சமாகும். வீடும் பசுமை சூழ்ந்து அழகாக இருக்கும்.

கிரீன் டிசைனா என்பது மருதாணியைப் போன்ற இலைகளை உடைய அழகிய வேலிச்செடி. இது பச்சையாக இருக்கும். இதில் பொன்னிறம் கொண்ட கோல்ட் டிசைனா என்னும் வகையும் உண்டு. வருகன் தண்டு என்பது மாட்டின் கொம்பைப் போன்ற வேலித்தாவரம். இது 4-5 அடி உயரம் வளரும். அடிக்கு ஒன்றாக இதனை நட்டால் வேலியாக மாறிவிடும். இதன் விலை சற்றுக் கூடுதலாகும்.

கிளைகளை வெட்டி வைத்தாலே வளர்ந்து விடும் கிளுவை, நல்ல வேலியாக மாறும். கிராமங்களில் இதுவே பெரும்பாலும் வேலியாகப் பயன்படுகிறது. இது நன்கு வளரும் வரை ஆடுகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும். சப்பாத்திக் கள்ளி வகையைச் சேர்ந்த, முள் நீண்டு வளரும் காக்டஸ் சப்பாத்திக் கள்ளி வேலிக்கு ஏற்றது. வயதான மரத்தின் நிழல் எந்த வீட்டின் மீது விழுகிறதோ அதுவே ஆசீர்வதிக்கப்பட்ட வீடாகும். எனவே, உயிர்வேலிகளை அமைப்போம் பல்லுயிரிகளைக் காப்போம்.


உயிர்வேலி DR.G.KALAISELVI e1616350379131

முனைவர் ஜி.கலைச்செல்வி,

முனைவர் என்.ஜெயந்தி, கால்நடை மருத்துவ அறிவியல்

பல்கலைக் கழகம், சென்னை-51.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading