கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015
சுத்தம் சுகம் தரும் என்பது பழமொழி. இருப்பினும் நகரத் தூய்மையைப் பேணிக் காப்பதன் அவசியத்தைப் பொதுமக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை. பெருகிவரும் மக்கள் தொகைக்கு இணையாகத் திடக்கழிவுகளும் அதிகமாகி வருகின்றன. இதனால், திடக்கழிவு மேலாண்மை மிகவும் அவசியமாகிறது.
திடக்கழிவுகளைத் தொழில்நுட்ப உத்திகளுக்கு உட்பட்டுக் கையாளாமல், பொறுப்பற்ற முறையில் போட்டு விடுவதால் சுற்றுச்சூழலுக்குக் கெடுதல்கள் ஏற்படுகின்றன. எடுத்துக் காட்டாக, நிலத்தடி நீர் மற்றும் நீர்நிலைகள் மாசுபடுதல், துர்நாற்றம் வீசுதல் மற்றும் காண்பதற்கு அருவருப்பான சூழல், ஊர்வன, நகர்வன, பறவைகள் மற்றும் கால்நடைக் கழிவுகள் ஆங்காங்கே கிடப்பதால் சுகாதாரக் கேடுகள் ஏற்படுதல்,
திடக்கழிவுகளை எரிக்கும் போது உண்டாகும் புகை மற்றும் வாயுக்களால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள், கால்நடைக் கழிவுகள் மூலம் மனிதர்களுக்குக் கொடிய நோய்கள் பரவுதல், அமிலத்தன்மை தோய்ந்து நிலம் மாசுபடுதல் ஆகியவற்றைக் கூறலாம். எனவே, இடங்களின் தன்மைக்கேற்ப உகந்த தொழில் நுட்பத்தைத் தெரிவு செய்து தனித்தன்மையுடன் கூடிய திடக்கழிவு மேலாண்மையை மேற்கொள்ள வேண்டும்.
திடக்கழிவின் வகைகள்
மட்கும் கழிவு: காய்கறிக் கழிவு, பூக்கள், கீரைகள், பழங்கள், சமையலறைக் கழிவுகள். வீடு சுத்தம் செய்வதால் உண்டாகும் கழிவுகள். இலைதழைகள், பூக்கள், தோட்டக் கழிவுகள். உணவுக் கழிவுகள், முட்டை ஓடுகள் மாமிசக்கழிவு மற்றும் மட்கும் கழிவுகள். சாணம், சருகுகள், புல்வெளி, பூங்காக் கழிவுகள்.
மறுசுழற்சிக்கு உகந்தவை: பேப்பர், அட்டை, உலோகத் துண்டுகள், துகள்கள், தேனீர்க் குவளைகள், ஒயர்கள். எண்ணெய், ஷாம்பூ உறைகள், புட்டிகள் மற்றும் இதர நெகிழிப் புட்டிகள். ஒலி, ஒளி நாடாக்கள், கணினி உதிரிப் பாகங்கள். பால், மசாலா உறைகள் மற்றும் நெகிழி உறைகள், கண்ணாடிப் புட்டிகள், மண்கலங்கள், உலோக வகைகள். துணி வகைகள், உடைந்த மரப் பொருள்கள், ரெக்சின், தோல் மற்றும் மட்காத ரப்பர் பொருள்கள்.
ஆபத்தான கழிவுகள்: பழைய மருந்துகள், போட்டோ வேதிப் பொருள்கள், சுகாதார நாப்கின்கள். காலணி, வண்ணப் பூச்சுகள், மின் விளக்குகள், குழல் விளக்குகள், ஏரோசோல் குப்பிகள். தெளிப்பான் குப்பிகள், சுத்தம் செய்யும் வேதிப் பொருள்கள். உரம் மற்றும் மருந்து அடைப்பான்கள். மின்கலங்கள், வாகனப் பராமரிப்பு எண்ணெய் வகைகள். மருத்துவக் கழிவுகள், வேதிப் பொருள்களால் தயாரித்த அழகு சாதனங்கள்.
பதனிடுதலும் உரமாக்குதலும்
திடக்கழிவிலுள்ள மட்கும் குப்பைகள் அழுகித் துர்நாற்றம் வீசிச் சுற்றுப்புறம் மாசுபட ஏதுவாகிறது. இதைத் தவிர்க்கவும் திடக்கழிவின் மாசுத் தன்மையைக் கட்டுப்படுத்தவுமான பதனிடு முறைகள் பல நடைமுறையில் உள்ளன. அவற்றில் உரமாக்குதல் முறை (Bio Composting) பேரூராட்சிகளுக்குப் பொருத்தமானது. ஆகவே, அம்முறை மட்டும் இங்கே விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
இது, இயற்கை முறையில் பூஞ்சக்காளான், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் மூலம் குப்பைகளை மட்க வைத்து உரமாக்கும் முறையாகும். இதனால் புதை களத்துக்குச் செல்லும் கழிவுகள் பெருமளவில் குறைகின்றன. இம்முறையால் இயற்கை வளம் காக்கப்படுகிறது. இந்த உரம் மண்வளத்தையும் பயிர்களுக்கான இயற்கை உரத்தேவையையும் சரி செய்யப் பயன்படுகின்றது. இதில், பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய கரிமச் சத்துகளும் நுண்ணுயிர்ச் சத்துகளும் அடங்கியுள்ளன.
வீட்டுத் தோட்டத்தில் உரமாக்குதல்
வீட்டின் பின்புறத்தில் 0.60 மீட்டர் நீள, அகல, ஆளமுள்ள இரண்டு குழிகளைத் தோண்ட வேண்டும். ஒரு குழியில் வீடு மற்றும் தோட்டக் கழிவுகளைச் சமச்சீராகக் கொட்டி வைக்க வேண்டும். சமையலறைக் கழிவுகளை மட்டுமே கொட்டும் போது அவற்றைத் தோட்டக் கழிவுகளைக் கொண்டு மூடிவிட வேண்டும். போதிய நீரைத் தெளித்துக் குப்பைகளை ஈரமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாய்ப்பிருப்பின், சாணக் கரைசலைத் தெளித்து உரமாக்குதலை வளப்படுத்தி விரைவுபடுத்தலாம்.
உரக்குழி 0.45 மீட்டர் உயரம் நிரம்பியதும், குப்பைகளின் உள் வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து உயிரியல் மாற்றம் ஏற்பட்டு உரமாக்குதல் ஆரம்பமாவதை நாம் காண முடியும். உரக்குழி முழுவதும் நிரம்பியதும் மண்ணால் அதனை மூடிவிட வேண்டும். பின்னர், இரண்டாவது உரக்குழியில் மட்கும் கழிவுகளை நிரப்பி உரமாக்க வேண்டும். இப்படிச் செய்தால், மூன்று முதல் நான்கு மாதங்களில் குப்பைகள் கறுப்பான மண்ணைப் போன்று அருமையான உரமாக மாறி விடும்.
இம்முறையை மெருகூட்டிப் பயன்படுத்த வேண்டுமெனில், தரைக்கு மேலே கான்கிரீட் தளமிட்டு, செங்கல், கல் எனக் கிடைக்கும் குறைந்த செலவிலான கட்டுமானப் பொருள்களை வைத்து 0.90 மீட்டர் நீளம், 0.75 மீட்டர் அகலம், 0.75 மீட்டர் அளவில் தொட்டியைக் கட்டி மேல்புறத்தை வலையால் மூடியும் பயன்படுத்தலாம். மழைக்காலத்தில் நீர் உட்புகாமல் இருக்க, கூரை அமைக்கலாம் அல்லது தார்ப்பாலினைக் கொண்டு மூடி வைக்கலாம். வீட்டில் கிடைக்கும் குப்பையின் அளவைப் பொறுத்து மூன்று அல்லது நான்கு மாதங்களில் தொட்டி நிரம்பி விடும்.
மண்புழுக்கள் மூலம் உரமாக்குதல்
மண்புழுக்களை வைத்துக் குப்பையைப் பதனிடும் போது கிடைக்கும் உரம் வளமானது. இரசாயன உரத்தை இட்டால் கிடைக்கும் விளைச்சலைக் காட்டிலும் அதிகமான விளைச்சலைத் தருவது. மட்கும் கழிவுகளில் அங்காடிக் கழிவுகள் மற்றும் சந்தைக் கழிவுகள் மிகவும் சிறந்தவையாகும். இத்திட்டத்தைச் சுய உதவிக் குழுக்கள் மூலம் செயல்படுத்தலாம். சுய உதவிக் குழுவினர் முழுக் கவனத்துடன் ஈடுபட அவர்களுக்குப் போதிய பயிற்சியைத் தர வேண்டும்.
உரக்குழியை அமைக்கும் முறை
சுமார் 3 அடி ஆழம் 2.5 நீளம் 2 அடி அகலமுள்ள ஒரு தொட்டியை அல்லது ஒரு குழியை அமைத்துக் குப்பைகளைக் கொட்டி உரமாக்கலாம். குழியை அல்லது தொட்டியை அமைத்த பின், முதலில், மூன்று அங்குலம் முதல் நான்கு அங்குலம் வரையில் குழியின் ஆழத்தில் அதாவது அடிமட்டத்தில் உடைந்த செங்கற்களைக் கொண்டு ஒரு படுக்கையை அமைக்க வேண்டும். இது முதல் படுக்கை என அழைக்கப்படும். இதற்கு அடுத்த படுக்கையாக, ஆற்றுமணலைச் சுமார் ஒரு அங்குல உயரத்துக்குப் போட்டுச் செங்கற்கள் முற்றிலும் மறையும்படி மூட வேண்டும்.
மூன்றாவது படுக்கையில், உரக்குழியைத் தோண்டும் போது கிடைத்த மண்ணை சுமார் அரையடி உயரத்துக்கு நிரப்ப வேண்டும். பின்னர் சுமார் 50-60 மண்புழுக்களை மண் படுக்கைக்கு மேல் விட வேண்டும். இவற்றின் மீது மிகச்சிறிய எலுமிச்சம் பழம் அளவுள்ள சாண உருண்டைகளை நெருக்கமாகச் சுமார் 2 அங்குல உயரத்துக்கு இட வேண்டும்.
இப்படுக்கையின் மீது சுமார் 30 நாட்கள் நீரைத் தெளித்து, அது எப்போதும் ஈரப்பதமாய் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இரவில் காய்ந்து விடாமல் இருக்க முதல் நாள் மாலையிலேயே நீரைத் தெளித்துவிட வேண்டும். உரக்குழிக்கு மேல் நிழல் இருக்க வேண்டும். இதற்கு, ஆஸ்பெஸ்டாஸ் அல்லது கீற்று அல்லது ஓலைகளைக் கொண்டு தரையிலிருந்து 5 மீட்டர் உயரத்தில் கூரையை அமைக்கலாம். அப்படியும் குழியின் மீது வெய்யில் படுவதாக இருந்தால், குழியைச் சுற்றித் தடுப்புச் சுவரை அமைத்து வெய்யில் படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
இந்த 30 நாட்களில் குழிக்குள் விடப்பட்ட சுமார் 50-60 மண் புழுக்களும் அக்குழிக்குள் இட்ட சாணத்தை உண்ணத் தொடங்கும். அந்த மண்புழுக்கள் இனப்பெருக்கத்திலும் ஈடுபடும். முப்பதாம் நாள், மட்கிய குப்பைகளைப் படுக்கையில் சிறிது சிறிதாகப் போட வேண்டும். முக்கால் ஆடி உயரத்துக்கு மேற்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
குப்பைகளை அடிக்கடி புரட்டிக் கொடுக்க வேண்டும். இதற்காக மட்கும் குப்பைகளைத் தனியாக, அடுக்கடுக்காகக் கொட்டி, வாழைமட்டை மற்றும் இலைச்சருகுகளைக் கொண்டு மூடி 45 நாட்களுக்கு அப்படியே வைத்து மட்கச் செய்ய வேண்டும். 45 நாட்கள் கழித்து இந்தக் குப்பைகளை மண்புழு உரக்குழியில் போட வேண்டும்.
மண்புழுக்கள் இந்தக் குப்பைகளைச் சாப்பிடச் சாப்பிடக் குழிகளில் போட்டுள்ள குப்பைகள் குறைந்து கொண்டே வரும். இப்படி மேல் மட்டத்தில் இருக்கும் கழிவுகள் குறையக் குறையக் குப்பையைப் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் மண்புழுக்கள் அவற்றைத் தின்று செரித்துக் கழிவை வெளியிட ஏதுவாகும். குறைந்தது 45 முதல் 50 நாட்களில் இக்குழிக்குள் இட்ட குப்பைகள் மண்புழுக்களால் உண்ணப்பட்டு உரமாக மாறி விடும். இந்தக் கெடு முடிவதற்குள் எக்காரணத்தை முன்னிட்டும் உரத்தை எடுக்கக் கூடாது.
கடைசியாகக் குழிக்குள் குப்பைகளைப் போட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குப் பிறகு, அதாவது (31+45) 76 நாட்களுக்குப் பிறகு உரத்தை எடுக்கலாம். இதே படுக்கையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். இப்படி மட்கும் திடக்கழிவுகளை உரமாக மாற்றுவதன் மூலம் சத்தான உரத்தைப் பெறுவதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம்.
முனைவர் ரா.பூர்ணியம்மாள்,
முனைவர் கி.இராமகிருஷ்ணன், முனைவர் இரா.விஜயலட்சுமி, முனைவர் வி.கு.பால்பாண்டி,
வேளாண் அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை-626107
சந்தேகமா? கேளுங்கள்!