My page - topic 1, topic 2, topic 3

நிலக்கடலையில் புகையிலை வெட்டுப்புழு மேலாண்மை!

Pachai boomi groundnut nutritious

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலைப் பயிரை, புகையிலை வெட்டுப்புழு தாக்கி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, விவசாயிகளுக்கு வழங்கியுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நிலக்கடலையைத் தாக்கும் புகையிலை வெட்டுப்புழு, ஸ்போடாப்டிரா லிட்டுரா என்னும் பூச்சியினத்தைச் சார்ந்தது, இதன் முட்டைக் குவியல்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும், புழுக்கள் இளம் பச்சை நிறத்தில் இருக்கும், உடலில் கறுப்புக் கோடுகள் காணப்படும், அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும், முன் இறக்கையில் வெள்ளை நிறக்கோடும், பின் இறக்கையில் பழுப்புக் கோடும் காணப்படும்.

நூறு மீட்டர் வரிசையில் 8 முட்டைக் கூட்டம் இருந்தால், அது பொருளாதாரச் சேத நிலையைக் குறிக்கும். இந்த நிலையில் இப்புழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகமிக அவசியமாகும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

ஆமணக்கு அல்லது சூரியகாந்தியைப் பொறிப்பயிராக நடவு செய்திருந்தால், புகையிலை வெட்டுப் புழுக்களுக்குக் காரணமான, பெண் அந்துப்பூச்சி, ஆமணக்கு மற்றும் சூரியகாந்தி இலைகளின் மேற்புறத்தில் முட்டைகளை இடும், அப்போது அந்த முட்டைக் குவியல்களையும், புழுக்கள் இருந்தால் அவற்றையும் சேகரித்து அழிக்கலாம்.

விளக்குப்பொறியை வைத்து அந்துப்பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்.

எக்டருக்கு 2 கிலோ கார்பரில் 50 டபிள்யூபி அல்லது 750 மி.லி. குயினால்பாஸ் 25 ஈ.சி. அல்லது 750 மி.லி. டைகுளோரோவாஸ் 76 டபிள்யூ.எஸ்.சி. அல்லது 300-400 கிராம் டைபுளுபெச்சுரான் 25 டபிள்யூபி மருந்தைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

எக்டருக்கு 2 சத வேப்ப எண்ணெய்க் கரைசல் அல்லது அரிசித்தவிடு 12.5 கிலோ + பனங்கட்டி 1.25 கிலோ + கார்பரைல் 1.25 கிலோ + தண்ணீர் 7 லிட்டர் அளவில் கலந்த நச்சுணவை இட்டு, வளர்ந்த புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

நீயுக்ளியார் பாலிஹெட்ரோசிஸ் வைரஸைப் பயன்படுத்தி, காய்ப் புழுக்களை அழிக்கலாம்.

ஊடுபயிராக, அவரை மற்றும் நிலக்கடலையை, 1:4 விகிதத்தில் பயிரிட்டு, புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

எக்டருக்கு 100-125 மி.லி. இமிடாகுளோபிரிட் 17.8% எஸ்.எல். அல்லது 1400 மி.லி. குயினால்பாஸ் 25% ஈ.சி. என்னும் பூச்சிக்கொல்லியைத் தெளித்து வளர்ந்த புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும், உரிய காலத்தில் பயிர்ப் பாதுகாப்பைச் செய்தால், பூச்சி மற்றும் நோய்கள் மூலம் அதிகச் சேதாரம் ஏற்படாமல் தடுத்து, நல்ல மகசூலை எடுக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு, உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகிப் பயன் பெறலாம்.


பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks