My page - topic 1, topic 2, topic 3

கொத்தவரை சாகுபடி!

கொத்தவரை சிறந்த காய்கறிப் பயிராகும். இதில், மதுரை 1, பூசா நவ்பகார், பூசா சதபகார், கோமா மஞ்சரி ஆகிய இரகங்கள் சிறந்த மகசூலைத் தரும். நல்ல வடிகால் வசதியுள்ள அங்ககச் சத்துகள் நிறைந்த மண்ணில் இப்பயிர் நன்கு வளரும். மண்ணின் கார அமிலத் தன்மை 7.5-8 இருக்கலாம்.

விதைப்பதற்கு ஏற்ற பருவம் ஜூன் ஜூலை மற்றும் அக்டோபர் நவம்பர் ஆகும். எக்டருக்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும். இந்த விதைகளை 600 கிராம் டிரைக்கோடெர்மா கலந்த அரிசிக் கஞ்சியில் பிசைந்து அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். அதாவது, நன்கு உழுது பண்படுத்திய நிலத்தில் 45 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும். அந்தப் பார்களின் இருபுறமும் 15 செ.மீ. இடைவெளியில் விதைகளை நட வேண்டும்.

விதைகளை விதைத்ததும் பாசனம் செய்ய வேண்டும். மூன்றாம் நாள் உயிர் நீர் விட வேண்டும். அதன் பிறகு வாரம் ஒருமுறை பாசனம் செய்தால் போதுமானது.

கொத்தவரையில் சிறந்த மகசூலுக்கு உர நிர்வாகம் அவசியமாகும். அதாவது, எக்டருக்கு 25 டன் வீதம் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும். மேலும், அசோஸ்பயிரில்லம், பாஸ்போபாக்டீரியா முறையே 2 கிலோ, தழைச்சத்து 25 கிலோ, மணிச்சத்து 50 கிலோ, சாம்பல் சத்து 25 கிலோ ஆகியவற்றையும் அடியுரமாக இட வேண்டும். விதைத்த முப்பது நாளில் 25 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும்.

பூச்சி நிர்வாகம்

தத்துப்பூச்சி, அசுவினி, வெள்ளை ஈக்கள் போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி மீத்தைல் டெமட்டான் அல்லது ஒரு மில்லி டைமெத்தயேட் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

சாம்பல் கூன்வண்டைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி குளோர்பைரிபாஸ் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். காய்த் துளைப்பானைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் கார்பரில் அல்லது 2 மில்லி குயினால்பாஸ் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

நோய் நிர்வாகம்

இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் மாங்கோசெப் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் நனையும் கந்தகம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

மகசூல்

இப்படி முறையாகப் பராமரித்து வந்தால் 90 நாட்களில், எக்டருக்கு 5-7 டன் காய்கள் மகசூலாகக் கிடைக்கும்.


முனைவர் கோ.சதிஸ்,

முனைவர் மு.மோகனலட்சுமி, மண்டல ஆராய்ச்சி நிலையம்,

விருதாச்சலம், கடலூர் மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks