My page - topic 1, topic 2, topic 3

TNAU விதை அமிர்தம்!

TNAU விதை அமிர்தம் என்பது, ஒரு திரவப் பொருளாகும். இது, நீர் உறிஞ்சும் தன்மையைக் கூட்டும் ஒரு பாலிமர் திரவத்தில், முளைப்புத் திறன் மற்றும் வேர் வளர்ச்சியைக் கூட்டும் வகையிலான, இராசயனப் பொருள்களைச் சரி விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்தத் திரவம், விதைகளில் உள்ள செல்களில் புகுந்து அவற்றின் ஆற்றலை மேம்படுத்துகிறது.

விதைகளின் மேல் இந்தத் திரவம் சீராகப் பரவியுள்ளதை அறியும் வகையில், இதில் சிவப்பு நிறமியும் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த TNAU விதை அமிர்தம் அனைத்து விதைகளிலும் முழுமையாகப் பரவுவதால், விதைகள் நன்றாக முளைத்து, வீரியமிக்க நாற்றுகளாக வளர்கின்றன.

பயன்கள்

+ TNAU விதை அமிர்தம் பூசப்பட்ட விதைகள், குறுகிய காலத்தில் அதிக நீரை ஈர்த்து, விதை முளைப்புக்கான வேதி மாற்றங்களை விரைவாக அடைகின்றன.

+ பக்க வேர்கள் முப்பது சதம் வரை கூடுதலாக உருவாகின்றன.

+ செடிகளின் தண்டு திடமாகவும், இலைகள் கரும் பச்சையாகவும் இருக்கின்றன.

+ இப்படி, வீரியமாக வளரும் நாற்றுகள், வயலில் நல்ல வளர்ச்சியை அடைகின்றன.

+ வேர்கள் அதிகமாக இருப்பதால், மண்ணில் உள்ள நீரையும் சத்துகளையும் நன்கு கிரகித்து, பயிர்கள் நன்றாக வளர்கின்றன.

+ மேலும், வறட்சியை, நோய் மற்றும் பூச்சித் தாக்குதலை, தாங்கி வளரும் வகையில் உள்ளன.

பயன்படுத்தும் முறை

பெரிய வாளியில் ஒரு கிலோ விதையை எடுத்துக் கொள்ள வேண்டும். தடித்த குச்சியால் இந்த விதைகளை ஒருவர் கிளறியபடி இருக்க வேண்டும். இன்னொருவர், எல்லா விதைகளிலும் TNAU விதை அமிர்தம் சீராகப் படும்படி, மெதுவாக ஊற்ற வேண்டும்.

இந்த விதைகள், 2-3 நிமிடங்களில் சிவப்பாக மாறியதும், தார்ப்பாயில் கொட்டி உலர்த்த வேண்டும். 10-20 நிமிடங்களில் விதைகள் நன்றாகக் காய்ந்து விடும்.

இப்படி முலாம் பூசிய விதைகளை உடனே விதைக்கலாம். அல்லது சில மாதங்கள் வரை வைத்திருந்தும் விதைக்கலாம்.

TNAU விதை அமிர்தம், அனைத்துப் பயிர்களுக்கும் ஏற்ற வகையில், தயாரிக்கப் படுகிறது. அதிகளவிலான விதைகளை முலாம் பூசுவதற்கு ஏற்ற வகையில், சிறிய மற்றும் பெரிய இயந்திரங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

இவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக விதை மையத்தில் கிடைக்கின்றன.

TNAU விதை அமிர்தம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் அனைத்து மையங்களிலும் கிடைக்கிறது.

விதைகளும், அளவும் (கிலோ/மி.லி.)

நெல்: 25 மி.லி.

மக்காச்சோளம்: 11 மி.லி.

சோளம்: 11 மி.லி.

கம்பு: 11 மி.லி.

கேழ்வரகு: 70 மி.லி.

உளுந்து, பாசிப்பயறு, சோயா மொச்சை, மொச்சை: 10 மி.லி.

நிலக்கடலை: 11 மி.லி.

ஆமணக்கு: 10 மி.லி.

எள்: 68 மி.லி.

பருத்தி: 11 மி.லி.


செய்தி: இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks