கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2017
உருளைக் கிழங்கு இல்லாத விருந்து இருக்க முடியாது. அந்தளவுக்கு வீடுகளிலும், விடுதிகளிலும் இந்தக் கிழங்குக்கு முக்கிய இடமுண்டு. இது மலைப்பகுதியிலும், சமவெளிப் பகுதிகளிலும் விளையும். இந்தக் கிழங்கு சாகுபடியில் நல்ல விளைச்சலை எடுப்பதற்கான வழிகளைப் பற்றி இங்கே காணலாம்.
இரகங்கள்
குப்ரிஜோதி, குப்ரிமுத்து, குப்ரிசொர்ணா, குப்ரிதங்கம், குப்ரிமலர், குப்ரிஅசோகா.
மண், தட்ப வெப்பநிலை
வளமுள்ள எல்லா மண்ணிலும் உருளைக் கிழங்கைப் பயிரிடலாம். களர் உவர் நிலங்கள் ஏற்றவையல்ல. மிகுதியான நிலமட்கு நிறைந்த இருபொறை நிலங்கள் ஏற்றவை. களிமண் பூமியைத் தவிர்க்க வேண்டும். வடிகால் வசதியுள்ள நிலங்கள் ஏற்றவை. குளிர் மற்றும் மிதவெப்பப் பகுதிகளில் பயிரிடலாம். மண்ணின் காரஅமிலத் தன்மை 4.8 முதல் 5.4 வரை இருக்க வேண்டும். ஆண்டுக்கு 1,200 முதல் 2,000 மில்லி மீட்டர் வரையில் மழை பெய்யும் பகுதிகளில் இதனைப் பயிரிடலாம்.
நடவுப் பருவம்
மலைப்பகுதிகளில், கோடைக்காலமான மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் இலையுதிர்க் காலமான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலும் சாகுபடி செய்யலாம். சமவெளியில் பயிரிட, அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்கள் ஏற்றவை. இறவையில் பயிரிட, ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் ஏற்றவை. நிலத்தை நன்றாகக் கொத்திப் பண்படுத்தி 45 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும். மலைப்பகுதிகளில் 1.4 மீட்டர் அளவில் உள்நோக்கிச் சாய்ந்தவாறு சாய்வுத்தளத்தை அமைக்க வேண்டும். வடிகாலுக்கு வாய்க்கால்களை அமைக்க வேண்டும்.
விதைப்பு
உருளைக் கிழங்கு சாகுபடியில் விதைத் தயாரிப்பு முக்கியமானது. புதிய கிழங்குகள் முளைக்காது. ஆகவே, முளைப்புத் தன்மையை ஏற்படுத்த, கார்பன்-டை-சல்பைடு என்னும் மருந்தை, 100 கிலோ கிழங்குக்கு 30 கிராம் என்னுமளவில் பயன்படுத்த வேண்டும். கிழங்குகளைக் குவியலாக்கி, அதன்மேல் அகன்ற தட்டில் மருந்தை ஊற்றி, பாலித்தீன் தாளினால் மூடிவிட வேண்டும். கிழங்குகளில் முளை வந்ததும் நடவு செய்ய வேண்டும். நிலத்தின் சாய்மானத்தைப் பொறுத்து, செடிக்குச்செடி 15-20 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும்.
பின்செய் நேர்த்தி
களைக் கட்டுப்பாடு: களைகளைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 2.5 லிட்டர் கிராமாக்சோன் களைக்கொல்லி மருந்தைத் தெளிக்கலாம். விதைத்த 60 நாட்களுக்குக் களைகள் இருக்கக் கூடாது. விதைத்த 45, 60ஆவது நாளில் களையெடுத்து மண்ணை அணைக்க வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு
வெட்டுப்புழு: இது, உருளைக்கிழங்கில் 5-10 சதம் வரையில் சேதத்தை ஏற்படுத்தும். இப்புழுக்கள் எல்லாப் பருவத்திலும் தோன்றி, கிழங்குகளைத் துளைத்து மாவுப்பகுதியை உண்ணும். வெட்டுப் புழுக்கள் தாக்கிய கிழங்கில், பெரிய குழிகள் உண்டாகி, நாளடைவில் அந்தக் கிழங்கு அழுகி விடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்: தரிசு நிலங்களில் மண்ணை நன்கு கிளறி, புழுக்களை வெளியேற்றி அழிக்க வேண்டும். விளக்குப் பொறிகளை வைத்து, தாய்ப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும். சுழல் தெளிப்புப் பாசனம் உள்ள இடங்களில், தெளிப்பானைக் காலையில் இயக்க வேண்டும். நீரின் வேகத்தில் மண்ணிலிருந்து வெளியேறும் புழுக்கள், பறவைகளுக்கு இரையாகி விடும். குளோரிபைரிபாஸ் அல்லது எண்டோசல்பான் மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி என்னுமளவில் கலந்து செடிகளின் தண்டுப்பகுதியில் ஊற்ற வேண்டும்.
அசுவினி: அசுவினியைக் கட்டுப்படுத்த, மீதைல் டெமட்டான் அல்லது டைமீத்தோயேட் மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி என்னுமளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
நூற்புழுக்கள்: உருளைக் கிழங்கில் நூற்புழுவின் தாக்குதலைத் தவிர்க்க, கீழ்க்கண்ட முறைகளைக் கையாள வேண்டும். உருளைக்கிழங்கு இனத்தைச் சாராத பயிர்களான, கோதுமை, மக்காச் சோளம், பீன்ஸ் போன்ற பயிர்களைப் பயிரிட வேண்டும். அல்லது காய்கறிப் பயிர்களான, முட்டைக்கோசு, பூக்கோசு, கேரட், முள்ளங்கி, அவரை வகைகளைப் பயிரிட்டுப் பயிர்ச்சுழற்சி செய்ய வேண்டும்.
விதைக் கிழங்குகளை, கார்போபியூரான் கரைசலில் நனைத்து விதைக்க வேண்டும். விதைப்பதற்கு முன் விதைக்கிழங்குகளைச் சுத்தம் செய்ய வேண்டும். நூற்புழுக்கள் நிறைந்த மண்ணிலுள்ள கிழங்குகளை விதைக்காகப் பயன்படுத்தக் கூடாது. நூற்புழுக்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான, குப்ரிசொர்ணா போன்ற இரகங்களைப் பயரிட வேண்டும்.
நோய்கள்
உருளைக் கிழங்கை, முன்இலைக் கருகல், பின்இலைக் கருகல், பழுப்பு அழுகல், உருளைக் கிழங்கு வைரஸ் மற்றும் இலைச்சுருள் வைரஸ் போன்ற நோய்கள் தாக்கும்.
முன்இலைக்கருகல் என்னும் பூசண நோய்: கிழங்குகளை நட்டு, மூன்று, நான்கு வாரங்களுக்குப் பின், இந்நோய் தோன்றும். இலைகளில் வெளிர் பழுப்புப் புள்ளிகள் ஏற்படும். பின்பு, இப்புள்ளிகளில் வட்ட வளையங்கள் மண்மூலம் பரவும். இதைக் கட்டுப்படுத்த, பயிர்ச்சுழற்சி செய்வதோடு, தோட்டத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நோய் தாக்கிக் காய்ந்து போகும் இலைகளைச் சேகரித்து எரித்துவிட வேண்டும். நடவு செய்த 45, 68, 75 ஆகிய நாட்களில் மான்கோசெப் அல்லது குளோரோதலோனின் என்னும் மருந்தை, எக்டருக்கு ஒரு கிலோ என்னுமளவில் தெளிக்க வேண்டும்.
பின்இலைக் கருகல்: உருளைக்கிழங்கில் தோன்றும் அனைத்து நோய்களிலும் மிக முக்கியமானது பின்இலைக் கருகல் நோயாகும். சிறிய பழுப்பு நிறமுடைய, நீர்க்கசியும் புள்ளிகள் இலைகளில் தோன்றுவது இந்நோயின் முதல் அறிகுறியாகும். மழையும் வெய்யிலும் மாறிமாறி இருக்கும்போது இப்புள்ளிகள் கறுப்பாக மாற, இலைகள் அழுகிவிடும். பாதிக்கப்பட்ட இலைகளின் பின்புறம் இப்பூசணம் வெள்ளையாகக் காணப்படும். இது கிழங்குகளையும் தாக்கும். நோய் தாக்கிய கிழங்குகளின் மூலம் இந்நோய் பரவுகிறது. எனவே, இந்நோயைக் கட்டுப்படுத்த, நோய் தாக்காத கிழங்குகளை நட வேண்டும். தரையில் படரும் கிளைகளை நீக்க வேண்டும். நோய் தாக்கிக் கீழே விழுந்த இலைகளைச் சேகரித்து எரித்துவிட வேண்டும்.
பழுப்பு அழுகல் என்னும் பாக்டீரியா நோய்: இளஞ்செடிகள் உடனடியாக வாடுவதும், இலைகள் பழுப்பாக மாறி, தளர்ந்து தொங்குவதும் இந்நோயின் அறிகுறிகளாகும். நோய் முற்றிய நிலையில், செடிகள் வாடிக் காய்ந்து விடும். தண்டின் உட்பகுதிகள் பழுப்பு அல்லது கறுப்பாக மாறிவிடும். நோய் தாக்கிய கிழங்கை வெட்டிப் பார்த்தால், கிழங்கின் ஓரத்தில் பழுப்புநிற வளையம் காணப்படும். இதனைத் தொடர்ந்து, இந்தக் கிழங்குகள் அழுகிவிடும். வடிகால் வசதியில்லாத இடங்களில் இந்நோயின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இந்நோயைக் கட்டுப்படுத்த, இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பயிர்ச் சுழற்சியைக் கடைப்பிடிக்க வேண்டும். நோய் தாக்காத கிழங்குகளை நட வேண்டும். நோய் தாக்கிய செடிகளைப் பிடுங்கி அழிக்க வேண்டும்.
வைரஸ் நோய்கள்
மொசைக் நோய்: மொசைக் என்பது ஒருவகை வைரஸ் நோயாகும். இந்நோயின் அறிகுறிகளாக, இலையில் பச்சையத்துக்கு இடையே மஞ்சள் கோடுகளும், மஞ்சள் திட்டுகளும் காணப்படும். இதனால் பாதிக்கப்பட்ட செடி மற்ற செடியுடன் உரசும்போது உருளைக்கிழங்கு வைரஸ், அசுவினி மூலம் பரவுகிறது.
இலைச்சுருள் நோய்: இந்நோயால் பாதிக்கப்பட்ட செடிகளின் அடிப்பகுதியில் உள்ள இலைகள் மேல்நோக்கிச் சுருண்டு விடும். பாதிக்கப்பட்ட செடிகள் வளர்ச்சிக் குன்றி, வெளிர் நிறமாகத் தோன்றும். இந்த வைரசும் அசுவினிகள் மூலம்தான் பரவுகிறது. வைரஸ் நோய்களைக் கட்டுப்படுத்த, வைரஸ் தாக்காத செடிகளிலிருந்து கிழங்குகளை எடுத்து நட வேண்டும். தேவையறிந்து, பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்து, அசுவினிகளைக் கட்டுப்படுத்தினால், இந்நோயைத் தவிர்க்கலாம்.
அறுவடை
கிழங்குகள் நன்கு முற்றி 90 நாட்களில் தடித்திருக்கும் போது, தோண்டி எடுத்தால் சேதம் குறையும். பின்பு கிழங்குகளை, இராசி, பெரியபொடி, வந்தபொடி, தள்ளு என்னும் நான்கு விதமாகத் தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும். எக்டருக்கு 120 நாட்களில் 15-20 டன் கிழங்குகள் மகசூலாகக் கிடைக்கும்.
முனைவர் சி.சுபா,
முனைவர் மு.சியாமளா, தோட்டக்கலைக் கல்லூரி,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641003.
சந்தேகமா? கேளுங்கள்!