கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020
இந்த மண்ணில் எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்ந்து வருகின்றன. இவற்றின் செயல்களால் பயிர்களுக்குப் பேரூட்டங்கள், நுண்ணூட்டங்கள், சீராகவும், தொடர்ந்தும் கிடைக்கின்றன. பெருகி வரும் மக்கள் தொகையும், குறுகி வரும் விளைநிலப் பரப்பும், விளைச்சலைப் பெருக்க வேண்டிய பணியை விஞ்ஞானிகளிடம் ஏற்படுத்தி உள்ளன. உயர் விளைச்சல் இரகங்கள் மற்றும் இரசாயனப் பொருள்களைத் தேவைக்கு மேலே பயன்படுத்துவதால் நிலம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் மாசுபட்டுள்ளது.
இந்த மாசை, இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டுதான் சரி செய்ய வேண்டும். இதற்கு, இயற்கையுரம், பசுந்தாளுரம், இலை மட்குரம், நுண்ணுயிர் உரம், நார்க்கழிவு உரம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். நுண்ணுயிர்கள், மண்ணை மேம்படுத்துவதுடன், மண்ணிலும் இயற்கை உரத்திலும் உள்ள சத்துகளைக் கிரகித்து, கரைத்து, பயிருக்குத் தகுந்தாற் போல் மாற்றியமைக்கும் தன்மை மிக்கவை.
இவ்வகையில், ஒவ்வொரு சத்துக்கும் ஒவ்வொரு வகை நுண்ணுயிர்கள் உதவுகின்றன. இவற்றை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிந்து, உயிர் உரங்களாகப் பயன்படுத்துகிறோம். உயிர் உரமாகப் பயன்படும் பாக்டீரியா உருவாக்கப்படவில்லை. இதை மண்ணிலிருந்து எடுத்து வேதிக் கூறுகளை அறிந்து, செயலாற்றுத் திறனை மேம்படுத்தி, எண்ணிக்கையைப் பெருக்கி, நிலக்கரி அல்லது இலை மட்கு மண் அல்லது மண்புழு உரத்தில் தயாரித்து, நுண்ணுயிர் துறையினர் வெளியிடுகின்றனர்.
பயிருக்குத் தழைச்சத்தைக் கொடுப்பதில், பாக்டீரியா மற்றும் பயிர்களின் கூட்டு வாழ்க்கை முக்கியப் பங்கு வகிக்கிறது. தழைச்சத்தான நைட்ரஜனை, உயிர் வேதிக் கூறுகளால் மாற்றிப் பொருத்தத் தேவையான சக்தியை, பயிர்களிடம் இருந்து தான் பாக்டீரியாக்கள் பெறுகின்றன.
எனவே, பயிர்களுக்குப் பொருத்தமான பாக்டீரியாவை இணைக்கும் உயிர் வேதிக்கூறுகள், பயிர் வேர்களில் பாக்டீரியாவால் ஏற்படும் மாற்றங்கள், பயிர்கள் சுரக்கும் வேர்ச் சத்துகள், வளர்ச்சி ஊக்கிகள், அங்கக அமிலங்கள், பசை போன்ற மாவுச்சத்து ஆகியன ஒன்று சேர்ந்து நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை வேர்ப்பகுதிக்கு ஈர்க்கின்றன. இவை, இயற்கையாக, காலங்காலமாக, மண்ணில் நடந்து கொண்டே உள்ளன. இப்படி ஈர்க்கப்படும் பாக்டீரியாக்கள், வேர்ப்பகுதியில் தன்னினத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. பிறகு, இவை கூட்டாகச் சேர்ந்து, காற்றிலுள்ள தழைச்சத்தைப் பயிர்களுக்குக் கிடைக்கச் செய்கின்றன.
ரைசோபியம்
இது, பயறுவகைப் பயிர்கள் மற்றும் நிலக்கடலையில் கூட்டு வாழ்க்கை நடத்துகிறது. விதை முளைக்கும் போது வேரிழைகள் மூலமும், பக்க வேர்கள் கிளைக்கும் போது ஏற்படும் பிளவுகள் மூலமும் வேருக்குள் நுழைந்து, அங்கே முடிச்சுகளை உருவாக்குகிறது. நைட்ரஜனை நிலைப்படுத்துவதில் இந்த முடிச்சுகளின் இளஞ்சிவப்புத் திசுக்களுக்குப் பெரும்பங்கு உண்டு.
பயறு விதைகள் முளைத்துப் பத்து நாட்களில் செடிகளின் வேரில், கடுகளவில் குமிழ்கள் அல்லது பருக்கள் தோன்றும். பிறகு இவை வளர்ந்து வேர் முடிச்சுகளாகும். பயிர்கள் பூக்கும் போது இந்த முடிச்சுகள் அதிகமாகும். இவற்றின் எண்ணிக்கை, பருமன் மற்றும் உருவ அமைப்பு, பயிருக்கு ஏற்ப வேறுபடும். பாசிப்பயறு, தட்டைப்பயற்றில் செடிக்கு 40, உளுந்தில் 20-40, நிலக்கடலையில் 100-170 வீதம் வேர் முடிச்சுகள் இருக்கும்.
பயறு வகைகளில் வேர் முடிச்சுகளை உருவாக்கும் பாக்டீரியாக்கள் அனைத்துக்கும் ரைசோபியம் என்றே பெயர். ஆனால், இதில் பல பிரிவுகள் உண்டு. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தாவரத்துடன் இணைந்து தான் வேர் முடிச்சுகளை உருவாக்கும். எனவே, ரைசோபிய உயிர் உரத்தை வாங்கும் போது எந்தப் பயிருக்குப் பயன்படுத்த என்பதைக் கூறி வாங்க வேண்டும். ரைசோபியத்தை விதை நேர்த்திக்குப் பயன்படுத்துவதே சிறந்த முறை.
ரைசோபிய நுண்ணுயிர், பயறுவகைப் பயிர்களின் வேர்களில் முடிச்சுகளை உருவாக்கி அங்கே, காற்றிலுள்ள தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது. ரைசோபியத்தைப் பயன்படுத்தினால், தழைச்சத்து உரத்தைச் சேமிப்பதுடன், 20% மகசூல் கூடுதலாகவும் கிடைக்கும். பயிர்களின் வேர்களில் இருந்து கசியும் வேர்க்கசிவுகளும், வேர் முடிச்சுகளில் இருந்து வெளியாகும் உயிர்ப் பொருள்களும் மண்வளத்தை மேம்படுத்தும். ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா மற்றும் பி.ஜி.பி.ஆர். நுண்ணுயிரைச் சேர்த்து இட்டால், ரைசோபியச் செயல் திறன் 7-10% கூடும்.
பாஸ்போபேக்டீரியா
பயிருக்கு இடப்படும் மணிச்சத்தில் பெரும்பகுதி மண்ணில் ஏற்படும் இரசாயன நிகழ்வால், கரைக்க முடியா நிலைக்கு மாறி விடுகிறது. எனவே, பயிர்களால் மணிச்சத்தை முழுமையாக எடுத்துக்கொள்ள முடிவதில்லை. பாஸ்போ பேக்டீரியா நுண்ணுயிர்ச் செல்களில் சுரக்கும் அங்கக அமிலங்கள், இந்த மணிச்சத்தைக் கரைத்துப் பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு மாற்றிக் கொடுக்கின்றன. இதனால், பயிர்களில் பெருமளவில் மலர்கள் தோன்றி, விதை உற்பத்திக் கூடுகிறது. பாஸ்போபேக்டீரியாவின் இந்த வேலையால், தேவையான மணிச்சத்து உரத்தில் 25 சதத்தைக் குறைத்தே இடலாம்.
இந்த பாஸ்போபேக்டீரியாவை, தழைச்சத்தைத் தரவல்ல ரைசோபியம் மற்றும் அசோஸ்பயிரில்லத்துடன் கலந்து இட்டால், இரண்டு நுண்ணுயிர் உரங்களின் செயல் திறன் அதிகமாகும். பாஸ்போபேக்டீரியா பயன்பாட்டின் மூலம் கிடைக்கும் தானியங்களில் புரதத்தின் அளவும் கூடுகிறது. மகசூலும் எக்டருக்கு, 200 முதல் 500 கிலோ வரை கூடுதலாகக் கிடைக்கிறது.
வேர் உட்பூசணம்
சைகோமைசிட்டிஸ் என்னும் பூசணப் பெருவகுப்பைச் சேர்ந்த இப்பூசணம், மரம், செடி, கொடிகளுடன் இணைந்து கூட்டு வாழ்க்கை நடத்துவதால், பயிர்களுக்குப் பல வகைகளில் நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றுள் முக்கியமானது சிறந்த முறையில் கிட்டும் வகையில், பயிர்களுக்கு மணிச்சத்துக் கிடைப்பதாகும். மேலும், சுண்ணாம்பு, செம்பு, தாமிரம், துத்தநாகம் போன்றவையும் கிடைக்கச் செய்கிறது. இதனுடன் கூட்டு வாழ்க்கை நடத்தும் பயிர்களில், வறட்சியைத் தாங்கும் தன்மை, நோயெதிர்ப்புச் சக்தி மற்றும் நூற்புழுவை எதிர்கொள்ளும் திறன் கூடுகிறது. இதனால், மகசூலும் அதன் தரமும் உயர்வது தெரிய வந்துள்ளது.
பூசண வேரிழைகள்; பேரூட்டம் மற்றும் நுண்ணூட்டச் சுழற்சி மற்றும் உயிர்ச் சிதைவுகளில் ஏற்படும் சத்துப் பரிமாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த வேரிழைப் பகுதியில் சுரக்கும் வேதிப் பொருள்களால், நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் பெருகுகின்றன. இப்பூசண இழைகளின் வலையமைப்பால் மண்ணின் கட்டமைப்புச் சீரடைகிறது; மண்ணரிப்புத் தடுக்கப்படுகிறது; கரிமச்சத்து அதிகமாகிறது.
இந்நுண்ணுயிர்கள்; தழைச்சத்துக்காக, அசோஸ்பயிரில்லம், அசட்டோபாக்டர், ரைசோபியம், அசோலா, நீலப்பச்சை பாசி எனவும், மணிச்சத்துக்காக, பேசில்லஸ், சூடோமோனாஸ், வேர் உட்பூசணம் எனவும், பயிர்ப் பாதுகாப்புக்காக, பி.ஜி.பி.ஆர் எனவும் தனித்தனியாக அல்லது கூட்டாகத் தயாரித்து விற்கப்படுகின்றன. இவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலும், ஆராய்ச்சி மையங்களிலும், வேளாண் துறையிலும் கிடைக்கின்றன.
கவனிக்க வேண்டியவை
பயன்படுத்துவதற்கான காலம் உள்ளதா என்பதைப் பார்த்து, நுண்ணுயிர் உரப் பொட்டலங்களை வாங்க வேண்டும். காலாவதி ஆவதற்குள் பயன்படுத்த வேண்டும். பயிர்களுக்கு உகந்த நுண்ணுயிர் உரத்தைப் பயன்படுத்த வேண்டும். உலர்ந்த மற்றும் குளிர்ச்சியான இடத்தில் சேமிக்க வேண்டும். பூச்சிக்கொல்லி, பூசணக்கொல்லி, களைக்கொல்லியுடன் கலக்கக் கூடாது. விதைநேர்த்தியின் போது முதலில் பூசணக் கொல்லியையும், கடைசியில் நுண்ணுயிர் உரங்களையும் பயன்படுத்த வேண்டும்.
நுண்ணுயிர் உரங்களை வெய்யிலுக்கு முன் அதிகாலை நேரத்தில் பயன்படுத்த வேண்டும். ஆறிய அரிசிக்கஞ்சி அல்லது வெல்லக் கரைசலில் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். இரசாயன உரங்களுடன் கலந்து இடக்கூடாது. நுண்ணுயிர் உரங்கள் மண்ணில் நன்கு செயல்பட, நிலத்தில் தொழுவுரம் மற்றும் அங்ககப் பொருள்களை அதிகளவில் இட வேண்டும்.
முனைவர் இரா.பிருந்தாவதி,
முனைவர் வே.விஜயகீதா, முனைவர் கா.பரமேஸ்வரி,
வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையம், திண்டிவனம்-604002, விழுப்புரம் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!