கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021
பல செல் உயிரினங்களில், எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகமாக இருப்பவை நூற்புழுக்கள். ஆழமான கடற்பகுதி முதல் உயரமான மலையுச்சி வரை, வெந்நீர் ஊற்று முதல் பனிப்பகுதி வரை, புல்வெளி முதல் அடர்ந்த காடுகள் வரை, தரிசு நிலம் முதல் விளைநிலம் வரை என, புவி முழுவதும் இப்புழுக்கள் நிறைந்துள்ளன.
இந்த நூற்புழுக்களை, அங்ககப் பொருள்கள் மற்றும் பிற நுண்ணுயிர்களை உணவாகக் கொள்ளும் நூற்புழுக்கள், பிற உயிரினங்களைச் சார்ந்து வாழும் நூற்புழுக்கள் என, இருவகையாகப் பிரிக்கலாம். ஆனால், உலகத்தில் காணப்படும் பெரும்பாலான நூற்புழுக்கள் முதல் வகையைச் சார்ந்தே உள்ளன. ஒரு கன அடி வயல் மண்ணில் உள்ள 3×1014 = 300 கி. பாக்டீரியாக்கள், 5×108 = 39 கி. ஒரு செல் உயிரிகள், 400 கி. பூசணங்கள் மற்றும் பிற உயிரிகளுடன், 1×107 = 12 கி. நூற்புழுக்களும் உள்ளன.
இந்த நூற்புழுக்கள் பயிர் வளர்வதற்கு ஏதுவான அனைத்துச் சூழலிலும் வளரும். ஆயினும், 4-8 அளவில் கார அமிலநிலை, 15-30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, 40-60% ஈரப்பதம், மண் துகள் இடைவெளி அதிகமாக இருத்தல், நிலத்தில் நல்ல வடிகால் வசதி இருத்தல், 10 ஏ.டி.எம். வரை சவ்வூடு பரவல் அழுத்தம் இருத்தல் ஆகிய நிலைகளில் நூற்புழுக்கள் நன்கு பெருகும்.
பயிர்களுக்குத் தீமை செய்யும் நூற்புழுக்கள் இருப்பதைப் போல, நன்மை செய்யும் நூற்புழுக்களும் உள்ளன. அவற்றை, பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் நூற்புழுக்கள், தீமை செய்யும் நூற்புழுக்களை அழிக்கும் இரை விழுங்கி நூற்புழுக்கள், களைச் செடிகளை அழிக்கும் நூற்புழுக்கள், தீமை பயக்கும் பூசணங்களை அழிக்கும் நூற்புழுக்கள், மண்ணிலுள்ள அங்ககப் பொருள்களைச் சிதைத்து, பயிர்களுக்கு ஏற்றாற் போல், தாதுப் பொருள்களை மாற்றித் தரும் நூற்புழுக்கள், ஆய்வகங்களில் மாதிரி உயிராக ஆய்வு செய்ய ஏற்ற நூற்புழுக்கள், சுற்றுச்சூழலால் பாதிக்கப்பட்ட மண்ணை அடையாளம் காட்டும் நூற்புழுக்கள் என வகைப்படுத்தலாம்.
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் நூற்புழுக்கள்
ஒருசில நூற்புழுக்கள் மண்ணில் இருந்து கொண்டு பயிர்களுக்குத் தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும். இவ்வகையில், இந்த நூற்புழுக்களை வேளாண்மையில் உயிரியல் பூச்சிக் கொல்லியாகப் பயன்படுத்தலாம். இவற்றுள் ஹெட்டிரோ ரேப்டைடிஸ், ஸ்டெய்னர்நிமா ஆகிய இரு இனங்கள், பூச்சிகளின் வாய், ஆசனவாய் மற்றும் சுவாசத் துளைகள் வழியாக அவற்றின் உடலுக்குள் சென்று, அங்கே தம்மிடம் உள்ள பாக்டீரியாக்களைப் பரவச் செய்யும். இந்த பாக்டீரியாக்கள் பலவகை வேதிப் பொருள்களைச் சுரந்து, 24-72 மணி நேரத்தில் பூச்சிகளில் நோயை ஏற்படுத்தி அவற்றைக் கொல்லும்.
மேலும், பூச்சிகளின் திசுக்களை உண்டு பல்கிப் பெருகி, அங்கிருந்து வெளியேறி அடுத்த பூச்சிகளை அழிக்கும். நூற்புழுக்களுடன் கூட்டு வாழ்க்கை நடத்தும் சினோரேபட்ஸ் பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யும் நச்சானது, கத்தரியைத் தாக்கும் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தும் உயிர்க்கொல்லியாகப் பயன்படுவது ஆய்வு மூலம் உறுதியாகி உள்ளது.
இரை விழுங்கிகள்
சிலவகை நூற்புழுக்கள், பயிர்களைத் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்தும் நூற்புழுக்களை இரையாகக் கொள்ளும். இந்த நூற்புழுக்கள் மண்ணில் இருந்து கொண்டு, வேர் முடிச்சு, வேரழுகல், முட்டைக்கூடு மற்றும் எலுமிச்சை நூற்புழுக்களின் இளம் புழுக்களை அப்படியே விழுங்கும். கடித்தும் உண்ணும். எ.கா. மோனான்கஸ்.
களையைக் கட்டுப்படுத்தும் நூற்புழுக்கள்
கண்டங்கத்தரிச் செடிகளால் மானாவாரிப் பயிர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. நன்மை செய்யும் நூற்புழுக்கள் இந்தக் களைச் செடிகளின் இலைகளில் முடிச்சுகளை ஏற்படுத்தி ஒளிச்சேர்க்கையைப் பாதிக்கச் செய்து, இந்தச் செடிகள் அழியக் காரணமாக இருக்கின்றன. எ.கா. ஒரினா என்னும் நூற்புழு.
பயிர் நோய்ப் பூசணத்தைக் கட்டுப்படுத்தும் நூற்புழுக்கள்
நன்மை செய்யும் இந்த நூற்புழுக்கள், தீமை செய்யும் பூசணங்களை உண்டு அழிக்கும். இவ்வகையில், வாடல், வேரழுகல், நாற்றழுகல் நோய்களை ஏற்படுத்தும் பூசணங்களின் தாக்குதலை வெகுவாகக் குறைக்கும். எ.கா. அபிலன்கஸ் என்னும் நூற்புழு.
அங்ககப் பொருள்களைச் சிதைக்கும் நூற்புழுக்கள்
இவ்வகை நூற்புழுக்கள் மண்ணிலுள்ள அங்ககப் பொருள்களைச் சிதைத்து, பயிர்களால் கிரகிக்க முடியாத நிலையில் உள்ள, தாதுப்புகளைப் பயிர்கள் கிரகிக்கும் நிலைக்கு மாற்றித் தருகின்றன.
சூழல் மாற்றத்தை உணர்த்தும் நூற்புழுக்கள்
இன்றைய உலகில் வேதிப் பொருள்களின் பயன்பாடு உயர்ந்துள்ள நிலையில், விவசாயத்திலும் பூச்சி, பூசணம், நோய், களைகளைக் கட்டுப்படுத்தவும் மற்றும் பயிர்கள் வளர்ச்சிக்கு எனவும், அதிகளவில் வேதிப் பொருள்கள் கையாளப்படுகின்றன. இந்தப் பொருள்களால் சுற்றுச்சூழலும் மண்வளமும் பாதிக்கப்படுகின்றன.
மக்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் தீமை செய்யும் இந்தப் பொருள்கள் எந்தளவில் உள்ளன என்பதை ஆய்வின் மூலம் அறிய முடியும். இந்த உயிர்வேதி வினையைக் கண்டறிய, பெனக்ரல்லஸ், சீனோரேப்டைடிஸ் ஆகிய நன்மை செய்யும் நூற்புழுக்கள் பயன்படுகின்றன.
முனைவர் சோ.பிரபு,
முனைவர் இரா.பூர்ணியம்மாள், முனைவர் சி.முத்தையா,
பயிர்ப் பாதுகாப்புத் துறை, தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம்.
சந்தேகமா? கேளுங்கள்!