My page - topic 1, topic 2, topic 3

பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

க்களுக்கும், கால்நடைகளுக்கும் தீமைகளை விளைவிக்கும் பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதை, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி, விவசாயிகளுக்கு விளக்கி உள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பார்த்தீனியச் செடி

இது, அனைத்து நிலங்களில், அனைத்துப் பருவங்களில், அனைத்துச் சூழ்நிலைகளில் வளரக்கூடிய நச்சுத்தன்மை கொண்ட களைச் செடியாகும். இதன் வாழ்க்கைச் சுழற்சி 3-4 மாதங்களாகும். இதன் விதைக்கு உறக்க நிலை கிடையாது. ஒரு செடியானது 5,000 முதல் 25,000 விதைகளை உற்பத்தி செய்யும். இச்செடி மிக வேகமாகவும் வளரும். உடைந்த எந்தப் பாகத்திலிருந்தும் வளரும். இச்செடி, நச்சுத் தன்மை மிக்கது. அழிவை ஏற்படுத்தக் கூடியது, பிரச்சினைக்கு உரியது, ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியது.

ஏற்படும் பாதிப்புகள்

பார்த்தீனியப் பூக்களில் உள்ள மகரந்தங்கள் காற்றில் பரவிப் பாதிப்புகளை ஏற்படுத்தும். மனிதர்களுக்குத் தோல் நோய், ஆஸ்துமா, காசநோய், தொழு நோய் ஏற்படும். கால்நடைகளுக்குத் தோல் ஒவ்வாமை மற்றும் முடியிழப்பு, பால் உற்பத்திப் பாதிப்பு, செரிமானப் பிரச்சனை ஏற்படும். கண் எரிச்சல், நீர் வடிதல், வயிறு உப்புதல் போன்ற அறிகுறிகள் பார்த்தீனியச் செடிகளால் ஏற்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

கைகளாலும், இயந்திரம் மூலமாகவும் இச்செடிகளை அழிக்கலாம். இரசாயனங்கள் மூலம் மிக விரைவாக, பரவலாக, பயனுள்ள வகையில் அகற்றி விடலாம். ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் அட்ரசின் அல்லது 3 கிராம் மெட்ரிபுசின் வீதம் கலந்து, விதை முளைப்பதற்கு முன்போ, பயிர் இல்லாத இடத்திலோ தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

ஒரு லிட்டர் நீருக்கு 200 கிராம் சோடியம் குளோரைடு உப்பு அல்லது 8 கிராம் 2,4-டி சோடியம் உப்பு அல்லது 10 மி.லி. கிளைபோசேட்டுடன் 20 கிராம் அமோனியம் சல்பேட் மற்றும் 2 மி.லி சோப்பு எண்ணெய் வீதம் கலந்து, இந்தச் செடிகள் பூப்பதற்கு முன், நன்கு நனையுமாறு தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

மேலும், துலுக்க சாமந்தி, முள்ளுக்கீரை போன்ற போட்டித் தாவரங்களை வளர்ப்பதன் மூலமும் கட்டுப்படுத்தலாம் என, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.


நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks