தமிழ்நாட்டில் வறட்சி மற்றும் தரிசு நிலங்களில் பயிரிட உகந்த பழப் பயிர்களில் கொடுக்காய்ப்புளி முக்கியமானது. இதை, கோணப்புளி, மணிலாப்புளி மெட்ராஸ் முள் பழம் என்றும் கூறுவர். பித்தோ செல்லோபியம் டல்ஸி என்னும் தாவரவியல் பெயரையும், பேபேசியே குடும்பத்தையும் சார்ந்த கொடுக்காய்ப் புளியின் தாயகம், மத்திய அமெரிக்காவின் மெக்ஸிகோ ஆகும்.
இம்மரம் படர்ந்தும் 15-20 மீட்டர் உயரமும் வளரும். இலைகள் அகன்றும், கரும் பச்சையாகவும் இருக்கும். பூக்கள் வெள்ளையாக இருக்கும். அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் காய்க்கும். சீராகவும், கொத்துக் கொத்தாகவும் காய்க்கும். பழம் மருத்துவக் குணமிக்கது. குறிப்பாக, நோயெதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் வைட்டமின் சி இதில் உள்ளது. இப்பழம், வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
நூறு கிராம் பழத்தில் 25.2 மி.கி. ஆந்தோசயனின் இருக்கும். இதிலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவும். பழத்தில் கிளைசீமிக் இன்டக்ஸ் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட உகந்தது.
கொடுக்காய்ப்புளி மரங்களை நிலத்தைச் சுற்றி வளர்த்தால், காற்றுத் தடுப்பானாகப் பயன்படும். இவற்றில் முட்கள் இருப்பதால், நிலத்தைப் பாதுகாக்கும் உயிர்வேலியாக வளர்க்கலாம். கடும் வறட்சியைத் தாங்கி வளரும். நல்ல நிழலையும் தரும். நெருக்க நட்டால் மண்ணரிப்பைத் தடுக்கும்.
களர், உவர் நிலங்கள், நீர்த் தேங்கும் நிலங்கள் மற்றும் மானாவாரி நிலங்களில் பயிரிடலாம். ஒருங்கிணைந்த பண்ணையங்களில் கொடுக்காய்ப் புளி மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்தக் காய்களுக்குச் சந்தையில் நல்ல விலை கிடைப்பதால் அதிக வருமானம் ஈட்டலாம். புரதம் மிகுந்த இலைகள் மற்றும் விதைகள், சிறந்த கால்நடைத் தீவனமாகப் பயன்படும்.
பயிர்ப் பெருக்கம்
கொடுக்காய்ப் புளியை விதை மூலம் சாகுபடி செய்தால், ஏழாண்டுக்குப் பிறகு தான் காய்க்கும். இளந்தண்டு ஒட்டு முறையின் மூலம் பயிர்ப் பெருக்கம் செய்தால், நான்கு ஆண்டுகளில் நல்ல மகசூலைப் பெறலாம்.
இரகங்கள்
பி.கே.எம். 1 கொடுக்காய்ப்புளி: இது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பழ அறிவியல் துறை மூலம் உருவாக்கப்பட்டு, 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த இரகம் சூலக்கரை கிராமத்தில் இயல்பான அயல் மகரந்தச் சேர்க்கையில் பெறப்பட்ட விதைக்கன்று மூலம் தேர்வு செய்யப்பட்டது.
படர்ந்த கிளைகளைக் கொண்ட இம்மரம் ஆண்டுதோறும் சீராகவும் கொத்துக் கொத்தாகவும் காய்க்கும். ஒரு கொத்தில் 2-3 காய்கள் இருக்கும். இப்பழங்கள் வட்டமாகச் சுருண்டும், இளமஞ்சள் தோலுடனும், பாசிகளைக் கோர்த்ததைப் போல, வெண் பருப்புகள் மற்றும் கரு விதைகளுடனும் இருக்கும். இப்பழத்தின் கரையும் திடப்பொருள் 11.5 டி பிரிக்ஸ் இருக்கும். ஒரு மரம் ஆண்டுக்கு 79 கிலோ மகசூலைத் தரும்.
பி.கே.எம். 2 கொடுக்காய்ப்புளி: இது, பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியின் பழ அறிவியல் துறையில், விதையில்லாத் தேர்வு முறையில் உருவாக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஒரு மரம் 90 கிலோ வரை காய்க்கும். ஒரு எக்டரில் 13.50 டன் மகசூல் கிடைக்கும். நடவு செய்த ஐந்தாண்டுகளில் மகசூலுக்கு வரும். சீராகவும், ஒரு கொத்தில் 3-4 காய்களையும் காய்க்கும்.
பழத்தோல் இளஞ் சிவப்பு நிறத்திலும், சதைப்பகுதி சிவப்பு நிறத்தில் கரு விதைகளுடனும் இருக்கும். நூறு கிராம் பழத்தில் 138 மி.கி. அஸ்கார்பிக் அமிலம், 25.2 மி.கி. ஆந்தோசயனின், 13.7 டி பிரிக்ஸ் கரையும் திடப்பொருள் இருக்கும்.
மண் மற்றும் தட்பவெப்ப நிலை
இம்மரம், எல்லா மண் வகைகளிலும் வளரும். குறிப்பாக, களிமண், உவர் மண், கார அமிலத் தன்மை 5.5 முதல் 8 வரை உள்ள மண் மற்றும் மானாவாரி நிலத்திலும் பயிரிடலாம். வெப்ப மற்றும் மிதவெப்பப் பகுதிகளில் வளரும். குறிப்பாக, 16-45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் நன்றாக வளரும். ஆண்டு மழையளவு 250 முதல் 800 மி.மீ. இருந்தால் போதும்.
நிலம் தயாரிப்பு
ஜுன் ஜுலை அல்லது அக்டோபர் நவம்பரில் கொடுக்காய்ப்புளி ஒட்டுக் கன்றுகளை நடலாம். நடவுக்கு 60x60x60 செ.மீ. நீள, அகல, ஆழமுள்ள குழிகளைத் தோண்டி, குறைந்தது ஒரு மாதம் வரை ஆறப் போட வேண்டும். பின்பு, குழிக்கு நன்கு மட்கிய தொழுவுரம் 10 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 100 கிராம், சூப்பர் பாஸ்பேட் 100 கிராம், ஜிப்சம் 100 கிராம் வீதம் எடுத்து, மண்ணுடன் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும்.
நடவு செய்தல்
நெகிழிப் பைகளை அகற்றி விட்டு, வேர்ப்பகுதி மண் உதிராமல் குழிகளின் நடுப்பகுதியில் ஒட்டுக் கன்றுகளை நட வேண்டும். பிறகு, கன்றுகள் காற்றில் ஆடிச் சேதமாகாமல் இருக்க, வலுவான குச்சிகளைக் கன்றின் இருபுறமும் சேர்த்து 8 வடிவில் கட்ட வேண்டும். நடவு செய்ததும் மற்றும் மூன்றாம் நாளும் உயிர்நீர் விட வேண்டும்.
இடைவெளி
கன்று இடைவெளி மற்றும் வரிசை இடைவெளி 8×8 மீட்டர் இருக்க வேண்டும். இவ்வகையில், எக்டருக்கு 156 ஒட்டுக் கன்றுகளை நடலாம். நெருக்கு நடவு முறையில் 6×6 மீட்டர் இடைவெளியில் எக்டருக்கு 277 கன்றுகளை நடலாம்.
உரமிடுதல்
தென்மேற்குப் பருவமழை தொடங்கும் ஜூன்- ஆகஸ்ட் காலத்தில் உரமிட வேண்டும். நன்கு காய்க்கும் மரங்களுக்கு ஆண்டுக்கு இருமுறை 50 கிலோ வீதம் தொழுவுரத்தை இட்டால் மகசூல் கூடும். அல்லது மரம் ஒன்றுக்கு, தழை, மணி, சாம்பல் சத்தைத் தலா 50 கிராம் வீதம் எடுத்து, 10-15 கிலோ தொழுவுரத்தில் கலந்து இட வேண்டும். இதை, செப்டம்பர் அக்டோபரில் இட வேண்டும்.
ஊடு பயிர்கள்
தொடக்கத்தில், குறுகியகாலப் பயிர்களான மொச்சை, பச்சைப்பயறு, உளுந்து, கொத்தவரை, கத்தரி போன்றவற்றை ஊடுபயிராக இட்டால், கூடுதல் வருமானம் பெறலாம்.
நீர் மேலாண்மை
நடவு செய்த முதல் மூன்று மாதங்களுக்கு 2-3 நாள் இடைவெளியிலும், மழை இல்லாத காலத்தில் 7-10 நாட்கள் இடைவெளியிலும் பாசனம் செய்ய வேண்டும். நன்கு நீண்டு வளரும் வேர்களைக் கொண்ட கொடுக்காய்ப்புளி, நிலத்தடி நீரை நன்கு உறிஞ்சி வறட்சியைத் தாங்கி வளரும்.
பின்செய் நேர்த்தி
கன்றுகளின் வேர்ச்செடிகளில் இருந்து வளரும் தளிர்களை அவ்வப்போது நீக்க வேண்டும். கன்றின் தண்டை, தரை மட்டத்திலிருந்து 75-90 செ.மீ. உயரம் வரை வளர விட்டு, அதற்கு மேல் கிளைகளைப் படரவிட வேண்டும். காய்ந்த, சேதமான, குறுக்கு நெடுக்கான கிளைகளை முறையாக நீக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் வரை, மரங்களில் கிளைகள் நன்கு படருமாறு வளர்க்க வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு
இலைப்புள்ளி நோய்: பி.கே.எம்.1, பி.கே.எம்.2 ஆகிய இரகங்கள் இலைப்புள்ளி நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டவை. இலையில் பழுப்பு நிறத்தில் வட்டமாகவும் ஒழுங்கற்றும் தோன்றும் புள்ளிகள், நீண்டு இலை முழுவதும் படர்வதால், இலைகள் கருகி உதிர்ந்து விடும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் மேங்கோசெப் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
சாறு உறிஞ்சும் பூச்சிகள்: அசுவினி, மாவுப்பூச்சி மற்றும் செதில் பூச்சிகள் தாக்குவதால் இலைகள் சுருண்டும், பூக்கள் காய்ந்தும் விடுவதுடன், இலைகளில் பூசணமும் தோன்றும். இவற்றைக் கட்டுப்படுத்த, 3 சத வேப்ப எண்ணெய்க் கரைசல் அல்லது 5 சத வேப்பங் கொட்டைக் கரைசல் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. இமிடாகுளோபிரிட் அல்லது 0.6 கிராம் தயோமீத்தாக்சாம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை மற்றும் மகசூல்
நடவு செய்த ஓராண்டில் பூக்கும் பூக்களை உதிர்த்துவிட வேண்டும். அப்போது தான் மரம் பருத்து வலுவாக வளரும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் பூக்களைக் காய்க்க விடலாம். ஐந்தாம் ஆண்டிலிருந்து முழு மகசூலை எடுக்கலாம். ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கி மார்ச் ஏப்ரல் முடிய நல்ல காய்ப்பு இருக்கும். ஓராண்டில் மரத்துக்கு 90 கிலோ வீதம் ஓர் எக்டரில் 13.48 டன் மகசூல் கிடைக்கும்.
கொடுக்காய்ப்புளிப் பழங்கள் விரைவாகக் கெட்டு விடும். சாதாரணச் சூழலில் 3-4 நாட்களுக்கு மேல் சேமித்து வைக்க முடியாது. நெகிழிப் பைகளில் அடைத்து, 8-10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், 85-90 சத ஒப்பு ஈரப்பதத்தில் வைத்தால், மூன்று வாரங்கள் வரை கெடாமல் இருக்கும். கொடுக்காய்ப்புளி மூலம், ஜாம், ஊறுகாய், ஜுஸ், உலர்பொடி, மிட்டாய் போன்றவற்றைத் தயாரிக்கலாம்.
முனைவர் ஜே.இராஜாங்கம்,
முனைவர் மு.உமா மகேஸ்வரி, முனைவர் சி.சிங்கர், தோட்டக்கலைக் கல்லூரி,
பெரியகுளம் – 625 604, தேனி மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!