விதை நேர்த்தி செய்தால் விளைச்சலைப் பெருக்கலாம்!

Seed treatment

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021

விதையே விவசாயத்தின் அடிப்படையாகும். தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதே அதிக விளைச்சலுக்கு வழி வகுக்கும். இந்த விதைகளைப் பூச்சி, நோய்களில் இருந்து பாதுகாக்க, விதைநேர்த்தி செய்வது மிகவும் அவசியம். விதைநேர்த்தி என்பது, விதைகளை விதைப்பதற்கு முன், இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் அல்லது எதிர் உயிர்ப் பூசணம் மற்றும் பாக்டீரியாக்களைக் கொண்டு, உயிர் உரங்களுடன் மேல் பூச்சு செய்வதேயாகும்.

விதை நேர்த்தியின் பயன்கள்

விதைகளின் முளைப்புத்திறன் அதிகமாகும். விதை மற்றும் மண் மூலம் பரவும் பூசண நோய்கள் கட்டுப்படும். பயிர்களின் நோயெதிர்ப்புத் திறன் கூடும். பயிர்களின் வளர்ச்சியும் மகசூலும் அதிகமாகும். விதைநேர்த்தியில் பயன்படும் நுண்ணுயிரிகள், மண்ணிலுள்ள கனிமப் பொருள்களைப் பயன்படுத்திப் பல மடங்காகப் பெருகிச் செடிகளுக்கு நீண்டகாலப் பாதுகாப்பைத் தரும்.

உயிர் உரங்களான அசோஸ்பயிரில்லம், ரைசோபியம் போன்றவை, பயிர்களுக்குத் தேவையான தழைச்சத்தையும், பாஸ்போபாக்டீரியா மண்ணில் கிட்டாத நிலையில் இருக்கும் மணிச்சத்தையும் கிரகித்துப் பயிர்களுக்குக் கிடைக்கச் செய்யும்.

நெல்லில் விதைநேர்த்தி

தரமான நெல் விதைகளைத் தேர்வு செய்யும் முறை: விதைகளின் முளைப்புத் திறன் குறைந்தளவு 80%க்கு மேல் இருக்க வேண்டும். அதற்குச் சான்று பெற்ற விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நமது வயலில் அறுவடை செய்த நெல்லை விதைக்காகப் பயன்படுத்தும் போது, விதைகளை 1.2% உப்புநீரில், அதாவது, 3 கிலோ கல்லுப்பை 18 லிட்டர் நீரில் கரைத்த கரைசலில் இட்டு, அதில் மிதக்கும் தரமற்ற விதைகளை நீக்கி விட்டு, மூழ்கியுள்ள விதைகளை மட்டும் நன்கு கழுவி விதைப்புக்குப் பயன்படுத்த வேண்டும்.

இரசாயனக்கொல்லி விதைநேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் பூசணக்கொல்லி வீதம் கலந்து 24 மணி நேரம் வைக்க வேண்டும். பின், 500 கிராம் ஆறிய அரிசிக் கஞ்சியில், ஒரு ஏக்கருக்குத் தேவையான ஒரு பொட்டலம் அசோஸ்பயிரில்லம், ஒரு பொட்டலம் பாஸ்போ பாக்டீரியாவை கலக்க வேண்டும். பின், இந்தக் கலவையில் விதைகளைக் கலந்து குறைந்தது அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

உயிர் எதிர்க்கொல்லி விதைநேர்த்தி

உயிர் எதிர் பூசணக் கொல்லியான சூடோமோனஸ் புளுரோசன்ஸ் பாக்டீரியாவை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் எடுத்து நீரில் கலந்து விதைகளை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அதனை மறுநாள் காலையில் வடிகட்டி, விதைகளை ஈரச் சாக்கிலிட்டு நிழலில் உலர்த்தி இருட்டறையில் 3 முதல் 5 மி.மீ. முளை வரும் வரை வைத்திருந்து விதைக்க வேண்டும். விதைப்பதற்கு முன், இந்த விதைகளை ஒரு பொட்டல அசோஸ்பயிரில்லம், ஒரு பொட்டல பாஸ்போபாக்டீரிய உயிர் உரங்களுடன் கலக்க வேண்டும்.

நாற்றின் வேர்களை நனைத்தல்

ஒரு கிலோ சூடோமோனாஸ் பாக்டீரிய கலவையை 10 ச.மீ. நாற்றங்காலில் உள்ள நீரில் கலக்க வேண்டும். பிறகு, இதில் ஒரு ஏக்கருக்குத் தேவையான நாற்றுகளின் வேர்களைக் குறைந்தது அரைமணி நேரம் ஊற வைத்து நட வேண்டும். நீண்ட நேரம் ஊற வைப்பதால் இந்த உயிர் உரங்களின் செயல் திறன் கூடும்.

சூடோமோனாஸ் என்னும் எதிர் உயிர் பாக்டீரியம், மண்ணின் மூலம் பரவும் நோய்கள், இலை மற்றும் நீர் மூலம் பரவும் பூசண நோய்களான குலைநோய், இலையுறைக் கருகல் நோய், இலைப்புள்ளி நோய் ஆகியவற்றைம் கட்டுப்படுத்தும். மேலும், பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் சூடோமோனாஸ் செயல்படுவதால், பயிர்கள் செழித்து வளர்ந்து மகசூல் கூடும். இத்துடன், பயிர்களில் எதிர்ப்புத் திறனைக் கூட்டிப் பூச்சித் தாக்குதலையும் ஓரளவு குறைக்கும்.

பயறுவகைப் பயிர்களில் விதைநேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 5 மில்லி இமிடாகுளோபிரிட் வீதம் எடுத்து, தேவையான நீரில் கலந்து விதைநேர்த்தி செய்து நிழலில் உலர்த்த வேண்டும். பின்பு, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் வீதம் எடுத்துக் கலந்து 24 மணி நேரம் வைக்க வேண்டும். இந்த விதை நேர்த்திக்குப் பின், ஏக்கருக்குத் தேவையான விதைகளுடன் ஒரு பொட்டலம் ரைசோபியம், ஒரு பொட்டலம் பாஸ்போபாக்டீரியாவை 500 மில்லி ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து, இக்கலவையில் விதைகளைக் கலக்கி நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

உடனடியாக விதைக்க, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது 5 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்து, அதில் ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளுடன் கலக்க வேண்டும். பிறகு, ரைசோபியம் ஒரு பொட்டலம், பாஸ்போபாக்டீரியா ஒரு பொட்டலம் கலந்த 500 மில்லி ஆறிய அரிசிக் கஞ்சியில் விதைகளைக் கலக்கி நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

நிலக்கடலையில் விதைநேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் மருந்தைக் கலக்க வேண்டும். இது மண் மூலம் பரவும் நோய்களான வேரழுகல், வாடல் நோயிலிருந்து பயிரைப் பாதுகாக்கும். பின்பு, 24 மணி நேரம் கழித்து, ரைசோபியம் ஒரு பொட்டலம், பாஸ்போபாக்டீரியா ஒரு பொட்டலம் கலந்த, 500 மில்லி ஆறிய அரிசிக் கஞ்சியில் விதைகளைக் கலக்கி 15 நிமிடம் நிழலில் உலர்த்தி, 24 மணி நேரத்துக்குள் விதைக்க வேண்டும். பயிர்களுக்குக் கிடைக்காத நிலையில் காற்றிலுள்ள தழைச்சத்தை ரைசோபியம் கிரகித்துப் பயிர்களுக்குக் கிடைக்கும் நிலைக்கு மாற்றி வேர் முடிச்சுகளில் இருக்க வைக்கும்.

உடனடி விதைப்புக்கு, ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளை, சூடோமோனாஸ் 500 கிராம் அல்லது டிரைக்கொடெர்மா விரிடி 200 கிராம், ரைசோபியம் 200 கிராம், பாஸ்போபாக்டீரியா 200 கிராம், 500-1000 மில்லி ஆறிய அரிசிக் கஞ்சி கலந்த கலவையில் கலக்கி 15 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்கலாம்.

கரும்பில் விதைக்கரணை நேர்த்தி

ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைக் கரணைகளை 50 கிராம் கார்பென்டாசிம், ஒரு கிலோ யூரியா, 200 மில்லி மாலத்தியான் ஆகியவற்றை 100 லிட்டர் நீரில் கரைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு, கரணைகளை 4 பொட்டலம் அசோஸ்பயிரில்லம், 4 பொட்டலம் பாஸ்போபாக்டீரியா கலந்த 100 லிட்டர் கரைசலில் 15 நிமிடம் ஊற வைத்து நட வேண்டும்.

இக்கரைசலில் உள்ள கார்பென்டாசிம் நோய்களைத் தடுக்கப் பயன்படும். யூரியா முளைப்புத் திறனை அதிகரிக்கும். மாலத்தியான் பூச்சிக்கொல்லி பூச்சிகளில் இருந்து கரணைகளைப் பாதுகாக்கும். உயிர் உரங்கள் வேர்கள் விரைவாக வளர உதவும். இப்படி, விதைநேர்த்தி செய்து நடுவதன் மூலம், கரும்பின் வளர்ச்சிப் பருவத்தில் ஏற்படும் பயிர்ப் பாதுகாப்புக்கு ஆகும் செலவைக் குறைக்கலாம்.

விதை நேர்த்தியின் போது கவனிக்க வேண்டியவை

இரசாயனப் பூசணம் மற்றும் பூச்சிக் கொல்லிகளில் விதைநேர்த்தி செய்தால், குறைந்தது 24 மணி நேரம் கழித்தே உயிர் எதிர்க் கொல்லிகள் மற்றும் உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இரசாயனப் பூசணம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை, உயிர் எதிர்க்கொல்லிகள் மற்றும் உயிர் உரங்களுடன் கலந்து பயன்படுத்தக் கூடாது.

இத்தகைய சிக்கனமான, எளிய தொழில் நுட்பமான விதைநேர்த்தி முறையைக் கடைப்பிடித்தால், பூச்சி மற்றும் நோய்களை வருமுன் தடுத்து, அதிக மகசூலைப் பெறலாம்.


விதை நேர்த்தி RAJA RAMESH N

முனைவர் இராஜா.ரமேஷ்,

முனைவர் ரெ.பாஸ்கரன், வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம்-614404.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading