கோ.10 கம்பு சாகுபடி!

கம்பு IMG 20190102 WA0029

கட்டுரை வெளியான இதழ்: மே 2019

மிழ்நாட்டில் நெல், சோளத்தை அடுத்து அதிகளவில் கம்பு பயிரிடப்படுகிறது. குறைந்த மழையுள்ள பகுதிகளிலும் குறைந்த இடுபொருள் செலவில் நல்ல மகசூலைத் தரும். இவ்வகையில், கோ.10 கம்பைப் பயிரிடும் முறை குறித்துப் பார்க்கலாம்.

கோ.10இன் சிறப்புகள்

இறவையில் எக்டருக்கு 3,526 கிலோ, மானாவாரியில் 2,923 கிலோ கம்பு கிடைக்கும். அடிச்சாம்பல் நோயை எதிர்த்து வளரும். இதில் 12.07% புரதம் உள்ளது. 85-90 நாட்களில் விளையும். நடுத்தர உயரத்தில் அதிகத் தூர்களுடன் இருக்கும்.

நாற்றங்கால்

மேட்டுப் பாத்தி: ஒரு எக்டரில் பயிரிட, 7.5 சென்ட் நாற்றங்காலை அமைக்க வேண்டும். கடைசி உழவுக்கு முன் 750 கிலோ தொழுவுரத்தை இட்டு, 3×1.5 மீட்டர் நீள அகலத்தில் மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும். பாத்திகளைச் சுற்றி வாய்க்கால் இருக்க வேண்டும்.

இந்தப் பாத்திகளில் சோளக்குருத்து ஈக்களின் பாதிப்பைத் தடுக்க, 180 கிராம் போரேட் அல்லது 600 கிராம் கார்போபியூரானை விதைக்க வேண்டும்.

விதை நேர்த்தி: ஒரு கிலோ உப்பு 10 லிட்டர் நீர் கலந்த கரைசலில் விதைகளை இட்டு, அடியில் தங்கிய நல்ல விதைகளை எடுத்து நல்ல நீரில் 3-4 முறை அலசி நிழலில் உலர்த்த வேண்டும்.

இந்த விதைகளை 3 பொட்டலம் அஸோஸ்பைரில்லம், 3 பொட்டலம் பாஸ்போ பேக்டீரியாவில் கலந்து நேர்த்தி செய்து விதைத்து, 500 கிலோ எருவால் விதைகளை மூடிப் பாசனம் செய்ய வேண்டும். அடுத்து, 3, 7, 12, 17 ஆகிய நாட்களில் நீரைப் பாய்ச்சி, 18 நாட்களில் நாற்றுகளைப் பறித்து 45×15 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும்.

நிலத் தயாரிப்பு

நான்கைந்து தடவை நன்கு உழுவதுடன், கடைசி உழவுக்கு முன் 12.5 டன் தொழுவுரத்தை இட வேண்டும். எக்டருக்கு 10 பொட்டலம் அஸோஸ்பைரில்லம், 10 பொட்டலம் பாஸ்போ பேக்டீரியாவை, 25 கிலோ மண், 25 கிலோ தொழுவுரத்தில் கலந்து இட வேண்டும். பிறகு, பாத்திகளை அமைத்து நட வேண்டும்.

உரம்

விதைப்புக்கு முன்பே மட்கிய தொழுவுரம் அல்லது மட்கிய தென்னைநார்க் கழிவு அல்லது மண்புழு உரத்தை அடியுரமாக இட வேண்டும். ஒரு எக்டருக்குத் தேவையான 70:35:35 தழை, மணி, சாம்பல் சத்தை இட வேண்டும்.

தழைச்சத்தை மூன்று பகுதியாகப் பிரித்து, விதைக்கும் முன், விதைத்த 15 நாள், விதைத்த 30 நாளில் இட வேண்டும். மணிச்சத்து, சாம்பல் சத்தை அடியுரமாக அளிக்க வேண்டும்.

பயிர் வளர்ச்சி, திரட்சியான மணிக்கு முக்கியச் சத்தாக விளங்கும் மணிச்சத்து, செம்மண் நிலத்தில் இரும்பு, அலுமினிய அயனிகளுடன் சேர்ந்து பயிருக்குக் கிட்டாத நிலைக்கு மாறி விடுகிறது.

இதைத் தீர்க்க, ஏக்கருக்கு 4 கிலோ மணிச்சத்து, அதாவது, 25 கிலோ சூப்பர் பாஸ்பேட், 300 கிலோ தொழுவுரம் வீதம் கலந்து ஒரு மாதம் வைத்திருந்து அடியுரமாக இட வேண்டும்.

சத்துக் குறைகளும் தீர்வுகளும்: தழைச்சத்துக் குறை

அறிகுறிகள்: வளர்ச்சியின்மை, இலைகள் இளமஞ்சள் அல்லது அடர் மஞ்சளாக இருக்கும். பின் விளிம்புகளில் இருந்து நுனிவரை பரவும். இதற்கு, யூரியா 1% அல்லது டி.ஏ.பி. 2% கலவையைத் தெளிக்க வேண்டும்.

மணிச்சத்துக் குறை

அறிகுறிகள்: தானிய வளர்ச்சி இருக்காது. கதிர் மெல்லியதாக, வளர்ச்சிக் குன்றி இருக்கும். பச்சை இலை சிவப்பாக மாறும். இதற்கு, 2% டி.ஏ.பி. கரைசலை 2-3 முறை தெளிக்க வேண்டும்.

சாம்பல் சத்துக் குறை

அறிகுறிகள்: அடியிலைகளின் நுனியும் ஓரமும் மஞ்சளாக மாறிக் காய்ந்து விடும். இதற்கு, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் வீதம் கலந்த பொட்டாசியம் குளோரைடு கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும் வரை தெளிக்க வேண்டும்.

சுண்ணாம்புச் சத்துக் குறை

அறிகுறிகள்: இளம் இலைகளின் முனைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வாலைப் போல இருக்கும். இலைகளின் விளிம்புகளில் சொறி இருக்கும். இதற்கு, 2% கால்சியம் சல்பேட் கரைசலை இருமுறை தெளிக்க வேண்டும்.

நுண்ணூட்டக் கலவை

12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையை 50 கிலோ மண்ணுடன் கலந்து விதைப்பதற்கு முன் நிலத்தில் இட வேண்டும். பிராரினோஸ் டீராபாட்சை 0.1 பி.பி.எம். அளவில், 30, 50 நாளில் தெளிக்க வேண்டும்.

உயிர் உரங்கள்

ஏக்கருக்கு 4 பொட்டலம் வீதம் ரைசோபியம், பாஸ்போ பேக்டீரியா உயிர் உரங்களை இட்டால், தழைச்சத்தும் மணிச்சத்தும் சீராகக் கிடைக்கும்.

உயிர் உரங்களில் வேரை நனைத்தல் 

அஸோஸ்பைரில்லம் 5 பொட்டலம், பாஸ்போ பேக்டீரியா 5 பொட்டலம்,  அசோபாஸ் 10 பொட்டலம் எடுத்து, 40 லிட்டர் நீரில் கலந்து குழம்பைப் போன்ற கரைசலைத் தயாரிக்க வேண்டும். இதில் நாற்றுகளின் வேர்களை 15-30 வைத்திருந்து நட வேண்டும்.

இதனால், வேர் வளர்ச்சி அதிகமாகி பயிர்கள் வேகமாக வளரும். நோயெதிர்ப்புத் திறனும் கூடும்.

நேரடி விதைப்பு

மானாவாரியில் விதைகளைக் கடினப்படுத்தி விதைக்க வேண்டும். அதற்கு முன் விதைகளை ஊற வைத்து எடுத்து, பின்பு இயல்பான ஈரநிலைக்கு உலர்த்த வேண்டும். இதனால், முளைப்புத்திறன் அதிகமாகி, வேர்கள் நன்கு பரவி, பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளரும்.

விதைகளை 2% பொட்டாசியம் குளோரைடு அல்லது 3% சோடியம் குளோரைடில் 16 மணி நேரம் ஊற வைத்து எடுத்து, 5 மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைத்தால் முளைப்புத்திறன் மிகும்.

களை

உயிர் நீர் பாய்ந்து நாற்றுகள் நன்கு தழைத்ததும், தேவையறிந்து ஆட்களைக் கொண்டு களையெடுக்க வேண்டும். நிலத்தில் களைக் கொல்லியைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். கைக்களை எடுப்பதே சிறந்தது.

பயிருக்குப் போட்டியாக இல்லாத வகையில் களைகளை அகற்ற வேண்டும். மானாவாரியிலும் இதே நிலையைத் தொடர வேண்டும்.

பயிர் களைதல், இடைவெளி நிரப்புதல்

நேரடி விதைப்பில் முதல் களையெடுப்பின் போது, நெருக்கமாக இருக்கும் பயிர்களைக் களைத்து, பயிர்கள் இல்லாத இடங்களில் 15 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். ஏக்கருக்கு 5 டன் மட்கிய தென்னைநார்க் கழிவை இட்டால் மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மை கூடும்.  

பாசனம்

முளைக்கும் பருவம், தழைக்கும் பருவம், பூக்கும் பருவம் மற்றும் முதிர் பருவத்தில் பாசனம் செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும். நீர் குறைவாக இருந்தால், முளைக்கும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் கட்டாயம் பாசனம் கொடுக்க வேண்டும்.

அறுவடை

இலைகள் மஞ்சளாகி, தானியம் கடினமானதும், கதிர்களை அறுவடை செய்து தானியத்தைப் பிரித்து 10%க்குக் குறைவான ஈரப்பதத்தில் உலர்த்தி, 100 கிலோ தானியத்துக்கு ஒரு கிலோ வீதம் வெண் களிமண்ணைக் கலந்து வைக்க வேண்டும். இதனால் அரிசி அந்துப்பூச்சித் தாக்குதல் குறையும். பிறகு சாக்குகளில் சேமிக்க வேண்டும்.

நிலப்போர்வை அமைத்தல்

மானாவாரி சாகுபடியில் நீராவிப்போக்கு, பயிருக்குத் தேவைப்படும் நீரை விட அதிகம். எனவே, மண் ஈரம் ஆவியாவதைத் தடுக்க, பாலித்தீன் போர்வைகள், காய்ந்த இலைச் சருகுகளால் நிலத்தை மூட வேண்டும்.

தென்னைக் கழிவுகளைத் திடப் போர்வையாகப் பயன்படுத்தலாம். இதனால், அங்கக உரங்கள் மண்ணில் சேர்வதுடன் களைகளும் வெகுவாகக் குறையும்.

மேலும் 0.5% பொட்டாசியம் குளோரைடு கரைசலை, அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் வீதம் பொட்டாசியம் குளோரைடு கலந்த கரைசலை, பூத்தல், மணிப் பிடித்தல் நேரத்தில் தெளிக்கலாம். 


கம்பு MAGESWARAN

பொ.மகேஸ்வரன்,

உழவியல் தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம்,

காமாட்சிபுரம், தேனி-625520.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading