கட்டுரை வெளியான இதழ்: மே 2020
மழை குறைந்த பருவத்தில், அதாவது, கோடைக்காலத்தில் நிலத்தை உழுதல் கோடையுழவு ஆகும். இதனால், முன்பருவ விதைப்புக்கு நிலத்தைத் தயாராக வைக்கலாம். ஏனெனில், உழுத வயலில் மறுபடியும் உழுது விதைப்பது எளிதாகும்.
களைக் கட்டுப்பாடு
பொதுவாக 35-40% மகசூல் குறைவு களைகளால் ஏற்படுகிறது. எனவே, கோடையுழவு செய்வதால் நிலத்திலுள்ள களைகளின் வேர்கள் அறுபட்டுக் காய்ந்து போகும். மீண்டும் களைச்செடிகள் தழைத்து வளரும் வாய்ப்புக் கணிசமாகக் குறையும்.
மேலும், முந்தைய சாகுபடியில் பயன்படுத்திய களைக்கொல்லியின் நச்சுத்தன்மை, கோடையுழவால் செயலிழந்து போகும்.
பூச்சிக் கட்டுப்பாடு
நிலத்துக்குள் பயிருக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளின் முட்டைகள் மற்றும் கூட்டுப்புழுக்கள் தங்கியிருக்கும். கோடையுழவு செய்வதால் இவை மண்ணுக்கு மேலே கொண்டு வரப்பட்டு, பறவைகளுக்கு இரையாகியும், வெய்யிலில் காய்ந்தும் அழிந்து போகும்.
நீர்ச்சேமிப்பு
அறுவடைக்குப் பிறகு நிலம் இறுகிய நிலையில் இருக்கும். கோடையில் உழுவதால் நிலம் பொலபொலப்பாகி, மண்ணின் நீர் ஈர்ப்புத்திறன் அதிகமாகும். எனவே, மழைநீர் முழுவதையும் நிலத்திலேயே சேமிக்க முடியும்.
கோடையுழவு இல்லாத நிலத்தில் மழை பெய்யும் போது மண்ணரிப்பு ஏற்படும். மண்ணிலுள்ள சத்துகளும் அடித்துச் செல்லப்படுவதால் மண்வளம் குறையும்.
வளிமண்டலத்தில் உள்ள நைட்ரேட் என்னும் வேதிப்பொருள் மழைநீருடன் சேர்ந்து மண்ணில் விழுவதால் நிலத்தில் தழைச்சத்து அதிகமாகும்.
இதனால், சாகுபடிக்குத் தேவையான தழைச்சத்தின் அளவைக் குறைக்கலாம். எனவே, மழைநீரைச் சேமிக்கவும், மண்வளத்தைக் காக்கவும் கோடையுழவு அவசியம்.
தமிழ்நாட்டில், மானாவாரி சாகுபடி மாவட்டங்களில், குறிப்பாக, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பருத்தியும் மக்காச்சோளமும் மானாவாரியில் பயிரிடப்படுகின்றன. பருத்தியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன.
இதனால் ஏற்படும் நச்சுத் தன்மையைக் கோடையுழவு செயலிழக்கச் செய்யும். மேலும், மண்ணிலுள்ள பூச்சிகளின் முட்டை மற்றும் கூட்டுப்புழுக்கள் அழியவும், அடுத்த பயிரில் பூச்சித் தாக்குதல் வெகுவாகக் குறையவும் செய்வதால், பூச்சிகொல்லித் தெளிப்பும் அதையொட்டிய செலவும் குறையும்.
பயன்கள்
கோடையுழவால் மண்ணரிப்புத் தடுக்கப்படும். மண்வளம் காக்கப்படும். மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மை மிகும். மண் பொலபொலப்பாகும். நோய்க்கிருமிகள் கொல்லப்படுவதால் நோய்த் தாக்குதல் குறையும். களைகள் கட்டுப்படும்.
பூச்சிகளின் முட்டை, கூட்டுப்புழுப் பருவங்கள் அழிக்கப்படுவதால் பூச்சித் தாக்குதல் வெகுவாகக் குறையும். மானாவாரி நிலத்தில் கோடையுழவு செய்தால் மழைக்காலத்தில் பருவத்தில் விதைக்கலாம்.
எனவே, விவசாயிகள் அனைவரும் கோடை மழையைப் பயன்படுத்தி, கோடையுழவைச் செய்து மகசூலைப் பெருக்க வேண்டும்.
முனைவர் இர.இராஜப்பிரியா,
முனைவர் க.சக்திவேல், பருத்தி ஆராய்ச்சி நிலையம்,
வேப்பந்தட்டை-621116, பெரம்பலூர் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!