கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019
தட்டைப் பயறானது காராமணி எனவும் அழைக்கப்படும். இது தமிழ்நாட்டில் 0.68 இலட்சம் எக்டரில் பயிரிடப்படுகிறது. சேலம், திண்டுக்கல், கோவை, தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இந்தச் சாகுபடி அதிகம்.
எக்டருக்குச் சராசரியாக, மானாவாரியில் 1,000 கிலோவும், இறவையில் 1,600 கிலோவும் விளைகிறது. இதைப் பயறாகவும், பச்சைக் காயாகவும் பயன்படுத்தலாம். காய்கள் பொரியலுக்குச் சிறப்பாக இருக்கும். இது நிழலைத் தாங்கி வளரும்.
பயறுக்கான வகைகள்
கோ 6: தமிழகம் முழுதும், ஆனி-ஆடி, புரட்டாசிப் பட்டங்களில் மானாவாரியாக, கோடையில் இறவைப் பயிராகப் பயிரிடலாம். வயது 65-70 நாட்கள். பயறு இள மஞ்சளாக இருக்கும். மானாவாரியில் எக்டருக்கு 670 கிலோ கிடைக்கும்.
கோ(சிபி)7: தமிழகம் முழுதும், ஆனி-ஆடி, புரட்டாசிப் பட்டங்களில் மானாவாரியாக, கோடையில் இறவைப் பயிராகப் பயிரிட உகந்தது. வயது 70-75 நாட்கள். பயறு வெளிர் பழுப்பு நிறத்தில் சதுரமாக இருக்கும். மானாவாரியில் எக்டருக்கு 1,000 கிலோவும், இறவையில் 1,600 கிலோவும் கிடைக்கும்.
வம்பன் 1: தமிழகம் முழுதும் ஆடி, புரட்டாசிப் பட்டங்களில் மானாவாரியாகப் பயிரிடலாம். வயது 55-65 நாட்கள். பயறு வெள்ளையாக இருக்கும். மானாவாரியில் எக்டருக்கு 950 கிலோ கிடைக்கும்.
பையூர் 1: வேலூர், ஈரோடு மாவட்டங்களில் ஆடிப் பட்டத்திலும், தர்மபுரி, கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், கோவை, கன்னியாகுமரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டத்திலும் பயிரிட ஏற்றது. வயது 90 நாட்கள். பயறு சிவப்பாக இருக்கும். மானாவாரியில் எக்டருக்கு 900 கிலோ கிடைக்கும்.
வம்பன் 3: நீலகிரி, கன்னியாகுமரி நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் புரட்டாசிப் பட்டத்தில் மானாவாரியாகப் பயிரிடலாம். வயது 75-80 நாட்கள். மானாவாரியில் எக்டருக்கு 1,000 கிலோ கிடைக்கும். இடைப்பட்ட உயரம், ஒரே நேரத்தில் முதிர்தல் இதன் சிறப்பு. பயறு இளம் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதில் புரதம் 25.2% உள்ளது.
காய்க்கான வகைகள்
வம்பன் 2: தமிழகம் முழுதும் ஆடி, புரட்டாசி மற்றும் கோடை இறவைப் பட்டங்களில் பயிரிட ஏற்றது. வயது 75-80 நாட்கள். எக்டரில் 10,580 கிலோ காய்கள் கிடைக்கும்.
சாகுபடி மேலாண்மை
நிலம் தயாரித்தல்: மண்ணின் கடினத் தன்மையை நீக்க எக்டருக்கு 2 டன் சுண்ணாம்பு மற்றும் 12.5 டன் தொழுவுரம் அல்லது மட்கிய தென்னை நார்க்கழிவை இட வேண்டும். பின்பு, நிலத்தை நன்கு உழுது பாத்திகளை அமைக்க வேண்டும்.
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் அல்லது 2 கிராம் திரம் அல்லது கார்பென்டாசிம் வீதம் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். டிரைக்கோடெர்மா விரிடியைப் பயன்படுத்தினால், பூசணக் கொல்லிகளான திரம் அல்லது கார்பென்டாசிம் விதை நேர்த்தியைத் தவிர்க்க வேண்டும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்ட சிஒசி 10 என்னும் மேம்படுத்தப்பட்ட ரைசோபிய ராசி 3 பொட்டலம், பாஸ்போபாக்டரியா 3 பொட்டலத்தை அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். இது ஒரு எக்டருக்கான அளவாகும்.
நேர்த்தி செய்த விதைகளை 15 நிமிடங்கள் உலர்த்தி விதைக்க வேண்டும். விதைநேர்த்தி செய்யவில்லை யென்றால், 10 பொட்டலம் ரைசோபியம், 10 பொட்டலம் பாஸ்போபாக்டீரியாவை, 25 கிலோ தொழுவுரம் மற்றும் 25 கிலோ மணலுடன் கலந்து நிலத்தில் இட வேண்டும்.
கடின விதை நேர்த்தி: விதைகளை 100 பிபிஎம், அதாவது, 10 கிராம் துத்தநாக சல்பேட், 100 லிட்டர் நீர் கலந்த கரைசலில் நான்கு மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். இது, வறட்சியைத் தாங்கிப் பயிர்கள் வளர உதவும்.
விதைப்பு: தனிப்பயிராக விதைக்க, எக்டருக்கு 20 கிலோ விதைகள் தேவை. கோ 6, வம்பன் 1, பையூர் 1 ஆகியவற்றை 30க்கு 15செ.மீ. இடைவெளியில் விதைக்கலாம். கோ(சிபி)7, வம்பன் 2 ஆகியவற்றை 45க்கு 15செ.மீ. இடைவெளியில் விதைக்கலாம்.
உர மேலாண்மை: மானாவாரிப் பயிருக்கு அடியுரமாக எக்டருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச் சத்தைத் தரும் உரங்களை இட வேண்டும். இறவைப் பயிராக இருந்தால், 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும்.
அடியுரமாக 25 கிலோ ஜிங்க் சல்பேட்டை இட வேண்டும். குறிப்பு: மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட்டாக இடவில்லை என்றால் ஜிப்சம் மூலமாகக் கந்தகத்தை இட வேண்டும்.
பாசனம்: விதைத்ததும் ஒருமுறை, பின் மூன்று நாட்கள் கழித்து ஒருமுறை நீரைப் பாய்ச்ச வேண்டும். மண் மற்றும் பருவ நிலைகளைப் பொறுத்து 10-15 நாட்கள் இடைவெளியில் நீரைப் பாய்ச்சலாம். பூக்கும் மற்றும் காய்க்கும் போது நீர் அவசியம். தேவைக்கு மேல் பாசனம் செய்தால் தழைகள் கூடுதலாகி, காய்கள் பிடிக்காமல் போகலாம்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி
ஏக்கருக்கு ஒரு லிட்டர் பென்டிமித்திலின், 200 லிட்டர் நீர் வீதம் கலந்து, விதைத்த மூன்று நாட்களுக்குப் பின் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். அப்போது நிலம் ஈரமாக இருக்க வேண்டும். பிறகு, 20-25 நாட்களில் கைக்களை எடுக்க வேண்டும். களைக்கொல்லியைத் தெளிக்காத நிலையில், விதைத்த 21 மற்றும் 40 நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.
பூச்சி மேலாண்மை
2.5 செ.மீ. நீளமுள்ள தண்டில் 20 அசுவினிகள், செடிக்கு 3 காய்ப்புழுக்கள், தண்டு ஈயால் செடிகள் 10 சதம் சேதமடைதல் போன்றவை பொருளாதாரச் சேதநிலையைக் குறிக்கும். எனவே, அசுவினியைக் கட்டுப்படுத்த, விதைத்த 15 நாட்கள் கழித்து, ஏக்கருக்கு இமிடாகுளோபிரிட் 18.7 எஸ்.எல். 100 மில்லி அல்லது அசிப்பேட் 70 எஸ்.பி. 400 கிராம் வீதம் தெளிக்க வேண்டும்.
தண்டு ஈயைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு 5 மில்லி வீதம் இமிடாகுளோபிரிட் 18.7 எஸ்.எல். வீதம் கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
புள்ளிக் காய்ப்புழு நீல வண்ணத்துப்பூச்சி, நாவாய்ப்பூச்சி மற்றும் பூ வண்டைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு, 60 மில்லி குளோர் அன்டானிலிப்ரோல் 18.5 எஸ்,சி, அல்லது 50 மில்லி புளுபென்டியமைட் 240 எஸ்.சி. அல்லது 150 மில்லி இன்டாக்சாகார்ப் அல்லது 500 கிராம் குயினால்பாஸ் 1.5% தூளை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
சேமிப்பில் தாக்கும் பூச்சிகள்: பயறு வண்டுகளைக் கட்டுப்படுத்த, 10% ஈரப்பதம் இருக்கும் வரை பயற்றை உலர்த்திச் சேமிக்க வேண்டும். நிலத்திலிருந்து வந்த வண்டுகளை, குழிப்பொறி அல்லது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பொறி மூலம் கவனித்து, பயற்றைக் காய வைத்தால், அந்த வண்டுகளின் முட்டைகளை அழிக்கலாம்.
100 கிலோ விதைக்கு ஊக்குவிக்கப்பட்ட களிமண் 1 கிலோ அல்லது புங்கம் எண்ணெய் 1 லிட்டர் அல்லது த.நா.வே.ப.வேப்பெண்ணெய் 60 சி. வீதம் கலந்து பாலித்தீன் உள்ளுறை கொண்ட சாக்குப் பைகளில் சேமிக்கலாம்.
நோய் மேலாண்மை
துரு நோய்: நோயின் அறிகுறி தெரிந்ததும் மற்றும் 15 நாட்கள் கழித்து, குளோரோதலானில் மருந்தை ஏக்கருக்கு 0.2 சதம் வீதமும், அதைத் தொடர்ந்து 3 சத வேப்பெண்ணெய்க் கரைசலையும் தெளிக்க வேண்டும்.
வேரழுகல் நோய்: எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடியை, மட்கிய 50-100 கிலோ தொழுவுரம் அல்லது மணலில் கலந்து, விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு நிலத்தில் இட வேண்டும்.
அசுவினியால் பரவும் தேமல் நோய்: விதைத்த 30 நாட்களில் தேமல் நோயால் பாதிக்கப்படும் இளம் பயிர்களைப் பிடுங்கி அழிக்க வேண்டும். அடுத்து, எக்டருக்கு 500 மில்லி மீத்தைல் டெமட்டான் 25 இ.சி. வீதம் 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
விதைக்காக உற்பத்தி செய்தல்
நிலம்: தான்தோன்றிப் பயிர் இல்லாததாக இருக்க வேண்டும். அதாவது, அந்த நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிரைச் சாகுபடி செய்திருக்கக் கூடாது. அப்படிப் பயிரிட்டிருந்தால், சான்றளிப்புத் துறையால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருக்க வேண்டும்.
பயிர் விலகு தூரம்: விதை உற்பத்திக்கான செடிகள், பிற இரகம் மற்றும் சான்று பெறாத அதே இரகத்தைச் சேர்ந்த செடிகளுள்ள நிலத்திலிருந்து 5 மீட்டர் தள்ளியிருக்க வேண்டும்.
விதைகள்: நிறமாறிய விதைகளை நீக்கி, 75%க்கும் கூடுதலாக முளைப்புத் திறனுள்ள விதைகளை விதைக்க வேண்டும்.
இடைக்காலப் பயிர் மேம்பாடு: செடியின் கொடியைப் போன்ற கொழுந்தை அவ்வப்போது கிள்ளிவிட வேண்டும். தேமல் நோய் தாக்கிய செடிகளை உடனுக்குடன் பிடுங்கி அழித்து விட வேண்டும்.
இலைவழி உரத்தெளிப்பு: காய்ப்பிடிப்பை அதிகரிக்க, செடிகள் பூக்கத் தொடங்கியதும் ஒருமுறையும், பூக்கள் அதிகமாக உள்ளபோது ஒருமுறையும், 40 பி.பி.எம். நாப்தலின் அசிட்டிக் அமிலத்தைத் தெளிக்க வேண்டும்.
அறுவடை: பூக்கள் பூத்த 27-30 நாட்களில் விதைகள் முதிர்ச்சியடையும். காய்கள் பழுப்பாக மாறுதல், விதைகள் மரப்பட்டை அல்லது பல்வேறு நிறங்கள் கலந்த தன்மையை அடைதல் அறுவடைக்கான அறிகுறிகளாகும். அப்போது காய்களின் ஈரப்பதம் 18 சதமாக இருக்க வேண்டும்.
காய்களைப் பத்து நாட்கள் இடைவெளியில் 2-3 முறை பறிக்கலாம். ஒடித்தால் உடையும் வரையில் இந்தக் காய்களை வெய்யிலில் உலர்த்தி, விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும்.
விதைச் சுத்திகரிப்பு: கோ 2 இரகத்தை 12/64 அங்குல வட்டக்கண் சல்லடையாலும், பிற இரகங்களை 10/64 அங்குல வட்டக்கண் சல்லடையாலும் சுத்திகரிக்க வேண்டும். அப்போது விதையின் ஈரப்பதம் 10 சதமாக இருக்க வேண்டும். பிறகு, உடைந்த, முற்றாத விதைகளை நீக்கிவிட்டு 7-8 சத ஈரப்பதத்துக்கு உலர்த்த வேண்டும்.
அறுவடைக்குப் பின் விதை நேர்த்தி: கால்சியம் ஆக்ஸி குளோரைடு, கால்சியம் கார்பனேட் மற்றும் அரப்புத்தூள் 5:4:1 வீதமுள்ள ஹாலோஜன் கலவையை, ஒரு கிலோ விதைக்கு 3 கிராம் வீதம் கலந்து வைக்கலாம். அல்லது விதை மற்றும் உணவுக்காகச் சேமிக்கும் வகையில், ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் ஊக்குவிக்கப்பட்ட களிமண்னைக் கலந்து வைக்கலாம்.
சேமிப்பு: குறுகிய காலச் சேமிப்பாக 8-9 மாதங்கள் வரையில் சாக்கு அல்லது துணிப்பைகளில் சேமிக்கலாம். மத்திய காலச் சேமிப்பாக 12-15 மாதங்கள் வரையில் உள்ளுறைச் சாக்குகளில் சேமிக்கலாம். நீண்ட காலச் சேமிப்பாக 15 மாதங்களுக்கு மேல் 700 காஜ் கனமுள்ள அடர் பாலித்தீன் பைகளில் சேமிக்கலாம்.
முனைவர் கோ.சதீஸ்,
முனைவர் சி.தமிழ்ச்செல்வி, முனைவர் வி.அ.விஜயசாந்தி,
முனைவர் பி.யோகமீனாட்சி, முனைவர் மு.சபாபதி, முனைவர் இரா.மணிமேகலை,
வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர்-602025.
சந்தேகமா? கேளுங்கள்!