கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021
ஒரு பயிரின் விளைச்சல் திறன் அந்தப் பயிரில் வெளியிடப்பட்டுள்ள இரகங்களின் சிறப்புத் தன்மையைப் பொறுத்தே அமையும். இத்தகைய புதிய இரகங்களின் வெற்றி, அந்த விதைகளை அதிகளவில் உற்பத்தி செய்து விவசாயிகளின் நடவுக்குக் கொடுத்து, அவற்றின் பலனை விவசாயிகள் அனுபவிக்கும் போது தான் தெரிய வரும். இவ்வகையில், கரும்பு விதைக் கரணைகளை உற்பத்திக்கு ஆகும் நாட்களை விட, குறைவான காலத்தில் கிடைக்கும், திசு வளர்ப்புக் கரும்பு நாற்று உற்பத்தியைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
திசு வளர்ப்பு முறை
பாதுகாப்பான சோதனைக் கூடங்களில் போதியளவு வெளிச்சம், காற்றின் ஈரப்பதம் இருக்கும் சூழலில், தாய்த் திசுவில் இருந்து பிரித்தெடுத்த திசுக்களை, செயற்கை உணவு ஊடகங்கள் மூலம், முழுச் செடியாக உருவாக்குவதே திசு வளர்ப்பு முறையாகும். இதன் மூலம் கரும்பில் புதிய இரகங்களுக்கான நாற்றுகளை வேகமாக உற்பத்தி செய்வதுடன், வளர் நுனியைத் திசு வளர்ப்பில் பயன்படுத்துவதன் மூலம் நோயில்லா நாற்றுகளை உற்பத்தி செய்யலாம். இம்முறையில், பல ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட இரகங்களைப் புதுப்பிக்கவும் இயலும்.
திசு வளர்ப்பின் பயன்கள்
தரமான விதை நாற்றுகளைக் குறுகிய காலத்தில் உருவாக்கலாம். வயல்வெளி தட்பவெப்ப நிலையைச் சார்ந்திராமல் ஆய்வுக் கூடத்திலேயே ஆண்டு முழுதும் நாற்றுகளை உற்பத்தி செய்யலாம். நுனிக் குருத்துத் திசு வளர்ப்பு முறையில், அதிக மகசூலைத் தரும் இரகங்களின் உண்மையான நாற்றுகளை, வீரியம் மற்றும் நோயற்ற நிலையில் உருவாக்கலாம்.
திசு வளர்ப்பு நாற்றுகளைக் கடினப்படுத்தி வழங்குவதால் போக்கிடங்கள் ஏற்படுவது மிகவும் குறையும். திசு வளர்ப்பு நாற்றுகளில் போதியளவு வேர்கள் இருப்பதால், வளர்ச்சிக்குத் தேவையான நீர் மற்றும் நீரில் கரையும் சத்துகளை உடனே கிரகித்து வேகமாக வளர்ச்சி அடையும்.
நாற்று உற்பத்தி
தேவையானவை: வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் ஒளி கட்டுப்படுத்தப்பட்ட திசு வளர்ப்பு அறை. நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் இல்லாமல் வீரியமாக வளர்ந்துள்ள குறிப்பிட்ட இரகத்தின் 4-5 மாத தாய்க் கரும்பு. செயற்கை உணவு ஊடகங்கள் மற்றும் கண்ணாடிக் குடுவைகள். கண்ணாடி அல்லது நெகிழிக் கூடாரங்கள்.
தாய்க்கரும்புத் தேர்வும், நுனிக் குருத்துத் தயாரிப்பும்
நான்கு ஐந்து மாத வயதுள்ள, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இல்லாத வீரியமான கரும்பை, திசு வளர்ப்புக்கான தாய்க் கரும்பாகத் தேர்வு செய்வர். திசு வளர்ப்பு மையத்துக்கு அருகில் உள்ள நிலத்தில் இருந்து தான் தாய்க்கரும்பை எடுப்பர்.
இங்கிருந்து தாய்க் கரும்பின் கொழுத்தாடையை வெட்டி, திசு வளர்ப்பு மையத்துக்குக் கொண்டு வருவர். பிறகு, இதை, ஆல்கஹாலில் நனைத்த பஞ்சைக் கொண்டு துடைத்து விட்டு, அதன் தோகைகளை நீக்குவர். இப்படிச் செய்யும் போது 7-10 செ.மீ. அளவுள்ள கொழுத்தாடை கிடைக்கும்.
இதிலுள்ள நுனிக் குருத்து தான், நோயற்ற மற்றும் மரபுக்கூறு மாறாத நாற்றுகளை உருவாக்க உகந்த தாய்த் திசுவாகும். இந்த நுனிக் குருத்தில் செல் பிரிவு மிக வேகமாக இயங்குவதாலும், ஆக்சின் போன்ற வளர்ச்சி ஊக்கிகள் அதிகமாக இருப்பதாலும், இப்பகுதியில் வைரஸ் போன்ற நச்சுயிரிகள் தங்குவதில்லை. எனவே, இப்பகுதி நோயற்றதாக இருக்கிறது.
அடுத்து, தாய்க் கரும்பிலிருந்து கிடைத்த 7-10 செ.மீ. கொழுத்தாடையை ஓடும் நீரில் நன்கு கழுவுவர். பிறகு, பூஞ்சை மற்றும் இதர நோய்க் கிருமிகளை நீக்கும் வகையில், 70% ஆல்கஹாலில் ஒரு நிமிடம் நனைத்து எடுத்து, சுத்தகரிக்கப்பட்ட நீரில் 4-5 முறை நன்கு கழுவுவர்.
அடுத்து, 10% சோடியம் ஹைப்போ குளோரைடு கரைசலில் 10 நிமிடம் முக்கி வைத்து எடுத்து, 4-5 முறை நன்கு கழுவி விட்டு, அதிலிருந்து 2 மி.மீ. அளவுள்ள நுனிக் குருத்தைக் கவனமாகப் பிரித்து எடுப்பர். இந்த வேலை, உயிரற்ற காற்று வீசும் அறையில் நடைபெறும்.
திசு வளர்ப்பு
பிரித்தெடுத்த நுனிக்குருத்தை, தண்டு வளரும் செயற்கை உணவுள்ள சோதனைக் குழாயில் இட்டு, வானிலைக் காரணிகள் கட்டுப்படுத்தப்பட்ட திசு வளர்ப்பு மையத்தில் வளர்ப்பர். நுனிக் குருத்தில் இருந்து சிறு செடிகள் வளர்வதற்குத் தேவையான, மாவுப் பொருள்கள், புரதங்கள், வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள், உணவு ஊடகத்தில் இருக்கும். திசு வளர்ப்பு மையத்தின் வெப்பநிலை 26±10 செல்சியஸ், வெளிச்சம் 16 மணி நேரம், இருள் 8 மணி நேரம் இருக்குமாறு 2,500 லக்ஸ் அளவுள்ள மின் விளக்குகள் இருக்கும்.
ஊடகத்தில் உள்ள சத்துகள், வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் சாதகமான சூழலால், நுனிக் குருத்தில் உள்ள செல்களில், செல் பிரிவும் வளர்ச்சியும் ஏற்பட்டு, சிறு செடியாக வளரத் தொடங்கும். நன்கு வளர்ந்த செடியை இழைமம் இல்லாமல் புதிய வளர்ச்சி ஊடகத்துக்கு மாற்றுவர்.
ஒரு மாதத்தில் ஒரு சிறு செடியில் இருந்து 4-5 பக்கக் கிளைப்புகள் தோன்றும். இவற்றைத் தனித்தனியாகப் பிரித்து, புதிய வளர்ச்சி ஊடகம் உள்ள வேறொரு சோதனைக் குழாயில் வைத்து வளர்ப்பர். சுமார் 20 நாட்களில் இவற்றில் இருந்து மேலும் சில கிளைப்புகள் உண்டாகும். இவற்றையும் தனித்தனியாகப் பிரித்து, மற்றொரு புதிய வளர்ச்சி ஊடகத்துக்கு மாற்றி, தேவையான கிளைப்புகள் கிடைக்கும் வரை வளர்ப்பர்.
இப்படி உருவாக்கப்பட சிறு செடிகளில் இலைகளும் தண்டும் மட்டுமே இருக்கும்; வேர்கள் இருக்காது. எனவே, இந்தச் செடிகளை வேர்களை உருவாக்கும் வளர்ச்சி ஊடகத்துக்கு மாற்றுவர். இதனால், 20-30 நாட்களில் வேர்கள் உள்ள செடிகளாக மாறும். அடுத்து, திசு வளர்ப்பு மையத்தில் சாதகமான சூழலில் வளர்ந்த இந்தச் செடிகளை, நிலத்திலுள்ள தட்பவெப்ப நிலையைத் தாங்குமாறு மாற்ற வேண்டும்
இதற்கு, வளர்ந்த சிறு செடிகளை, மண், தூய்மையான மணல் மற்றும் மட்கிய உரத்தை 1:1:1 வீதம் நிரப்பிய நெகிழிப் பைகளில் நட்டு, கண்ணாடிக் கூடாரம் அல்லது நெகிழித் தாள் கூடாரத்தில் 20-30 நாட்கள் வைப்பர். பிறகு, இச்செடிகளைச் சூரிய ஒளியில் வைத்துப் போதிய நீரை ஊற்றி, ஒரு மாதம் வரை வைத்திருந்தால், நிலத்தில் நடுவதற்கு ஏற்ற வகையிலான நாற்றுகளாக மாறி விடும்.
திசு வளர்ப்பு நாற்றுகளால் நிறைய நன்மைகள் இருப்பினும், கூடுதலான உற்பத்திச் செலவு மற்றும் நடவுக்குத் தேவையான விதைக் கரணைகள் எளிதாகக் கிடைப்பதால், கரும்புத் திசு வளர்ப்பு நாற்றுகளின் வெற்றி, பிற பயிர்களின் வெற்றிக்கு இணையாக இல்லை. ஆனாலும், வைரஸ் போன்ற நச்சுயிரிகள் இல்லாத நாற்றுகளை உற்பத்தி செய்ய, பழைய இரகங்களைப் புதுப்பிக்க, இது சிறந்த வழியாகும்.
முனைவர் மு.சண்முகநாதன்,
முனைவர் கு.காயத்ரி, கரும்பு ஆராய்ச்சி நிலையம், கடலூர்-607001.
சந்தேகமா? கேளுங்கள்!