கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018
முலாம்பழம் இனிப்பும், நல்ல மணமும் உள்ள பழமாகும். இதில், அதிகளவில் வைட்டமின் ஏ,பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துகள் உள்ளன. முலாம்பழக் காய் சமைக்கவும், ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகிறது. பழம் இனிப்பாக இருக்கும். இதனால், இப்பழங்களில் இருந்து ஜாம், ஜெல்லி ஆகியன தயாரிக்கப்படுகின்றன.
உலர வைத்த பழத்துண்டுகளைப் பல நாட்களுக்குச் சேமித்து வைக்கலாம். இப்பழமானது நீளம், உருண்டை, முட்டை போன்ற வடிவங்களில் இருக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் உடலைக் குளிர்ச்சிப்படுத்தும் மருந்தாக இப்பழம் பயன்படுகிறது. அதிக நாட்கள் கெடாமல் இருப்பதால் முலாம் பழங்கள் ஏற்றுமதிக்கு மிகவும் ஏற்றவை.
சாகுபடி முறை
மண்வகை: நல்ல வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான மண் மிகவும் ஏற்றது. 6-7.5 அமில-காரத்தன்மை உள்ள மண்ணில் நன்கு வளரும். ஆனால், அதிக அமிலம் மற்றும் உப்புள்ள மண், முலாம்பழச் சாகுபடிக்கு ஏற்றதல்ல. களித்தன்மையுள்ள நிலத்தில், குழிகளை எடுத்து மணலைப் போட்டு, நல்ல வடிகால் வசதியை ஏற்படுத்தினால் களிமண் நிலத்திலும் சாகுபடி செய்யலாம்.
தட்ப வெப்பம்: முலாம்பழம் நன்கு வளர்வதற்கு, அதிகளவில் சூரியவொளி, குறைந்த ஈரப்பதம், உறைபனி இல்லாத மற்றும் மிதமான வறண்ட சூழ்நிலை தேவைப்படுகிறது. 23-27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மிகவும் ஏற்றது.
இரகங்கள்
அர்கா ராஜ்கான்ஸ்: உருண்டை வடிவமுடைய இக்காயின் மேற்பரப்பில் வலைகள் நன்றாகத் தெரியும். இது, வெள்ளையாகவும், சதைப்பிடிப்பு மிக்கதாகவும் இருக்கும். இனிப்புச் சுவையுள்ள இந்த இரகம், எக்டருக்கு 30-32 டன் மகசூலைக் கொடுக்கும். ஒரு காயின் எடை 1-1.5 கிலோ இருக்கும்.
அர்கா ஜூட்: இந்த இரகத்தின் பழம் சிறியதாக, அதாவது, 400-800 கிராம் இருக்கும். பழங்கள் அதிக இனிப்புச் சுவையுடன் இருக்கும். ஒரு எக்டரில் 15-16 டன் மகசூலை 90 நாட்களில் கொடுக்கும்.
பூசா சர்பதி: இந்த இரகத்தின் பழம் உருண்டை மற்றும் நீளமாக இருக்கும். இப்பழத்தின் மேல் தெளிவான வளைகளும், பச்சையான நேர் கோடுகளும் காணப்படும். உட்புறச் சதையானது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
பூசா மதுராஸ்: இப்பழம் இளம்பச்சை நிறத்தில், கரும்பச்சைக் கோடுகளுடன் காணப்படும். சதைப்பகுதி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இனிப்புச் சுவையுடைய இப்பழம் சராசரியாக ஒரு கிலோ இருக்கும்.
பஞ்சாப் சன்ஹெரி: இதன் சதை ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இது வீரிய ஒட்டு இரகமாகும்.
ஹரா மாது: உருண்டையாகக் காய்க்கும் இந்தப் பழத்தின் மேற்பரப்பு வெள்ளையாக, பச்சைநிற நேர் கோடுகளுடன் இருக்கும். காம்பானது கொடியுடன் உறுதியாக ஒட்டிக்கொண்டு இருப்பதால், முற்றிய பின்னும் கொடியிலிருந்து அறுவடை செய்வது கடினமாக இருக்கும். இனிப்பாக இருக்கும் இப்பழத்தின் சதைப்பகுதி, இளம் பச்சை நிறத்தில் இருக்கும்.
துர்காபுரா மாது: இரண்டு பருவங்களுக்கு இடையில் பயிரிட இந்த இரகம் ஏற்றது. நீளமாகக் காய்க்கும் இக்காயின் மேற்பரப்பு, இளம் பச்சையாக இருக்கும். மேலும், பச்சை நிறத்தில் நேர்க்கோடுகள் இருக்கும். சதைப்பகுதி, இளம் பச்சையாக இருக்கும். சராசரியாக ஒரு காயின் எடை 500-700 கிராம் இருக்கும். ஜாப்நர் 96-2: அமில, காரத்தன்மை அதிகமாக இருக்கும் இடத்தில் கூட இந்த இரகம் நன்கு வளரும்.
பஞ்சாப் ரசிலா: இந்த இரகமானது நீளமான கொடிகளைக் கொண்டது. இதில் காய்ப்பிடிப்பு அடிக்கொடியில் இருந்து தொடங்கும். உருண்டையாக இருக்கும் இக்காயின் மேற்பரப்பு இளமஞ்சளாகவும், சதைப்பகுதி பச்சை நிறத்தில் சற்றுத் தடிமனாகவும் இருக்கும். சராசரியாக ஒரு காயின் எடை 600 கிராம் இருக்கும். இந்த இரகம் ஒரு எக்டரில் 16டன் மகசூலைக் கொடுக்கும்.
பருவம்
டிசம்பர், ஜனவரி மாதங்களில் விதைத்தால் கோடையில் நல்ல மகசூலைக் கொடுக்கும். இதை மானாவாரியாக ஜூன் மாதத்தில் விதைக்கலாம்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை 3-4 முறை உழுது, எக்டருக்கு 50 டன் மட்கிய தொழுவுரத்தை இட்டு மண்ணை நன்கு பண்படுத்த வேண்டும். பிறகு, 2 அடி அகலத்தில் நீளமான வாய்க்கால்களை 2 மீ. இடைவெளியில் எடுக்க வேண்டும். வாய்க்கால்களின் பக்கவாட்டில், 45 செ.மீ. நீள, அகல, ஆழமுள்ள குழிகளை ஒரு மீட்டர் இடைவெளியில் எடுக்க வேண்டும். இக்குழிகளில் உரங்களைப் போட்டு மண்ணுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
விதை நேர்த்தி
ஒரு எக்டருக்கு 3.5 கிலோ விதை தேவைப்படும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது 2 கிராம் கார்பென்டசிம்மைச் சேர்த்து நன்கு கலக்கி விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
விதைப்பு
குழிகளின் மத்தியில் விதைகளை விதைக்க வேண்டும். விதைத்த 15 நாட்கள் கழித்து ஒரு குழிக்கு 2 நாற்றுகளை மட்டும் விட்டுவிட்டு, மீதியை அகற்றிவிட வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைப்புக்கு முன் நீரைப் பாய்ச்சிவிட வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் உயிர்நீர் கொடுக்க வேண்டும். பிறகு, வாரம் ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும்.
களை நீக்கம்
விதைத்த 30 நாட்கள் கழித்து களையெடுக்க வேண்டும். பொதுவாக 3 முறை களைகளை அகற்ற வேண்டும்.
கரையும் உரப்பாசனம்
எக்டருக்கு 200-100-100 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துகளை, மூன்று நாட்கள் இடைவெளியில் உரப்பாசன முறையில், கொடுக்க வேண்டும். வினையூக்கி அளித்தல்: 10 லிட்டர் நீரில் 2.5 கிராம் எதீரலை நன்கு கலக்கி, விதைத்த 15 நாட்கள் கழித்தும், பிறகு வாரத்திற்கு ஒருமுறை என்று 4 வாரங்கள் கொடுக்க வேண்டும். இதைக் கொடியின் மேல் தெளிக்க வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு
இலை வண்டுகள்: இவற்றைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி மாலத்தியான் அல்லது 2 கிராம் கார்பரில் என்னுமளவில் கலந்து வாரத்திற்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.
காய்புழுக்கள்: இவற்றைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட காய்களைப் பறித்து அழிக்க வேண்டும். பொதுவாக வெப்பநிலை அதிகமாக இருந்தால், இப்புழுக்கள் குறைவாகவும், மழைக்காலத்தில் அதிகமாகவும் இருக்கும். எனவே, இதைக் கருத்தில் கொண்டு விதைக்க வேண்டும். நிலத்தை நன்கு உழுது இந்தப் புழுக்களின் கூட்டுப் புழுக்களை வெய்யில் நன்கு படுமாறு செய்து அழிக்க வேண்டும்.
அறுவடை மற்றும் மகசூல்
இக்காய்களின் மேற்பரப்பிலுள்ள வளைகளுக்கு இடைப்பட்ட பகுதி மஞ்சளாகவும், வளைகள் மங்கிய வெள்ளையாகவும் மாறும்போது அறுவடை செய்ய வேண்டும். ஒரு எக்டருக்கு 20-30 டன் மகசூல் 120 நாட்களில் கிடைக்கும்.
முனைவர் சி.சுபா,
முனைவர் மு.சியாமளா, தோட்டக்கலைக் கல்லூரி,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் – 641 003.
சந்தேகமா? கேளுங்கள்!