கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019
வேளாண்மையில் மகசூலைப் பெருக்கும் நோக்கில், பல்வேறு தொழில் நுட்பங்கள் மற்றும் இடுபொருள்களைப் பயன்படுத்துகிறோம். அவற்றுள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, நோய்க்கொல்லி, களைக்கொல்லி மருந்துகள் முக்கியமானவை. இவற்றைத் தொடர்ந்து அதிகளவில் பயன்படுத்துவதால், நிலத்தின், பௌதிக, இரசாயன, உயிரியல் பண்புகளில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன; கரிமப் பொருள்களின் அளவு குறைவதால் மண்வளம் குறைகிறது. விவசாயிகள் இயற்கை உரங்களை இடுவதில் அக்கறை செலுத்தாததால் மண்வளக் குறைவு தொடர்கிறது.
எனவே, மண்வளத்தைக் காக்க, பயறு வகையைச் சார்ந்த பசுந்தாள் பயிர்களான, சணப்பு, தக்கைப்பூண்டு, கொளுஞ்சி, நரிப்பயறு போன்றவற்றைப் பயிரிட்டு, அவை பூக்கும் போது மடக்கி உழுதால், மண்ணில் அங்ககச் சத்தும், நன்மை செய்யும் நுண்ணுயிர்களும் பெருகும்.
சணப்பு
இது மிக வேகமாக வளரும் பசுந்தாள் மற்றும் நார்ப் பயிராகும். 1-2 மீட்டர் உயரம் வளரும். வண்டல் மண்ணுக்கு மிகவும் ஏற்றது. ஏக்கருக்கு 10-14 கிலோ விதை தேவை. மாதம் ஒருமுறை பாசனம் செய்தால் போதும். நீர் தேங்கும் நிலத்தில் நன்கு வளராது. விதைத்து 45-60 நாட்களில் மடக்கி உழலாம். இதன் மூலம் ஒரு ஏக்கரில் உற்பத்தியாகும் 8-10 டன் பசுந்தாள் உரம், 75-80 கிலோ தழைச்சத்தை நிலத்தில் சேர்க்கும். உலர் நிலையில் 2.30% தழைச்சத்து, 0.50% மணிச்சத்து, 1.80% சாம்பல் சத்து இதில் இருக்கும்.
தக்கைப் பூண்டு
பாசன வசதியுள்ள இடங்களில் ஆண்டு முழுதும் விதைக்கலாம். எல்லா மண்ணுக்கும் ஏற்றது. உப்பு மற்றும் நீர் தேங்கும் இடத்திலும் வளரும். 15-20 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்தால் போதும். ஏக்கருக்கு 20 கிலோ விதை தேவை. விதைத்து 45-60 நாட்களில் மடக்கி உழலாம். உலர் நிலையில், 3.50% தழைச்சத்து, 0.60% மணிச்சத்து, 1.20% சாம்பல் சத்து இதில் இருக்கும்.
கொளுஞ்சி
இது மெதுவாக வளரும். கடும் வறட்சியைத் தாங்கி வளர்வதால், கோடையிலும் இதை விதைக்கலாம். மணல் சார்ந்த நிலத்தில் நன்கு வளரும். ஏக்கருக்கு 6-8 கிலோ விதை தேவை. விதைத்து 45-60 நாட்களில் மடக்கி உழலாம். உலர் நிலையில், 2.90% தழைச்சத்து, 0.39% மணிச்சத்து, 1.80% சாம்பல் சத்து இதில் இருக்கும்.
நன்மைகள்
காற்றுவெளியில் இருக்கும் நைட்ரஜனை வேர்களில் தழைச்சத்தாக நிலை நிறுத்திப் பயிர்களுக்குக் கொடுக்கும். இதனால், யூரியா போன்ற தழைச்சத்து உரத்தைக் குறைத்து இடலாம். இப்பயிர்கள் மட்கும் போது கிடைக்கும் கரிமப் பொருள்களால், மண்ணின் கட்டமைப்பு மேம்படும். இதனால், மண்ணின் உற்பத்தித் திறன் மிகுந்து, மகசூலும் தரமும் கூடும். மணல் நிலத்தில் மண் துகள்களைப் பிணைத்து, நீர்ப்பிடிப்புத் திறனைக் கூட்டும்; களிமண் நிலத்தில் இறுக்க நிலையை மாற்றி, காற்றோட்டத்தை ஏற்படுத்தும்.
அமிலத் தன்மையுள்ள தக்கைப்பூண்டு, களர் உவர் மண்ணைச் சீராக்கும். நீண்ட வேர்களைக் கொண்ட பசுந்தாள் பயிர்கள், கிட்டா நிலையிலுள்ள சத்துகளைப் பயிர்களுக்கு எடுத்துக் கொடுக்கும். மழைநீரை நிலத்தில் ஈர்த்து மண்ணரிப்பைத் தடுக்கும். கோடையில் நிலப்போர்வையாக இருந்து மண்ணின் வெப்பத்தைக் குறைத்து, நிலத்திலுள்ள நீர் ஆவியாவதைத் தடுக்கும்.
நிலத்திலுள்ள கரிமப் பொருள்களின் அளவைக் கூட்டி, நுண்ணுயிர்களைப் பெருக்குவதால், பயிருக்குப் பல்வேறு சத்துகள் கிடைக்கும். பசுந்தாள் பயிர்கள் மட்கும் போது ஏற்படும் வேதி வினைகளால், களைகளின் முளைப்புத்திறன் பாதிக்கும். பசுந்தாள் பயிர்களிலுள்ள ஆல்கலாய்டுகள், மண்ணிலுள்ள பூச்சிகளின் கூட்டுப் புழுக்கள் மற்றும் நோய்க் கிருமிகளைத் தாக்கி, பயிர்களில் பூச்சி, நோய் மற்றும் நூற்புழுக்களின் பாதிப்பைக் கட்டுப்படுத்தும்.
முனைவர் இராஜா.ரமேஷ்,
முனைவர் மு.இராமசுப்பிரமணியன், வேளாண்மை அறிவியல் நிலையம்,
நீடாமங்கலம், திருவாரூர்-614404.
சந்தேகமா? கேளுங்கள்!