My page - topic 1, topic 2, topic 3

கோடை உழவுக்கு நிகர் கோடை உழவு தான்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021

சாகுபடி நிலத்தைக் கோடைக் காலத்தில் உழுவது சிறந்த முறையாகும். கோடையுழவு செய்தால் நிலத்தில் உள்ள களைகளைக் கட்டுப்படுத்த முடியும். இதனால், நிலத்தில் உள்ள குறிப்பிட்ட வகைப் பூச்சிகளை அழிக்க முடியும். மண்ணில் மறைந்திருக்கும் பூச்சிகளின் முட்டைகள், இளம் புழுக்கள், கூட்டுப் புழுக்கள் போன்றவை அழியும். நிலத்தில் நீர்ப்பிடிப்புத் தன்மை அதிகமாகும்.

கோடையில் பெய்யும் மழையைப் பயன்படுத்தி உழுவதே கோடையுழவு ஆகும். நம் முன்னோர்கள் மானாவாரியாகப் பயிரிட்டு வந்தனர். மானாவாரி சாகுபடியில் ஆறு மாதம் நிலத்தை ஆறப் போடுவர்.  அப்போது தான் அடுத்த போக விவசாயம் எந்த இடையூறும் இல்லாமல் நன்றாக மகசூலைத் தரும் என்னும்  நம்பிக்கையில் அப்படிச் செய்தார்கள். கோடையில் உழவு செய்வதால் அடிமண் மேல் மண்ணாகவும், மேல் மண் அடி மண்ணாகவும் மாறும். கலப்பை அல்லது டிராக்டர் மூலம் ஆழமாக,  சரிவாக,  குறுக்காக நன்கு உழ வேண்டும்.

கோடையுழவு செய்தால் ஒரு நிலத்தில் உள்ள நீர் அடுத்த நிலத்துக்குச் செல்லாமல் இருக்கும். இல்லா விட்டால் ஒரு நிலத்தில் விழும் மழைநீரும் உரமும் அடுத்த நிலத்துக்குச் சென்று விடும். அதற்காக வரப்பையும் உயர்த்திக் கட்ட வேண்டும்.

கோடை உழவு செய்தால் மண்ணில் காற்றோட்டம் நன்றாக நடக்கும். இது, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் வளர்வதற்கு ஏதுவாகும். மண் இறுக்கம் இல்லாமல் பொலபொலப்பாக இருக்கும். அப்படி இருந்தால் பயிர்களின் வேர்கள் நன்றாக மண்ணுக்குள் இறங்கும். மண்ணில் உள்ள கூட்டுப் புழுக்களைப் பறவைகள் கொத்தித் தின்று விடும். கூட்டுப் புழுக்களின் முட்டைகள் வெய்யிலில் பட்டு அழிந்து விடும்.

களைகள் மற்றும் களை விதைகள் நன்றாகக் காய்ந்து விடும். கோரை மற்றும் அறுகுகள் இருந்தால் அவற்றின் கிழங்குகளை குத்தூசியால் வெட்டி எடுத்து விட வேண்டும். இதனால் களைகள் பெருமளவில் கட்டுப்படும். கோடையில் பெய்யும் மழைநீரை, மண் நன்றாக உள்வாங்கி ஈரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். இதனால், பயிரிடும் போது நல்ல விளைச்சல் கிடைக்கும். எனவே, கோடையில் பெய்யும் மழைநீரைப் பயன்படுத்திக் கோடையுழவு செய்வது அவசியமாகும்.


முனைவர் .பார்த்திபன்,

முனைவர் கா.சுப்பிரமணியன், மண்டல ஆராய்ச்சி நிலையம்,

விருத்தாச்சலம். கடலூர் மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks