தமிழ்நாட்டில் பயறு வகைகள் சுமார் 16.25 இலட்சம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்படுகின்றன. இவற்றில், உளுந்து 5.68 இலட்சம் ஏக்கரிலும், பச்சைப்பயறு 3.45 இலட்சம் ஏக்கரிலும், துவரை 1.45 இலட்சம் ஏக்கரிலும் விளைகின்றன. உளுந்து மற்றும் பச்சைப்பயறு நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், துவரை வேலூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவில் விளைகின்றன.
இந்நிலையில், சாகுபடிக்கு ஏற்ற தரமான விதைகள் உரிய காலத்தில் கிடைப்பது என்பது இன்றும் முழுமையாக நிறைவேறவில்லை. எனவே, பயறு வகைகளில் விதை உற்பத்தியைச் செய்வதன் மூலம், அதிக வருமானம் பெறுவதோடு, தரமான பயறுவகை விதைகள் உரிய காலத்தில் வேளாண் பெருமக்களுக்குக் கிடைக்கவும் செய்யலாம்.
தரமான விதை உற்பத்தி முறைகள்
தரமான விதையென்பது, தனது பாரம்பரியக் குணங்களில் இருந்து சிறிதும் குறையாமல் இருக்க வேண்டும். மேலும், களை, பிற இரகம் மற்றும் பிற பயிர் விதைகள் கலப்பில்லாமலும், பூச்சி, பூசணங்களால் தாக்கப்படாமலும், தூசி இல்லாமலும் இருப்பது அவசியம். விதைத்ததும் நன்கு முளைத்துச் செழிப்பாகவும், சீராகவும் வளர்ந்து அதிக மகசூலுக்கு அடிப்படையாக இருப்பது தரமான விதையாகும். தரமான துவரை, உளுந்து மற்றும் பச்சைப்பயறு விதை உற்பத்தி முறைகளை இப்போது பார்ப்போம்.
நிலத்தேர்வு: விதைப் பயிருக்காகத் தேர்ந்தெடுத்த நிலத்தில், அதற்கு முந்தைய பயிர் சான்று பெறாத அதே இரகமோ அல்லது வேறு இரகமோ இருக்கக் கூடாது. ஏனெனில், நிலத்தில் தங்கியுள்ள விதைகள் இப்பருவத்தின் போது முளைத்து, கலவனாகத் தோன்றும் வாய்ப்புள்ளது. இதனால், விதைச்சான்று பெற இயலாது. மேலும், வாடல் நோய் மற்றும் வேரழுகல் நோய் தோன்றாத நிலமாயிருத்தல் அவசியம். நல்ல வடிகாலுள்ள செம்மண் மற்றும் வண்டல் மண், திரட்சியான விதைகளைத் தரும்.
பயிர் விலகு தூரம்: இனத் தூய்மையைப் பராமரிக்கப் பயிர் விலகு தூரம் மிகவும் அவசியம். துவரை அயல் மகரந்தச் சேர்க்கை கொண்ட பயிராகும். எனவே, இனக்கலப்பைத் தடுக்க, துவரைப் பயிரை, சான்று பெறாத அதே இரகம் அல்லது வேறு இரகத்திடம் இருந்து விலக்கி வைத்திருக்க வேண்டும். இதற்கு, குறைந்தது 100 மீட்டர் அதாவது, 350 அடி இடைவெளி, விதைப் பயிருக்கும் மற்ற துவரைப் பயிருக்கும் இடையே இருக்க வேண்டும். உளுந்துக்கும், பச்சைப்பயறுக்கும் 5 மீட்டர், அதாவது, 17 அடி இடைவெளி இருத்தல் அவசியம்.
விதைப்பயிர் சாகுபடிப் பருவம்: விதைகள் முதிரும் போது அதிக மழையோ, வெய்யிலோ, குளிரோ இல்லாமல் இருக்க வேண்டும். எனவே, விதைப்பயிர் சாகுபடிக்கு ஆடிப்பட்டம், மாசிப்பட்டம் மிகவும் ஏற்றவை.
நிலத் தயாரிப்பு: நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். வேர்கள் நீண்டு செல்லும் என்பதால், ஆழமாக உழ வேண்டும். பிறகு, இரகத்துக்கு ஏற்ப, 2 அடி அல்லது 3 அடி இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும். உளுந்து மற்றும் பச்சைப்பயறுக்கு 1.5 அடி பார் போதுமானது.
உரமிடுதல்: ஏக்கருக்குப் பத்து வண்டி வீதம் மட்கிய தொழுவுரத்தை இட வேண்டும். பிறகு, ஏக்கருக்கு யூரியா 20 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 60 கிலோ, பொட்டாஷ் 10 கிலோ வீதம் எடுத்து, அடியுரமாகப் பார்களின் பக்வாட்டில் இட வேண்டும்.
விதைத் தேர்வின் அவசியம்: விதை உற்பத்திக்குச் சான்று பெற்ற விதைகளைத் தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், சான்று விதைகளில் இரகத்தின் மரபு குணங்கள், நல்ல முளைப்புத் திறன் மற்றும் வீரியத் தன்மை இருப்பதால், விரைவாக முளைத்துத் தரமான நாற்றுகளைக் கொடுக்கும். இதனால், அதிக மகசூல் கிடைக்கும். ஆதார விதை உற்பத்திக்கு வல்லுநர் விதைகளையும், சான்று விதை உற்பத்திக்கு ஆதார விதைகளையும் பயன்படுத்த வேண்டும்.
விதையளவு: பயறு வகை மற்றும் இரகத்துக்கு ஏற்ப, விதையளவு மாறும். துவரையெனில் ஏக்கருக்கு 6-8 கிலோ, உளுந்து மற்றும் பச்சைப்பயறுக்கு 8 கிலோ விதைகள் தேவைப்படும்.
கடின விதைகள்: பயறு விதைகளை விதைத்து, அவை முளைக்கும் போது சில விதைகள் கல்லைப் போலக் கடினமாக இருக்கும். இவை கடின விதைகள் எனப்படும். இந்த விதைகளை நீரில் ஊற வைத்தாலும் நீரை உறிஞ்சாமல் கல்லைப் போலவே இருக்கும்.
செடிகளில் விதைகள் உருவாகும் போது பயிருக்குத் தேவையான நீர் கிடைக்காமல் போதல், அதிக வெப்பம் போன்றவற்றால் கடின விதைகள் உருவாகின்றன. சேமிப்பின் போது இந்தக் கடினத்தன்மை நீங்கி விடும். எனினும், கடின விதைகள் இருந்தால் அவற்றை நீக்கி விட வேண்டும்.
கடின விதையை அறிய, விதைகளை நீரில் ஊறப்போட வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்பும், சில விதைகள் நீரை உறிஞ்சாமல் அப்படியே இருக்கும். இத்தகைய விதைகளை நீக்கிவிட்டு மற்ற விதைகளை விதைப்புக்குப் பயன்படுத்த வேண்டும். இதனால், விதைகளில் சீரான முளைப்பு இருக்கும்.
நுண்ணுர விதை நேர்த்தி: செடிகள் வறட்சியைத் தாங்கி வளர்ந்தாலும், நிலத்தில் இருக்கும் நுண் சத்துகளைப் பொறுத்து அவற்றின் விதைப் பிடிப்பு மாறக் கூடும். இவற்றில் முக்கியமானது துத்தநாகம். இது, இனப்பெருக்கம் நிகழத் தேவையான சத்து. எனவே, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் துத்தநாக சல்பேட் வீதம் கலந்த கரைசலில், ஓர் ஏக்கருக்குத் தேவையான துவரை விதைகளை, மூன்று மணி ரேம் ஊற வைத்து எடுத்து, நிழலில் நன்கு உலர்த்தி விதைக்க வேண்டும்.
பூசணக்கொல்லி விதை நேர்த்தி: மண்ணிலுள்ள பூசணங்கள் விதைகளைத் தாக்கி அழுகச் செய்யும். இதனால், விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்கப்படும். எனவே, இந்தப் பூசணத் தாக்குதலில் இருந்து விதைகளைக் காத்து முளைப்புத் திறனை அதிகரிக்க, விதைகளைப் பூசணக்கொல்லியில் நேர்த்தி செய்வது அவசியமாகும். இதற்கு, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் பவிஸ்டின் வீதம் எடுத்து அதில் விதைகளைக் கலக்க வேண்டும்.
ரைசோபிய நேர்த்தி: பயறுவகைப் பயிர்களின் வேர்களில் முடிச்சுகள் இருக்கும். இந்த முடிச்சுகளில் ரைசோபியம் என்னும் நுண்ணுயிரி இருக்கும். இது, காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்துச் செடிகளுக்கு அளிப்பதால், செடிகள் நன்கு வளர்ந்து அதிக மகசூலைக் கொடுக்கும்.
எனவே, ஒரு பொட்டலம் ரைசோபியத்தை, ஆறிய 300 மில்லி கஞ்சியுடன் கலந்து, அதில் விதைகளை இட்டு நன்கு கலக்க வேண்டும். பிறகு, விதைகளை 3-4 மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். பூசணக்கொல்லியில் விதை நேர்த்தி செய்திருந்தால், இதைச் செய்து 24 மணிநேரம் கழித்து ரைசோபியத்தில் நேர்த்தி செய்ய வேண்டும். முன்கூட்டியே செய்தால் பூசணக்கொல்லியால் ரைசோபிய நுண்ணுயிர்கள் பாதிக்கப்படும்.
விதைப்பு: இரகத்துக்கு ஏற்ப இடைவெளி விட்டு, 2 செ.மீ. ஆழத்தில் விதைகளை விதைக்க வேண்டும்.
பாசனம்: விதை உற்பத்திப் பயிருக்குத் தகுந்த பருவத்தில் பாசனம் செய்வது அவசியம். விதைப்பு நீர், மூன்றாம் நாள் உயிர்நீர், பின்பு மண்வாகுக்கு ஏற்ப, வாரம் ஒருமுறை பாசனம் செய்தல் வேண்டும். பூக்கும் போதும் காய்க்கும் போதும் தகுந்த நீர் நிர்வாகம் இல்லையெனில், பூக்கள் உதிர்ந்து மகசூல் குறைய நேரிடும். விதைகளும் சிறுத்து விடும்.
இலைவழி உரம்: தரமான விதை உற்பத்திக்குப் போதிய ஊட்டம் கொடுப்பது அவசியம். வளரும் குழந்தைகளுக்குச் சரியான ஊட்டம் தருவது எவ்வளவு அவசியமோ, அதைப்போல, விதைகள் உண்டாகி வளரும் போது, அவற்றுக்கும் அதிக ஊட்டம் தேவைப்படும். இதற்கு, நிலத்தில் இருந்து வேர்கள் மூலம் கிடைக்கும் சத்துகள் மட்டும் போதாது. இலைகள் வழியாகவும் சத்துகளை அளிக்க வேண்டும். இதனால், வளரும் விதைகளுக்கு எளிதில் ஊட்டம் கிடைக்கும்; அவை விரைவில் வளர்ந்து வீரிய விதைகளாக உருவாகும்.
டி.ஏ.பி. கரைசல்: இலைவழி உரமாக டி.ஏ.பி. கரைசலைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு, 4 கிலோ டி.ஏ.பி., 13 லிட்டர் நீர், 15 லிட்டர் கொள்ளளவு உள்ள நெகிழி வாளி, வடிகட்ட ஒரு துணி ஆகியன தேவை.
தெளிப்பதற்கு முதல் நாள் மாலையில் 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை 13 லிட்டர் நீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் தெளிந்த நீரை மட்டும் எடுத்து, துணியால் வடிகட்ட வேண்டும். பிறகு, 9 லிட்டர் நீருக்கு ஒரு லிட்டர் கரைசல் வீதம் கலந்து, செடிகளில் நன்கு படுமாறு, கைத்தெளிப்பான் மூலம் மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
மாலை நான்கு மணிக்கு மேல் தெளித்தால், இலைகள் கருகாமல் இருக்கும். இந்தக் கரைசலை, செடிகளில் 50 சதப் பூக்கள் வந்த நிலையிலும், அடுத்து 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். டி.ஏ.பி. கரைசலைத் தெளித்ததும் பாசனம் செய்தல் மிகவும் அவசியமாகும்.
வளர்ச்சியூக்கி: பயறுவகைச் செடிகளில் பூத்த பூக்களில் பாதி கொட்டி விடும். இதற்கு முக்கியக் காரணம் செடிகளில் போதிய வளர்ச்சியூக்கி இல்லாதது தான். பூக்கள் உதிர்வதால் காய்ப்பிடிப்புக் குறைந்து விதை உற்பத்தியும் குறைந்து விடும். எனவே, பயறு விதை உற்பத்தியில் வளர்ச்சியூக்கியைத் தெளிக்க வேண்டும். பூக்கள் உதிர்வதைத் தடுக்க, 50 சதப் பூப்பின் போது, ஒரு லிட்டர் நீருக்கு 4 மில்லி வீதம், பிளானோஃபிக்ஸ் என்னும் வளர்ச்சி ஊக்கியைத் தெளிக்க வேண்டும்.
களை நிர்வாகம்: தக்க தருணத்தில் களைகளை நீக்குவதால் செடிகள் வேகமாக வளர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்கும். விதைத்த முதல் பத்து நாட்களில் ஒரு முறையும், அடுத்து 15 நாட்களில் ஒரு முறையும் களையெடுப்பது அவசியம். விதைத்ததும் 750 மி.லி. பாசலின் களைக் கொல்லியை ஐந்து சட்டி மணலில் கலந்து தெளித்தும் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
பயிர்ப் பாதுகாப்பு: பயறுவகைப் பயிர்கள், பூச்சி, பூசணத் தாக்குதல்களால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றன. காய்ப்புழு, பூ மற்றும் காய்களைத் துளைத்து விதைகளை உண்பதால் மகசூல் குறைகிறது. இதைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 80 மி.லி. மோனோகுரோட்டோபாஸ் வீதம் தெளிக்க வேண்டும். பூவண்டு, பூக்களை உண்பதால் காய்ப்பிடிப்புப் பாதிக்கப்படும். இதைக் கட்டுப்படுத்த, வண்டுகளைப் பிடித்து அழித்து விட வேண்டும்.
கீழ்ச்சாம்பல் நோய், இலைகளின் அடியில் சாம்பல் நிறப் படிவங்களாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 240 கிராம் நனையும் கந்தகம் வீதம் எடுத்து நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
மலட்டுத்தேமல் நோயால் பாதிக்கப்பட்ட செடிகள் வளர்ச்சிக் குன்றி, இளம் பச்சை நிற இலைகளுடன் இருக்கும். இந்தச் செடிகள் பூக்காது. இதைக் கட்டுப்படுத்த, நோயுற்ற செடிகளைப் பிடுங்கி அழித்துவிட வேண்டும்.
வேரழுகல் நோய் என்பது, வேர்களைப் பூசணங்கள் தாக்குவதால் வருவது. இதனால், செடிகள் வளர்ச்சிக் குன்றிக் காய்ந்து விடும். இதைக் கட்டுப்படுத்த, அழுகிய செடிகளை பிடுங்கி அழிக்க வேண்டும். நோயுள்ள இடத்தில், ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் பெவிஸ்டின் வீதம் கரைத்து ஊற்றி மேலும் பரவாமல் தடுக்க வேண்டும்.
கலவன்களை அகற்றுதல்: பிற இரகப் பயிர்கள், விதைப்பயிர்களில் கலந்து விடுவதைக் கலவன்கள் என்கிறோம். கலவன்களால் விதைப் பயிரின் இனத்தூய்மை பாதிக்கப்படும். மேலும், சிலவகைக் கலவன்களால் பூச்சி மற்றும் நோய்கள் வரவும் வாய்ப்புண்டு. விதைப் பயிர்கள் பூப்பதற்கு முன்னும், பூக்கும் போதும், காய்கள் பிடிக்கும் போதும், அறுவடைக்கு முன்னும், கலவன்களைக் கண்டிப்பாக நீக்க வேண்டும்.
பூக்கும் பருவத்துக்கு முன், விதைப்பயிர்ச் செடிகளின் உயரத்தைக் கொண்டு, உயரமான செடிகள், குட்டையான செடிகள், தண்டின் நிறம், முந்திக்கொண்டு பூக்கும் செடிகள் ஆகியவற்றை நீக்க வேண்டும்.
பூக்கும் போது, பூவின் நிறம், அளவு போன்றவற்றைக் கொண்டு கலவன்களை அகற்ற வேண்டும். மேலும், பூக்காத செடிகள், மலட்டுத் தேமல் நோயுள்ள செடிகள் ஆகியவற்றையும் நீக்க வேண்டும். காய்ப்பிடிப்பின் போது, காய்களின் நிறம், அகலம், நீளம் ஆகியவற்றைக் கொண்டு, கலவனை அடையாளம் கண்டு அகற்றலாம். இப்படி, கலவன்களை நீக்குவதால், விதைப்பயிரின் இனத் தூய்மையை எளிதில் பாதுகாக்க முடியும்.
அறுவடை
பூத்த நாற்பது நாட்களில் காய்கள் அறுவடைக்கு வரும். அப்போது காய்கள் பச்சை நிறத்திலிருந்து செம்பழுப்பு நிறத்துக்கு மாறும். இதுவே அறுவடைக்கு ஏற்ற காலம். தாமதமாக அறுவடை செய்தால் காய்கள் வெடித்து, விதைகள் கீழே கொட்டி வீணாகி விடும். பச்சைப்பயற்றங் காய்கள் பச்சையில் இருந்து பழுப்பு நிறமாக மாறும். உளுந்தங் காய்கள் பச்சை நிறத்திலிருந்து கறுப்பு நிறமாக மாறும்.
அறுவடைக்கு முன் பயறு வண்டுகளின் சேதத்தைத் தடுக்க, என்டோசல்பான் மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு மி.லி. வீதம் கலந்து காய்கள் மீது நன்கு தெளிக்க வேண்டும்.
அறுவடை செய்த காய்களை நிழலில் இரண்டு நாட்களுக்கு நன்கு உலர்த்த வேண்டும். பிறகு, மூங்கில் கழியால் அடித்து விதைகளைப் பிரித்து எடுக்க வேண்டும். மேலும், காற்றில் தூற்றி விதைகளில் கலந்துள்ள தூசியைப் பிரித்துக் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த விதைகளைத் தான் விதைக்குப் பயன்படுத்த வேண்டும்.
மகசூல்
ஓர் ஏக்கரில் இருந்து 800 கிலோ துவரை விதைகளும், 400 கிலோ உளுந்து, பச்சைப்பயறு விதைகளும் கிடைக்கும்.
விதைச் சுத்திகரிப்பு
திரட்சியான விதைகளைப் பெற, இரகத்துக்கு ஏற்ப, 3.35 மி.மீ. அல்லது 2.8 மி.மீ. வட்டக்கண் சல்லடையால் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யப்பட்ட விதைகளில் காணப்படும் உடைந்த மற்றும் நோயுற்ற விதைகளை நீக்கிவிட்டு, தரமான விதைகளைச் சேமிக்க வேண்டும்.
விதைச் சேமிப்பு
விதை உற்பத்தியில் எவ்வளவு கவனமாக இருக்கிறோமோ, அதேயளவு கவனம், அடுத்த விதைப்புப் பருவம் வரை விதைகளைச் சேமித்து வைப்பதிலும் இருக்க வேண்டும்.
விதையின் ஈரப்பதம்: விதையின் ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் தரம் மாறுபடும். ஈரப்பதம் மிகுந்துள்ள விதைகள் முளைப்புத் திறனை விரைவில் இழந்து விடும். குறைந்த காலச் சேமிப்புக்கு 9 சத ஈரப்பதத்தில் விதைகளைக் காய வைத்து, துணிப்பை அல்லது சாக்குப் பைகளில் நிரப்பி வைக்கலாம். நீண்ட காலச் சேமிப்புக்கு 8 சத ஈரப்பதத்தில் விதைகளைக் காய வைத்து, காற்றுப் புகாத நெகிழிப் பைகளில் சேமித்து வைக்கலாம்.
விதை நேர்த்தி: விதைகளைச் சேமிப்பதற்கு முன், பூசணக்கொல்லியில் நேர்த்தி செய்ய வேண்டும். இதற்கு, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் திரம் அல்லது கேப்டான் வீதம் எடுத்துக் கலந்து வைக்க வேண்டும்.
விதை சேமிப்புப் பைகள்: காற்றில் உள்ள ஈரப்பதத்தை கிரகிக்கும் தன்மை விதைக்கு உண்டு. எனவே, ஈரம் மிகுந்த காற்று வீசும் கடலோரப் பகுதி மற்றும் நதிக்கரைப் பகுதியில் விதைகளைச் சேமிக்க, ஈரக்காற்றுப் புகாத பைகளைப் பயன்படுத்த வேண்டும். 700 அடர்வுள்ள நெகிழிப் பைகளே காற்றுப் புகாத பைகள். எப்போதும் புதிய பைகளையே பயன்படுத்த வேண்டும்.
கிடங்குகளில் விதைகளைச் சேமித்து வைக்கும் போது முன்னெச்சரிக்கை மிகவும் அவசியம். சாக்குப் பைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கும் போது 6-7 வரிசைக்கு மேல் அடுக்கக் கூடாது. ஏனெனில், மேலேயுள்ள மூட்டைகளின் பாரம் அடியிலுள்ள மூட்டைகளை அழுத்துவதால் அவற்றிலுள்ள விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்கப்படலாம்.
வெறும் தரையில் விதை மூட்டைகளை அடுக்கி வைக்கக் கூடாது. அதைப்போல, சுவரை ஒட்டியும் அடுக்கக் கூடாது. இதனால், தரை மற்றும் சுவரிலுள்ள ஈரப்பதம் விதைகளில் ஊடுருவி அவற்றைப் பாதிப்பதைத் தடுக்கலாம். மரக்கட்டைகள் மீது அல்லது தார்ப்பாய்களை விரித்து விதை மூட்டைகளை அடுக்கி வைத்தல் நல்லது.
சேமிப்புக் கிடங்கு பராமரிப்பு: சேமிப்புக் கிடங்கைப் பூச்சிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சேமிப்புக் காலத்தில் விதைகளைப் பூச்சிகள் தாக்கினால் புகை மூட்டம் போடலாம். காற்றுப் புகாமல் விதைக் கிடங்கை நன்கு அடைத்து விட்டு, செல்பாஸ் என்னும் அலுமினிய பாஸ்பைடு நச்சு மாத்திரைகளை, ஒரு கன மீட்டருக்கு ஒரு மாத்திரை வீதம் வைத்து, மூன்று நாட்களுக்குப் பிறகு கிடங்கைத் திறந்து நச்சுக்காற்றை வெளியேற்றி நல்ல காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும்.
விதை மற்றும் உணவுக்காகச் சேமித்தல்
விவசாயிகள் பயறு வகைகளை உணவுக்காகவும், விதைக்காகவும் சேமிப்பதுண்டு, விதைக்காகப் பூசணக்கொல்லி கலந்து சேமித்த பயறு வகைகளை உணவாகப் பயன்படுத்த முடியாது. ஆனால், மருந்து கலவாமல் சேமித்தால் விதைகள் பயறு வண்டுகளால் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, பயறு வகைகளை உணவு மற்றும் விதைக்காகச் சேமிக்க, அவற்றை ஊக்குவிக்கப்பட்ட களிமண் மூலம் நேர்த்தி செய்ய வேண்டும்.
நூறு கிலோ பயறுக்கு ஒரு கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண் வீதம் கலக்க வேண்டும். இதனால் பயறு வண்டுகளின் தாக்குதல் இருக்காது. விதைகளை விதைக்கும் போது ஒரு கிலோ விதையுடன் இரண்டு கிராம் காப்டான் அல்லது திரம் கொண்டு நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். விதைப்புக்குத் தேவைப்படாத போது ஊக்குவிக்கப்பட்ட களிமண்ணை நன்கு கழுவிச் சுத்தம் செய்து உணவாகப் பயன்படுத்தலாம்.
விதைச் சான்றளிப்பு
இதுவரை தரமான பயறு விதை உற்பத்திக்கான வழிமுறைகளை அறிந்து கொண்டோம். ஒவ்வொரு முறையும் தரமான விதைகள் என்று சொல்லி வருகிறோம். தரமான விதைகள் என்றால் என்ன? அவற்றின் குணங்கள் யாவை?
தரமான விதை என்பது தனது இனப் பண்புகளில் சிறிதும் குறையாமல், களை விதை, பிற இரக விதை, நோயுற்ற விதை ஆகியன இல்லாமல் இருக்கும். மேலும், அதிக வீரியமும் முளைப்புத் தன்மையும் கொண்டிருக்கும். எனவே, இந்த விதைகளை விதைத்தால், சரியான இடைவெளியில், எண்ணிக்கையில் செடிகளைப் பராமரிக்க முடியும். திடமாக வளர்வதால், செடிகள் நோய் மற்றும் பூச்சிகளை எதிர்க்கும் திறனுடன் இருக்கும். இதனால், விவசாயிகளுக்கு இடுபொருள் செலவுகள் குறையும்.
நாம் ஒரு பொருளை வாங்கும் போது அதற்கு ஐ.எஸ்.ஐ. என்னும் தரச்சான்று முத்திரை உள்ளதா என்று பார்ப்போம். இது அந்தப் பொருள் தரமானது என்னும் நம்பகத் தன்மையை நமக்குத் தருகிறது. இதைப் போல, தரமான விதை என்பதை உறுதி செய்வது விதைச்சான்று நிறுவனமாகும்.
விதை உற்பத்தியில் தரத்தை உறுதி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்படியான அமைப்பே விதைச் சான்றளிப்புத் துறை. இதை, தரமான விதை விநியோகிப்பின் காவலன் என்றும் சொல்லலாம். இனத்தூய்மை, சுத்தத் தன்மை, முளைப்புத் திறன் மிகுந்த விதைகளை விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்வதே விதைச் சான்றளிப்பின் முக்கிய நோக்கமாகும்.
விதைச்சான்று ஆய்வு பல்வேறு நிலைகளில் செய்யப்படுகிறது. விதைகள் வாங்கப்பட்ட நிறுவனம் முதல், விதைப் பயிருக்கு உரிய தனிமைத் தூரம், பயிர் வளர்ச்சிப் பருவம், பூக்கும் பருவம், அறுவடைப் பருவம், விதைச் சுத்திகரிப்பு, மூட்டை பிடித்தல் போன்றவை வரை ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், விதைகளை முளைப்புச் சோதனைக்கு உட்படுத்தி அந்த முடிவைக் கொண்டு சான்று அட்டைகள் வழங்கப்படுகின்றன.
விதை உற்பத்தி வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம், இனக் கலப்பற்ற, சுத்தமான, தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும். தமிழகத்தில் அரசின் சான்றளிப்புத் துறை நன்கு செயல்பட்டு வருகிறது. விதை உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள விதைச்சான்று உதவி இயக்குநரை அணுகிப் பயனடையலாம்.
முனைவர் கே.நெல்சன் நவமணிராஜ்,
முனைவர் ப.சாந்தி, முனைவர் வி.மு.இந்துமதி, முனைவர் த.செந்தில் குமார்,
வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை -622 303.
சந்தேகமா? கேளுங்கள்!