கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019
காய்கறிகளின் தேவையும் உடல் நலம் குறித்த விழிப்புணர்வும் மிகுந்து வருவதால், அவற்றைத் தரமாக உற்பத்தி செய்வது அவசியம். இதில், உயர் விளைச்சல் இரகங்கள் மற்றும் தொழில் நுட்பங்களுடன், உயிரியல் ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். பயனுள்ள மற்றும் செலவு குறைந்த உத்திகள் மூலம் இயற்கை வளங்களைப் பயன்படுத்த வேண்டும். இவ்வகையிலான தொழில் நுட்பமாக மூடாக்கு உள்ளது.
மண்ணின் மேற்பரப்பை மூடப் பயன்படும் பொருள் மூடாக்கு எனப்படும். நீர் ஆவியாவதைத் தடுக்கவும், களையைக் கட்டுப்படுத்தவும், இலைதழை, வைக்கோல் போன்றவற்றால், பயிர்களைச் சுற்றி அமைக்கப்படும் பாதுகாப்புக் கவசம் தான் மூடாக்கு. அடுக்கடுக்காக உள்ள மூடாக்கு, மண்ணுக்கும் காற்றைச் சார்ந்த சூழலுக்கும் இடையே ஓர் தாங்குதலை உருவாக்கும்.
காய்கறிப் பயிர்களில் மூடாக்கு
மூடாக்குத் தேர்வு: களைக் கட்டுப்பாடு, மண்ணின் வெப்ப நிலையைக் கூட்டுவது குறைப்பது, நோய்க் கட்டுப்பாடு, பயிர் வளர்ச்சியை மேம்படுத்துவது போன்ற எந்த நோக்கத்தைப் பொறுத்ததும் இதைத் தேர்வு செய்யலாம். மண்ணுக்கும் காற்றுக்கும் இடையே, மிதமான வெப்ப நிலையை வழங்கும் வகையில் இதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2-3 அங்குலக் கனத்தில் மூடாக்கை இட வேண்டும். காய்கறித் தோட்டத்தில் மரத்தூள், மரம் அல்லது மரப்பட்டைச் சில்லுகளைப் நேரடியாகப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், மரத்துண்டுகள் சிதைய அதிகக் காலமாகும். மேலும், மண்ணிலுள்ள நைட்ரஜனில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாகத் தோட்டத்தைச் சுற்றிக் களையைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தலாம்.
மூடாக்கின் பயன்கள்
மண்ணிலுள்ள நீர் ஆவியாவதைத் தடுப்பதால், பாசனநீர் மிச்சமாகும். பெருமழையால் ஏற்படும் மண்ணரிப்பைத் தடுக்கும். நிலத்தின் கடினத் தன்மையை மாற்றும். மண்ணின் வெப்பநிலையைச் சீராகப் பராமரிக்கும். மின்கடத்தாப் பொருளாக இயங்கி, குளிர் காலத்தில் நிலம் சூடாகவும், கோடையில் குளிர்ச்சியாகவும் இருக்க உதவும். களையைக் கட்டுப்படுத்திச் செலவைக் குறைக்கும். மண்புழு மற்றும் நன்மை தரும் நுண்ணுயிரிகள் வாழும் சூழலை உருவாக்கும்.
மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தும். அங்ககக் கரிமப்பொருள் மண்ணுக்குச் சிறந்த பக்குவத்தை அளிக்கும். பயிர்கள் மற்றும் அவற்றின் வேர் வளர்ச்சிக்கு உதவும். இது மலிவான மற்றும் பாதுகாப்பான நுட்பமாகும். நச்சு எச்சம் எதுவும் இல்லை. விவசாயிகளுக்கு உதவும் எளிய உத்தியாகும்.
மரப்பட்டை, வைக்கோல், மட்கிய உரம், மரத்தூள், மரக்கட்டைகள் ஆகியன பொதுவான மூடாக்குப் பொருள்களாகும். நிலத்திலுள்ள நெகிழிகளும் மூடாக்காகப் பயன்படுகின்றன. குறைந்த அறிமுகமுள்ள பெயிண்ட், சரளைக்கல், கற்கள், அலுமினியம், காகிதம் ஆகியவையும் மூடாக்காகப் பயன்படும்.
மூடாக்கின் செயல்கள்
நீர்ப் பாதுகாப்பு: மூடாக்குப் பொருளின் நோக்கமானது, மண்ணின் நீராவிப் போக்கைக் குறைப்பதாக, நீர் உள்ளீர்ப்புத் திறனைக் கூட்டுவதாக இருக்க வேண்டும். மண்ணிலுள்ள நுண் துளைகள் வழியாக உயரும் பண்புள்ள நீர் உயர்வதையும் ஆவியாவதையும் மூடாக்குத் தடுக்கும். மழைநீரை வழிந்தோட விடாமல் உறிஞ்சும். நீர்ப் பாதுகாப்பில் பயன்படும் மூடாக்குகள், இளகிய தன்மை, நுண்துளை வழியாக உயரும் நீரோட்டத்தைத் தடை செய்தல், ஈரப்பதத்தை நிலை நிறுத்துதல், எளிதாக மண்ணில் நீரை ஊடுருவ விடுதல் ஆகிய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
இவ்வகை மூடாக்குகள் 2-4 அங்குலக் கனத்தில் இருக்க வேண்டும். சரிவான நிலங்களில் இந்தக் கனம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும். மெலிதான, அடுக்குக் குறைந்த மூடாக்குகள் இடம் பெயர்வதோடு எளிதில் சிதைந்து விடும். நீரை மண்ணுக்குள் செலுத்தும் தன்மையிலும், நீரை உறிஞ்சும் தன்மையற்றும் இருக்க வேண்டும். ஈரப்பதமான மூடாக்குகள் தாவர நோய்களுக்கு மூலமாக அமையும்.
அதிக ஆழத்தில் 6 அங்குலக் கனமுள்ள மூடாக்குகள், நிலத்துள் நீரை விடாமல் தன்வயப்படுத்திக் கொள்ளும். அதிக அடுக்குகளுடன் அமைக்கப்படும் மூடாக்குகளால் வளரும் தாவரங்களின் வேர் மண்ணில் பதியாது. மூடாக்கில் வளரும் பிரச்சனை உருவாகும். இதனால், போதிய உணவு மற்றும் நீரை நிலத்திலிருந்து எடுத்துக்கொள்ள தாவரங்களால் இயலாது.
களைக்கட்டுப்பாடு: ஈரப்பதம் மிகுந்த பகுதிகளில் இவ்வகை மூடாக்கு அவசியம். ஆள் தட்டுப்பாடு, அதிகச் செலவாகும் சூழலில் இவ்வகை மூடாக்கை அமைக்கலாம். மூடாக்குகள் அமைக்கப்பட்ட பயிர்களில் ஆழம் குறைந்த இடையுழவு தேவை. மூடாக்குகளில் குறைந்த ஆழத்தில் பதிந்த களைகளின் வேர்களைப் பிடுங்குவது எளிது. இதனால், ஆட்கள் தேவை குறைவதுடன், இயந்திர முறை இடையுழவால் ஏற்படும் பயிர்ச் சேதங்களும் குறையும்.
களைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் நெகிழி மூடாக்குகள் தடித்தும், களைகள் ஊடுருவி வளர இயலா நிலையிலும் இருக்க வேண்டும். ஒரே வகையான வைக்கோலைப் பயன்படுத்தலாம். ஆனால் அதனுள் களை விதை இருப்பின் மண்ணுக்கு இடையூறு செய்யும். மட்கிய உரம் களையைக் கட்டுப்படுத்தும் சிறந்த மூடாக்காகும். எருவை மட்க வைக்காமல் களையைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்துவது நல்லதல்ல. எருவும் மட்கிய உரங்களும் பயிர்களுக்குத் தேவையான சத்துகளை அளிப்பதால் 2 அங்குலக் கனத்தில் மூடாக்கை அமைக்கலாம்.
எளிதில் கட்டுப்படாமல் வளரும் கோரைப்புல் போன்றவை, சாதாரண மூடாக்கின் வழியே வளரும். எனவே, ஊடுருவி வளர விடாத மூடாக்கைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு, மலிவாக, ஊடுருவும் தன்மை மற்றும் நச்சுத்தன்மையற்ற நெகிழி அல்லது கடினத்தாள் பயன்படும். நெகிழியால் பாசனச் சிக்கல் ஏற்படும். காகிதம் களைகளைக் கட்டுப்படுத்தும் சிறந்த மூடாக்காகும்.
4-8 செய்தித் தாள்களை அடுக்கி மண்ணில் வைக்க வேண்டும். அதன்கீழ் 1-2 அங்குலக் கனத்தில் மட்குரம் அல்லது வைக்கோலை இட்டால், அதிகளவில் களைகள் கட்டுப்படும். பருவத்தின் முடிவில் செய்தித் தாள்கள் சிதைந்து மட்கி விடும். கறுப்பு வெள்ளைச் செய்தித் தாள்களைப் பயன்படுத்தினால் நிலம் மாசடையாது. ஏனெனில், இவற்றில் பயன்படும் மையானது, கரி மற்றும் தாவர எண்ணெய்களால் ஆனது. ஆனால், வண்ண இதழ்களில் பயன்படும் மையில் கடின உலோகங்கள் இருப்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
வெப்பநிலை
நிலத்திலுள்ள அங்கப் பொருள்கள், மண்ணின் வெப்ப நிலையை நிலைப்படுத்தும் காப்புப் பொருளாகச் செயல்படும். நெகிழி அடுக்குகள் வசந்த காலங்களில் மண்ணை வெப்பமூட்டப் பயன்படும். குளிர் காலத்தில் பயிர்களைப் பாதுகாக்க, அங்ககப் பொருள்களை மூடாக்காகப் பயன்படுத்தலாம். எளிதில் கிடைக்கும் வைக்கோல் சிறந்தது.
மூடாக்குகளின் வகைகள்: அங்கக மூடாக்கு:
அங்கக மூடாக்கு என்பது, இயற்கைப் பொருள்களைக் கொண்டது. ஆனால், இவ்வகை மூடாக்குகள், பூச்சிகள், நத்தைகள், வெட்டுப் புழுக்களைக் கவர்ந்திழுக்கும். மேலும், எளிதில் மட்குவதால் அடிக்கடி இட வேண்டும்.
புற்கள்: எளிதாகக் கிடைக்கும் பொருள். இவற்றைப் பச்சையாக மண்ணில் இட்டால், தழைச்சத்து மண்ணுக்குக் கிடைக்கும். இருப்பினும், பச்சைப் புற்களை அப்படியே மழைக்காலத்தில் இட்டால், அவற்றின் வேர்கள் மீண்டும் இயங்கிப் புற்களை வளரச் செய்து பயிருக்கு இடையூறை ஏற்படுத்தும்.
வைக்கோல்: பழங்கள், காய்கறிகள் உற்பத்தியில் பொதுவான மூடாக்காகப் பயன்படுவது நெல், கோதுமை வைக்கோலாகும். இதில் சத்துகள் குறைவாக இருப்பினும், அது சிதையும் போது மண் வளமாகும்.
காய்ந்த இலைகள்: எளிதில் கிடைக்கும் காய்ந்த சருகுகள் நல்ல மூடாக்காகும். ஆனால், சிறிது காற்று வீசினும் பறக்கும். இதைத் தவிர்க்க, சருகுகளுடன் சிறிய கற்கள், மரக்கட்டைகளை இடலாம்.
மரப்பட்டைகள்: அதிக நாட்கள் தாங்கும் இவை மண்ணுக்குள் நல்ல காற்றோட்டத்தை ஏற்படுத்தும். மென்கட்டைகளை விட கடினக் கட்டைகளில் சத்துகள் நிறைய உள்ளன. ஆனால், இவை எளிதில் கிடைப்பதில்லை. மேலும், இந்த மரக்கட்டைகள் பயிரில் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும்.
மரத்தூள்: மர ஆலையிலிருந்து கிடைக்கும் மரத்தூளில் சத்துகள் குறைவாகத் தான் இருக்கும். வைக்கோலில் இருப்பதில் பாதியே இருக்கும். இது மெதுவாகச் சிதையும். இதில் அமிலத்தன்மை இருப்பதால் இதை மூடாக்காகப் பயன்படுத்தக் கூடாது.
கனிமப் பொருள் மூடாக்குகள்
சரளைக்கல், கூழாங்கல், சிறு கற்கள்: இந்தப் பொருள்கள் பல்லாண்டு மரப்பயிர்களில் மூடாக்காகப் பயன்படுகின்றன. 3-4 செ.மீ. சிறு கற்களைக் கொண்ட பாறையடுக்கு நன்கு களையைக் கட்டுப்படுத்தும். ஆனால், இவை சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால் கோடையில் நிலத்தில் வெப்பம் கூடும்.
நெகிழிகள்: கறுப்பு மற்றும் ஒளிபுகாத் தன்மையுள்ள நெகிழிகள் மூடாக்காகப் பயன்படும். வளர்ந்துள்ள நெகிழி வேதியியலின் விளைவாக, குறிப்பிட்ட இடத்தில் வளரும் பயிர்களுக்கு ஏற்ற ஒளியியல் பண்புகளை உடைய நெகிழிச் சுருள்களை உருவாக்கலாம். சூரிய ஒளியால் சிதைவடைபவை, நுண்ணுயிர்களால் சிதைவடைபவை என இவை இருவகைப்படும்.
தோட்டக்கலைப் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலைக் கூட்டும் மூடாக்கு, மண் மற்றும் பாசன மேலாண்மையிலும் பெரிதும் பயன்படும். இது மானாவாரி விவசாயிகளுக்கு வரமாகும்.
முனைவர் ம.இராஜசேகர்,
துல்லியப் பண்ணைய மேம்பாட்டு மையம்,
சு.சுகந்தி, மலைத்தோட்டப் பயிர்கள் துறை,
சி.ஜிது வைஷ்ணவி, பயிர் வினையியல் துறை,
த.உதயநந்தினி, வளங்குன்றா அங்கக வேளாண்மைத் துறை,
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், கோவை-641003.
சந்தேகமா? கேளுங்கள்!