சாமை சாகுபடி!

சாமை Little millet 1

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019

சாமையானது மலைவாழ் மக்களின் முக்கிய உணவுப் பயிராக உள்ளதால், மலைகளில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக, ஜவ்வாது மலையில் நிறைய விளைகிறது. கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரம் வரை இப்பயிர் வளரும்.

தானியம் சிறிதாகவும், மஞ்சள் கலந்த சாம்பல் நிறத்திலும் இருக்கும். இதன் வைக்கோல் கால்நடைத் தீவனமாகப் பயன்படுகிறது. இது, 80-90 நாட்களில் விளையும்.

நாட்டு இரகங்களான சிட்டாஞ்சாமை, வெள்ளைச்சாமை, புல்லுச்சாமை, சடைச்சாமை, கொத்துச்சாமை, கருஞ்சாமை, செஞ்சாமை போன்றவை ஜவ்வாது மலை, கல்வராயன் மலையில் விளைகின்றன.

இங்குப் பயிராகும் பெருஞ்சாமை விளைய 160-180 நாட்களாகும். இது கடும் வறட்சியைத் தாங்கி வளரும் மானாவாரிப் பயிராகும். அதிக நார்ச்சத்துள்ள சாமை, மலச்சிக்கலைப் போக்கும். நூறு கிராம் சாமையில், புரதம் 8.7 கிராம், நார்ச்சத்து 8.6 கிராம், இரும்புச்சத்து 9.3 கிராம், சுண்ணாம்புசத்து 17.0 கிராம் உள்ளன.

காலநிலையும் பருவமும்

தமிழகத்தில் ஆடிப்பட்டமான ஜூன் ஜூலை, புரட்டாசிப் பட்டமான செப்டம்பர் அக்டோபரில் மானாவாரியாக விதைக்கலாம். சராசரி மழையளவு 450-500 மி.மீ. உள்ள இடங்கள் மிகவும் ஏற்றவை.  நீர் இருந்தால் ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.

நிலம் தயாரித்தல்

உளிக்கலப்பை அல்லது சட்டிக்கலப்பையால் நிலத்தை ஆழமாக உழ வேண்டும். பிறகு கட்டியில்லாமல் 2-3 உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 12.5 டன் தொழுவுரத்தைச் சீராக இட வேண்டும்.

இரகங்கள்

ஏடிஎல் 1: அதிக மகசூலைத் தரும். வறட்சியைத் தாங்கும். கரிப்பூட்டை, இலையுறை அழுகல் நோய்களைத் தாங்கி வளரும். சாயாது. கதிர்கள் ஒரே சமயத்தில் முதிரும். எந்திர அறுவடைக்கு ஏற்றது. 66.3% அரிசி கிடைக்கும். சத்தான தானியம். சுவையான தீவனம்.

கோ 4: அதிக மகசூலைத் தரும். குறைந்த வயதில் விளையும். வறட்சிக்கு ஏற்றது. இந்த அரிசியில் பல்வேறு பலகாரங்களைச் செய்யலாம்.

ஊடுபயிர்

தமிழகத்தில் சாமை தனிப்பயிராகப் பயிரிடப்படுகிறது. விளைச்சலை உறுதி செய்ய, அதிக இலாபமெடுக்க, மண்வளத்தைக் காக்க, ஊடுபயிர் அவசியம். சாமையில் ஊடுபயிராக, துவரை, அவரை, பேயெள், கடுகு ஆகியவற்றில் ஒன்றை, எட்டு வரிசைச் சாமைக்கு இரண்டு வரிசை ஊடுபயிர் வீதம் விதைக்கலாம்.

பத்து வரிசைச் சாமைக்கு இரண்டு வரிசையில் ஆமணக்கை விதைக்கலாம். பயிர் இடைவெளி 30×10 செ.மீ. இருக்க வேண்டும். சதுர மீட்டருக்கு 40 பயிர்கள் இருக்க வேண்டும்.

விதை நேர்த்தி

வரிசையில் விதைக்க எக்டருக்குப் பத்து கிலோ விதையும், சாதா விதைப்புக்கு 12.5 கிலோ விதையும் தேவைப்படும். விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த, இந்த விதைகளை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

முதலில் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் மற்றும் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் கலந்து 24 மணிநேரம் வைத்திருக்க வேண்டும்.

பின்பு ஆறிய அரிசிக்கஞ்சியில் கலக்கப்பட்ட 600 கிராம் அசோஸ்பைரில்லம், 600 கிராம் பாஸ்போபாக்டீரியா நுண்ணுரக் கலவையில் விதைகளை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

உரம்

மண்ணாய்வின்படி உரமிட வேண்டும். இல்லையெனில் பொதுப் பரிந்துரை அளவான எக்டருக்கு 40:20:20 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தைக் கீழ்க்கண்ட முறையில் இட வேண்டும்.

அதாவது, 20:20:20 கிலோ உரங்களை அடியுரமாகவும், மீதமுள்ள 20 கிலோ தழைச்சத்தை, விதைத்த 25 நாளில் மேலுரமாகவும் இட வேண்டும்.

நுண்ணூட்டக் குறைகளைத் தவிர்க்க, எக்டருக்கு 12.5 கிலோ சிறுதானிய நுண்ணூட்டக் கலவையை 50 கிலோ மணலுடன் கலந்து அடியுரமாகத் தூவ வேண்டும்.

ஈரப்பதம் காத்தல்

சிறந்த மகசூலுக்கு நிலத்தில் போதிய ஈரப்பதம் தேவை. சிறந்த உழவியல் முறைகளான கோடையுழவு, உளிக்கலப்பையால் 3-5 மீட்டர் இடைவெளியில் உழுதல், நிலப்போர்வை அமைத்தல்,

பண்ணைக் குட்டை அமைத்தல், சரிவுக்குக் குறுக்கே உழுது மழைநீரைச் சேமித்தல், நிலச்சரிவின் இடையே குறுக்கு வரப்புகள் அமைத்தல் போன்றவற்றைக் கையாண்டால், மண்ணின் ஈரப்பதத்தைக் காத்து அதிக மகசூலைப் பெறலாம்.

களை

உழவியல் முறை: விதைத்த 15, 30 ஆகிய நாட்களில் கைக்களை எடுக்க வேண்டும். வரிசை விதைப்பெனில் களையெடுப்பான் மூலம் இருமுறை களையெடுக்க வேண்டும்.

இரசாயன முறை: விதைத்த 3-5 நாட்களில் எக்டருக்கு 50 கிராம் ஐசோபுரோடியூரான் களைக்கொல்லியை 500 லிட்டர் நீரில் கலந்து, நேப்சேக் தெளிப்பான் மூலம், நிலத்தில் ஈரப்பதம் இருக்கும் போது தெளிக்க வேண்டும்.

இயந்திர முறை: வேலையாட்கள் பற்றாக்குறையால் களையெடுப்பதில் சிரமம் உள்ளது. இதைத் தவிர்க்க, விதைத்த 10, 20 ஆகிய நாட்களில், பலராம் களைக்கருவியால், இரண்டு முறை களையெடுத்தால், மண்ணில் நல்ல காற்றோட்டம் ஏற்பட்டு அதிகத் தூர்கள் வெளிவரும். வரிசை விதைப்பு நிலத்தில் தான் இக்கருவியைப் பயன்படுத்த முடியும்.

அறுவடை

நன்கு முற்றிய கதிர்கள் காய்ந்த பிறகு அறுவடை செய்து தானியத்தைப் பிரிக்க வேண்டும். பிறகு சுத்தம் செய்து சணல் அல்லது துணிப்பைகளில் சேமிக்க வேண்டும். இதுவரை கூறிய உத்திகளையும், உயர் விளைச்சல் இரகங்களையும் பயிரிட்டால், எக்டருக்கு 1567 கிலோ சாமையும், 3123  கிலோ வைக்கோலும் கிடைக்கும்.

சேமிப்பு

சாமையை உணவாகப் பயன்படுத்த, அதன் ஈரப்பதம் 10% இருக்க வேண்டும். இதை விதைக்காகச் சேமிக்க, 100 கிலோ விதைக்கு 1 கிலோ ஆக்டிவேட்டடு கயோலினை கலந்து வைக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு: 04175-298001, சிறுதானிய மகத்துவ மையம்.


சாமை ANANDHI 1

முனைவர் கி.ஆனந்தி,

முனைவர் க.சிவகாமி, முனைவர் கா.பரமேஸ்வரி, முனைவர் ப.பரசுராமன்,

சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல், திருவண்ணாமலை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading