My page - topic 1, topic 2, topic 3

முப்பெரு விழாவாகக் களை கட்டிய கல்லூரி நாள் விழா!

திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையில், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் இந்தக் கல்லூரியில், நடப்புக் கல்வி ஆண்டுக்கான கல்லூரி நாள் விழா, முப்பெரு விழாவைப் போல, மூன்று நாட்கள் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

தொடக்க நாளான 07.09.2022 அன்று, அமராநதி தமிழ் மன்றம் மற்றும் முத்தமிழ் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் பா.குமாரவேல் தலைமை வகித்தார்.

சாகித்ய அகாதமி விருதாளர் நாஞ்சில் நாடன், அமராநதி-2022 இதழை வெளியிட்டும், மன்றத்தைத் தொடக்கி வைத்தும், விழாப் பேருரை நிகழ்த்தினார். எழுத்தாளர் சொல்முகம் நரேன் சிறப்புரையாற்றினார். கால்நடை மருத்துவக் கல்லூரியின் தமிழ் மன்ற அமைப்பாளர் முனைவர் ஆ.குமரவேள், மன்ற அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

இரண்டாம் நாளான 08.09.2022 அன்று, விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகப் பதிவாளர் ப.டென்சிங் ஞானராஜ், விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைத்துச் சிறப்புரை ஆற்றினார். கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் முனைவர் பா.குமாரவேல் தலைமை வகித்தார்.

தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு, கோவை கருணா குழுமத்தைச் சேர்ந்த பி.சௌந்தர்ராஜன், பரிசுகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக உடற்கல்வித் துறையின் மேனாள் துணை இயக்குநர் ஏ.எம்.வெங்கடேசன், கோழி அறிவியல் துறையின் மேனாள் பேராசிரியரும், மாரத்தான் ஓடுநருமான முனைவர் ஆஷா ரஜினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் உடற்கல்வி செயலாளர் முனைவர் அ.கோபிநாதன், விளையாட்டு விழா ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்தார்.

நிறைவு நாளான 09.09.2022 அன்று, கல்லூரி மற்றும் விடுதி நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் பா.குமாரவேல், கல்லூரி ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்தார். கல்லூரி விடுதிக் காப்பாளர் முனைவர் சி.தியோபிலஸ் ஆனந்தக்குமார், விடுதி ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்தார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத் துணை வேந்தர் முனைவர் க.ந.செல்வக்குமார், தலைமை விருந்தினராகப் பங்கேற்று, ஆண்டு மலரை வெளியிட்டு, இளங்கலைக் கல்வியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளைச் சிறப்பாக வழங்கிய மாணவர்களுக்கும் விருதுகளை வழங்கினார்.

ஆர்.கே.ஆர்.கல்விக் குழுமத்தின் நிறுவனர் ஆர்.கே.இராமசாமி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக உடற்கல்வித் துறையின் மேனாள் துணை இயக்குநர் ஏ.எம்.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இவ்வாறாக, மூன்று நாட்கள் நடைபெற்ற கல்லூரி நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.


பசுமை

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks