பாரம்பரிய நெல் இரகங்களின் உண்மை முகங்கள்!

பாரம்பரிய நெல் HP 769ef7c8c9b64b8a4ca9daa7ea2782ab

யர் விளைச்சலைத் தரும் இன்றைய அதிநவீன நெல் இரகங்கள், பெருகி விட்ட மக்கள் தொகைக்கு உணவளிப்பதாக சொல்லிக் கொண்டாலும், நமது பாரம்பரிய நெல் இரகங்களும் மகத்தானவை தான் என்பதையும் நாம் உணர வேண்டும். நமது பாரம்பரிய நெல் இரகங்களைப் பற்றிய பொய்யான கருத்துகளை முதலில் நாம் உடைத்தெரிந்தால், அவற்றின் அற்புதப் பயன்களை இன்றைய சூழலிலும் பயன்படுத்த முடியும் என்பதை உணர முடியும். ஆகவே, நமது பாரம்பரிய நெல் இரகங்களின் உண்மைக்கு மாறான தகவல்களை முதலில் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

பாரம்பரிய நெல் இரகங்கள் உயர் விளைச்சலைத் தராது: இது, ஓரளவில் உண்மையைப் போலத் தோன்றினாலும், உயிர் மற்றும் தாதுச் சத்துகள் குறைந்த உயர் விளைச்சல் நெல் இரகங்களை அதிகளவில் உற்பத்தி செய்வதைவிட, சத்தும் சக்தியும் மிகுந்த பாரம்பரிய நெல் இரகங்களைச் சற்றுக் குறைவாக உற்பத்தி செய்வது ஒன்றும் பாதகமான செயலல்ல. இருப்பினும், இந்தப் பாரம்பரிய நெல் இரகங்களைக் கொண்டு தான் நம் தஞ்சைத் தரணியை நெற்களஞ்சியமாக நம் முன்னோர்கள் வைத்திருந்தனர்.

தஞ்சைத் தரணியில் விளையும் அரிசியைக் கொண்டு தமிழகம் முழுமைக்கும் சோறு போடலாம் என்றும், நம் தமிழகத்தில் விளையும் அரிசியைக் கொண்டு நம் இந்திய நாட்டுக்கே உணவளிக்கலாம் என்றும் கூறக் கேட்டுள்ளோம். நம் முன்னோர்கள் மாடு கட்டிப் போரடித்தால் மாளாது என்று, ஆனை கட்டிப் போரடித்தவர்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.

போதிய நீரில்லை எனில் பாரம்பரிய நெல் இரகங்களைப் பயிரிட முடியாது: உண்மையில் இன்றைய உயர் விளைச்சல் நெல் இரகங்கள் தான் குறைவான நீரில் வளர முடியாமல் சுணங்கி விடுகின்றன. அதிக நீரை நிலத்தில் தேங்க வைத்து, செல்லப் பிள்ளைகளாக வளர்க்கப்படும் உயர் விளைச்சல் நெல் இரகங்கள் தான் நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் போது, அதிகமாக வாடி வெதும்பி விடுகின்றன. ஆனால், நம் பாரம்பரிய நெல் இரகங்கள் அப்படியில்லை.

உதாரணமாக, வறட்சியைத் தாங்கி வளரும் பாரம்பரிய நெல் இரகங்களான மட்டக்கார், கட்டச்சம்பா, புழுதிக்கார், சொர்ணவாரி, வாடன் சம்பா, பிசினிக் களர் பாலை ஆகியன, நீர் கிடைக்கும் போது நன்கு செழித்து வளர்ந்தும், நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டால், தளர்ந்து போகாமல் நின்று தாங்கியும், மீண்டும் நீர் கிடைத்ததும் சிறப்பான மகசூலைத் தரவல்லன. ஆக, நம் பாரம்பரிய நெல் இரகங்கள் உண்மையில் வறட்சியைத் தாங்கி வளரும் இயல்புள்ளவை என்பது இதிலிருந்து உறுதியாகிறது.

பாரம்பரிய நெட்டை இரகங்கள் எளிதில் சாய்ந்து மடிந்து விடும்: நம் பாரம்பரிய நெல் இரகங்கள் இன்றைய உயர் விளைச்சல் இரகங்களை விட அதிக உயரம் கொண்டவை என்பது உண்மை தான். ஆனால், அவை அதிகக் காற்று மற்றும் அதிக மழையால் எளிதில் சாய்ந்து மடிந்து விடும் என்று கூறிவிட முடியாது. அவற்றின் தண்டு வலிமை அயராத புயலிலும் நின்று பேசும் விதமாகவே இருக்கும்.

உதாரணமாக, கம்பஞ்சம்பா என்னும் நெல் இரகமானது, புயல் மற்றும் சூறாவளியைத் தாங்கி நிமிர்ந்து நிற்கக் கூடியது. அதைப் போலவே மடுமுழுங்கி நெல் இரகம் அதிகமான நீரிலும் வளரக் கூடியது. அதைப் போல, சம்பா மோசனம் என்னும் பாரம்பரிய நெல் இரகம் ஏரிப் பகுதிகளிலும் வளர்ந்து வளம் தரக்கூடியது.

பாரம்பரிய நெல் இரகங்கள் இயற்கை வேளாண்மையையே சார்ந்துள்ளன: உண்மையில் இன்றைய உயர் விளைச்சல் இரகங்களும் கூட இயற்கை வேளாண்மையில் நன்கு வளர்ந்து அதிக விளைச்சலைத் தரக்கூடியவை தான். ஆகவே, செயற்கை இடுபொருள்களை அள்ளிக் கொட்டி, செலவைக் கூட்டி, இலாபத்தைக் குறைக்கும் செயற்கை வேளாண்மையை விட, குறைவான செலவில் இயற்கை வேளாண்மையில், பாரம்பரிய நெல் இரகங்களைப் பயிரிட்டு அதிக இலாபத்தைப் பெறலாம்.

அதைப் போல, இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப விரும்பாதவர்கள் கூட, பாரம்பரிய நெல் இரகங்களை, நவீன வேளாண்மையில் வளர்த்து அதிக மகசூலைக் காண முடியும். ஆக, இன்றைய இரசாயன வேளாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை ஆகிய இரண்டுக்கும் உகந்தவை நமது பாரம்பரிய நெல் இரகங்கள்.

பாரம்பரிய நெல் இரகங்கள் விளைய அதிக நாட்களாகும்: அனேகப் பாரம்பரிய இரகங்கள் அதிக வயதை உடையனவாக இருந்தாலும், குறைவான நாட்களில் விளையும் நெல் இரகங்களும் உள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, அறுபதே நாட்களில் பூக்கும் அறுபதாம் குறுவை. இன்றைய உயர் விளைச்சல் நெல் இரகங்களில் இப்படி அறுபது நாட்களில் பூக்கும் நெல் இரகங்களே கிடையாது.

அத்துடன், நமது பாரம்பரிய நெல் இரகங்களில் காட்டுக் குத்தாலம், கொண்ணக் குறுவை, குள்ளக்கார், அறுபதாம் கொடை ஆகியனவும் குறுகிய காலத்தில் விளையக் கூடியவை தான். இந்த மிகக் குறுகிய கால நெல் இரகங்களைக் கொண்டு ஆண்டுக்கு ஐந்து போகம் விளைவிக்க முடியும்.

பாரம்பரிய நெல் இரகங்களில் பாசுமதியைப் போன்ற ஏற்றுமதிக்கான இரகங்கள் இல்லை: உண்மையில் நம் பாரம்பரிய நெல் இரகங்கள் எல்லாம் மிக இலேசான வாசனை மிக்கவையே. அவற்றைச் சமைத்து உண்ணும் போது சுவையும் ருசியும் கூடுதலாக இருக்கும். இருப்பினும், வாசமிக்க பாரம்பரிய நெல் இரகங்களும் உள்ளன.

உதாரணமாக, மாம்பூ வாசகன், இலுப்பைப்பூ வாசகன், வாழைப்பூ வாசகன், மகிழம்பூ வாசகன், சீரகச்சம்பா, மல்லிகைச் சம்பா, மைசூர் சம்பா, கற்பூர வாசகன் என்று, பலவித வாசனை இரகங்கள் இருப்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நெல் இரகங்களின் மகத்துவம் மற்றும் மருத்துவக் குணங்களை உலகறியச் செய்வதன் மூலம், நமது பாரம்பரிய நெல் இரகங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்.

களர் உவர் நீரிலும் நிலத்திலும் பாரம்பரிய இரகங்களை வளர்க்க முடியாது: இதுவும் தவறான தகவல் தான். உண்மையில் இரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்துகளால் நம் நிலமும் நீரும் களர் உவராக மாறிப் பாதிக்கப்பட்டு உள்ளன. இத்தகைய சூழலில் இரசாயன உரங்களை இடாமல், இயற்கை வேளாண்மை மூலம் களர் உவர் நிலம் மற்றும் களர் உவர் நீரில் பயிரிட ஏற்ற பாரம்பரிய நெல் இரகங்கள் உள்ளன. அவையாவன: களர் சம்பா, உவர் சம்பா, கல்லுண்டை, குழியடிச்சான்.

பாரம்பரிய நெல் இரகங்களை மக்கள் விரும்புவதில்லை: எந்த ஒரு மாற்றத்தையும் மக்கள் முதலில் எதிர்க்கவே செய்வார்கள். ஆனால், அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வைக் கொடுத்தால், அதைப் படிப்படியாக ஏற்கும் தன்மைக்கு மாறுவார்கள். இன்றைய இரசாயன வேளாண்மைச் சூழலில், அதிகளவில் நீரிழிவு மற்றும் புற்று நோய்க்கு உள்ளாகியுள்ள மக்கள், அவற்றைச் சமாளிக்க உதவும் இராசயன மருந்துகளை விருப்பம் இல்லாமல் தான் எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

இவர்களுக்கு, சத்தும் சக்தியும் மிகுந்த காட்டுயானம் போன்ற நம் பாரம்பரிய நெல் இரகங்களின் மருத்துவக் குணங்களை எடுத்துரைத்தால், மனமுவந்து சமைத்து உண்பார்கள். இப்போது, நமது பாரம்பரிய நெல் இரகங்கள் குறித்த விழிப்புணர்வை, தமிழகத்தில் உள்ள பல்வேறு இயற்கை மருத்துவ அமைப்புகள் ஏற்படுத்தி வருகின்றன.

இவ்வித அமைப்புகள் இயற்கை வேளாண்மையில் விளைவித்த பாரம்பரிய நெல் இரகங்களின் உற்பத்தியை அதிகளவில் எதிர்பார்க்கின்றன. இவற்றை இயற்கை விவசாயப் பெருமக்கள் தொடர்ந்து உற்பத்தி செய்து கொடுத்தால், உறுதியாக மக்களுக்கு நலவாழ்வு கிடைக்கும்.

எனவே, நம் பாரம்பரிய நெல் இரகங்களைப் பற்றிய தவறான எண்ணங்களைப் புறந்தள்ளுவோம். இனி, பாரம்பரிய நெல் இரகங்களை நாம் ஏன் பயிரிட வேண்டும் என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

பூச்சி மற்றும் நோயெதிர்ப்பு சக்தி மிக்கவை நம் பாரம்பரிய நெல் இரகங்கள்: இன்றைய உயர் விளைச்சல் இரகங்களில் அதிக இலாபம் ஈட்டும் எண்ணத்தில் பூச்சி மற்றும் பூசணக் கொல்லிகளை அதிகமாகப் பயன்படுத்தி, விளை நிலத்தை மலடாக்கியும், காக்கும் நீரை விஷமாக்கியும், மனித இனத்தை நோய்களுக்கு உள்ளாக்கி வருகிறோம்.

ஆனால், நம் பாரம்பரிய நெல் இரகங்கள் அனைத்தும் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்களுக்கு உள்ளாகாமல் இருப்பவை. குறிப்பாக, செம்பாலை, குருவிக்கார், குதிரைவால் சம்பா, கம்பஞ்சம்பா போன்றவை, பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதலைத் தாங்கி வளரும் சக்தி மிக்கவை.

சூழல்களுக்கு ஏற்ற பாரம்பரிய நெல் இரகங்கள்: இன்றைய உயர் விளைச்சல் இரகங்கள் அதிக மகசூலைத் தந்தாலும், சூழல் மாறும் போது கடுமையான விளைச்சல் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், நம் பாரம்பரிய நெல் இரகங்களில் பலதரப்பட்ட சூழல்களையும் தாங்கி நல்ல மகசூலைத் தரும் இரகங்கள் உள்ளன.

எடுத்துக்காட்டுகள்: களர் நிலத்துக்குக் களர் சம்பா, உவர் நிலத்துக்கு உவர் சம்பா, அதிக நீரில் விளைய மடுமுழுங்கி, தலைஞாயிறு, ஏரிப் பகுதிக்குச் சம்பா மோசனம், புயல் மற்றும் சூறாவளியைத் தாங்கும் கம்பஞ் சம்பா, மிகக் குறுகிய காலத்தில் விளையக் காட்டுக் குத்தாலம், கொண்ணக் குறுவை, குள்ளக்கார், அறுபதாம் குறுவை, அறுபதாம் கார்.

பல்வேறு பருவங்களுக்கு ஏற்ற பல்வேறு வயதுள்ள நெல் இரகங்கள்; பாரம்பரிய நெல் இரகங்களில், குறுவைக்கு ஏற்ற குறுகிய கால இரகங்களாக, ஒட்டுக் கிச்சிலி, வெள்ளைக் குருவிக்கார் ஆகியனவும்; சம்பா பருவத்துக்கு ஏற்ற மத்திய கால இரகங்களாக, வெள்ளைப் பொன்னி, சேலம் சம்பா, கண்டகச் சம்பா, சீரகச்சம்பா, கிச்சடிச்சம்பா, கருத்தக்கார் ஆகியனவும்; நீண்ட கால இரகங்களாக, மாப்பிள்ளைச் சம்பா, வாடன் சம்பா, கவுனி ஆகியனவும்; மிக நீண்ட கால இரகங்களாக நீலச்சம்பா போன்றவையும் உள்ளன.

காட்டுயானத்தைப் பயிரிடும் நிலத்தில் உதிரும் நெல் மணிகளே, அடுத்த போகத்தில் பயிர்களாக முளைத்து விடும். இதனால், முன்பட்டத்தில் காட்டுயானம் பயிரிட்டிருப்பின், பின்பட்டத்தில் உழவடை வேலை எதையும் செய்யாமலே, நிறைவான பலனைப் பெற முடியும்.

சுவையும் தரமும் அதிகமாக இருக்கும்: பாரம்பரிய நெல் இரகங்கள் சத்தும் சுவையும் நிறைந்தவை. வடித்த கஞ்சி முதல் பழைய சாதம் வரை ருசியாக இருக்கும். இட்லி, தோசை, இடியாப்பம் என, அனைத்து வகை உணவுகளுக்கும் ஏற்றவை. சோறு மிக அருமையாக இருக்கும். நான்கு நாட்கள் ஆனாலும் பழைய சோறு கெட்டுப் போகாமல் இருக்கும். அரிசியின் சேமிப்புத் தன்மையும் அதிகமாக இருக்கும். இன்றைய உயர் விளைச்சல் அரிசியைப் பழைய சோறாக உண்ணும் போது அது சுவையற்றதாக இருக்கும். ஆனால், நம் பாரம்பரிய அரிசியை அதன் சுவைக்காகவே பழைய சோறாக வைத்துச் சாப்பிடலாம்.

சத்துகள் நிறைந்திருத்தல்: பாரம்பரிய நெல் இரகங்களில், புரதம், இரும்பு, கால்சியம், நார்ச்சத்து ஆகிய சத்துகள் அதிகமாக உள்ளன. நாம் நோயின்றி வாழ, உயிர்ச் சத்துகள் மற்றும் தாதுச் சத்துகள் கொண்ட உணவை எடுக்க வேண்டும். இவற்றை, இயற்கை வேளாண்மையில் விளையும் பாரம்பரிய நெல் இரகங்கள் கொண்டுள்ளன. இந்த நெல் இரகங்களைக் கைக்குத்தல் அரிசியாக்கி, அரிசியின் மேல் தோலை நீக்காமல் உணவாகப் பயன்படுத்த வேண்டும்.

இதன் காரணமாக, நாம் முழுமையான நார்ச்சத்துள்ள உணவை எடுக்கும் நல்ல உணவு முறைக்கு மாறுகிறோம். பாரம்பரிய அரிசி வகைகளில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் நம் உடலைப் பாதுகாக்கும். மலச்சிக்கலே ஆதி நோய் என்றும், மற்றதெல்லாம் அதிலிருந்து வரும் மீதி நோய்கள் என்றும், நம் முன்னோர்கள் கூறுவர்.

அதைப் போலவே, நீரிழிவு உள்ளவர்களும் நார்ச்சத்து அதிகமுள்ள அரிசியை உண்ணும் போது, அது சீராகவும், நீடித்தும், செரிமானமாகி, மெதுவாகச் சர்க்கரையை இரத்தத்தில் சேர்க்கும். இதனால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் அதிகப் பசியுணர்வும், வெலவெலப்பும் உறுதியாகக் குறையும்.

மருத்துவக் குணங்கள் அதிகம்: நம் பாரம்பரிய நெல் இரகங்கள் மருத்துவக் குணங்களை மிகுதியாகக் கொண்டுள்ளன. உதாரணமாக, சர்க்கரை நோய்க்குக் காட்டுயானம், சிவப்புக் குடவாழை; கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டம் தரும் பூங்கார்; வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் ஆற, மாப்பிள்ளைச் சம்பா; சுகப்பிரசவம் நிகழக் கவுனி; நாய்க்கடி விஷம் இறங்கக் கறுப்புக் கவுனி; பித்த வெப்பம் போக, அன்னமழகி அரிசி மற்றும் இலுப்பைப்பூ சம்பா; தொழுநோய் மற்றும் யானைக்கால் நோய்க்குக் கருங்குறுவை;

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் நீங்க நவரை அரிசிக்கஞ்சி; புஜபலம் பெற கல்லுருண்டை அரிசி; தாது விருத்தியும் பலமும் பெறக் காடைச்சம்பா மற்றும் குறுஞ்சம்பா; பாலுணர்வை அதிகரிக்கச் சண்டிக்கார்; மூலநோய் மற்றும் மஞ்சள் காமாலை குணமடையக் கருத்தக்கார்; தேகச் செழுமைக்குக் கிச்சிலிச் சம்பா, மூன்று விதமான தோஷம் நீங்கக் கோடைச்சம்பா மற்றும் குழந்தை பெற்ற தாய்க்குப் பத்திய கஞ்சி வைக்கச் சூரக்குறுவை என்று, ஏராளமான நெல் இரகங்கள் இருக்கின்றன.

ஒற்றை நாற்று நடவு முறைக்குப் பாரம்பரிய நெல் இரகங்கள் சிறந்தவை: குத்துக்கு ஒரு நாற்று வீதம் நட்டு நன்கு தூர்ப்பிடிக்க வைத்து, அதிக மகசூலைப் பெற முடியும். இதில் நம் பாரம்பரிய நெல் இரகங்களின் சிறப்பு, நாற்றுகள் அனைத்தும் அழுத்தமாக இருப்பது. இதனால், அவற்றை இலகுவாகப் பிரித்து ஒவ்வொன்றாக நட முடியும். மேலும், நட்ட நாற்றுகள் அதிகளவில் சேதமாகாமல் விரைவாக நிலைக்கு வந்து விடும். இந்த நாற்றுகளை நடுவதற்குக் குறைவான ஆட்களே போதும். ஆக, குறைவான விதை மற்றும் குறைவான செலவில் அதிக மகசூலைப் பெற முடியும்.

வைக்கோலை நிறையத் தரும் பாரம்பரிய நெல் இரகங்கள்: நம் பாரம்பரிய நெல் இரகங்கள், அதிக உயரமாக வளர்வதுடன், கீழே சாய்ந்து மடிந்து போகாமலும் இருக்கும். இந்த நெல் இரகங்கள் தானியத்தைத் தருவதுடன் கணிசமான அளவில் வைக்கோலையும் தரும். இதனால், கால்நடை வளர்ப்பிலும் சிறக்க முடியும்.

எலி வெட்டு அதிகம் இருக்காது: நம் பாரம்பரிய நெல் இரகங்களின் அடித்தண்டு கெட்டியாக இருப்பதால், அதை எலிகளால் எளிதாக வெட்ட முடியாது. இதனால், எலிப்பெருக்கம் கட்டுப்படுவதோடு, மகசூல் இழப்பையும் தவிர்க்க முடியும்.

மாற்று ஏற்பாடாக விளங்கும்: எதிர்பாராத சூழலில் காணாமல் போகும் உயர் விளைச்சல் இரகங்களுக்கு மாற்றாகப் பாரம்பரிய நெல் இரகங்கள் விளங்கும். ஒரே விதமான மரபணுத் தொகுப்பை உடைய உயர் விளைச்சல் நெல் இரகங்கள், எதிர்பாராத புறச்சூழல் வளர்ப்பில் முற்றிலுமாக அழிந்து போகலாம். அத்தகைய காலத்தில் நம் பாரம்பரிய நெல் இரகங்கள் நல்ல மாற்றாக இருக்கும். பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலை எதிர்க்கும் சக்தியுடன் இருக்கும் நமது நெல் இரகங்கள், ஒரு மூலாதாரமாக விளங்கும். அதைப் போல, களர், உவர் நிலங்களுக்கு ஏற்ற புதிய நெல் இரகங்களை உருவாக்க, இவை அடித்தளமாக இருக்கும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும், கால மாற்றத்தின் கட்டாயமாகும். மாற்றத்துக்கு ஏற்ப மாறுவதே நிலைப்பதற்கு உரிய குணமாகும். ஆகவே, வேண்டாத பழையதைக் கழிப்பதும், வேண்டிய பழையதைக் காப்பதும் நம் கடமையாகும். அதைப் போலவே, காலத்துக்கு ஏற்ப, புதியன ஏற்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.


பாரம்பரிய நெல் KRISHNAN

முனைவர் வே.கிருஷ்ணன்,

முனைவர் மு.தமிழரசி, முனைவர் த.ஆனந்தன்,

ஜவஹர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரி, காரைக்கால்.

முனைவர் அ.அனுராதா, வேளாண்மைக் கல்லூரி, கீழ்வேலூர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading