பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

நூற்புழு nematode that attacks crops

யிர்களைத் தாக்கும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் உத்திகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளார், நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நூற்புழுக்களின் தாக்குதலால் விளைச்சலும், விளைபொருளின் தரமும் குறைந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. பொதுவாக, நூற்புழுக்களால் தாக்கப்பட்ட பயிர்கள், சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டதைப் போலத் தெரியும். எனவே, பயிர்களில் காணப்படும் அறிகுறிகளுக்கு ஏற்ப, மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அறிகுறிகள்

பயிர்களில் குறைந்த வளர்ச்சி, குறைவான தூர்கள் மற்றும் பக்கக் கிளைகள், இடைக்கணுவின் நீளம் குறைதல், இலைகள் பச்சையம் இழந்து பழுப்பு நிறமாக மாறுதல், இலை ஓரங்கள் சிவப்பாகி மேற்புறமாக மடிதல், கிளைகள் ஒன்றுகூடி காலிபிளவர் போன்ற அமைப்பு உருவாதல், இலை நுனி வெண்மையாகிக் கீழ்நோக்கித் தொங்குதல், மொக்குகள் அல்லது பூக்கள் உருச்சிதைதல், ஆங்காங்கே திட்டுத் திட்டாக வளர்ச்சியின்றிப் பயிர்கள் காணப்படுதல், மண்ணில் ஈரமிருக்கும் போதும் வாடியதைப் போலப் பயிர்கள் இருத்தல், உரிய காலத்துக்கு முன்பே பயிர்கள் முதிர்வு நிலையை அடைந்து விடுதல்.

மேலாண்மை உத்திகள்

விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு வேப்ப எண்ணெய் 60 இசி திரவத் திரட்டு (சிட்ரிக் அமிலம் மூலம்) 2 மி.லி. அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளுரசன்ஸ் அல்லது 10 கிராம் பேசிலோமைசிஸ் லிலாசினாஸ் 1% நீரில் கரையும் தூளைக் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

மண்ணில் இடுதல்: எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் புளுரசன்ஸ் அல்லது பேசிலோமைசிஸ் லிலாசினாசை 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து மரத்துக்கு 20 கிராம் வீதம் இட வேண்டும்.

மேலும், எக்டருக்கு 2 டன் வேப்பம் புண்ணாக்கு அல்லது ஆமணக்குப் புண்ணாக்கு அல்லது கரும்பாலைக் கழிவு அல்லது பசுந்தாள் உரங்களான சணப்பை, கொளுஞ்சியைப் பயிரிட்டு மடக்கி உழ வேண்டும் என, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் விவசாயிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.


நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading