My page - topic 1, topic 2, topic 3

சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

மிழகத்தில் முதல் முறையாக ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயின் தாக்குதல் பொள்ளாச்சிப் பகுதியில் 2016 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் தென்னை மரங்கள் உள்ள பல பகுதிகளில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் காணப்படுகிறது. இந்தப் பூச்சி 200க்கும் மேற்பட்ட பயிர்களைத் தாக்கும் வல்லமை உடையது.

அறிகுறிகள்

இளம் குஞ்சுகள் இலைகளில் சாற்றை உறிஞ்சும். அவை முப்பது நாட்களில் முழுமையாக வளர்ந்த ஈக்களாக மாறி, அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ஈக்கள் தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் தேன் துளிகள் போன்ற கழிவை வெளிவிடும். அதன் காரணமாக ஓலைகளின் மேற்பரப்பில் கரும் பூசணம் படிந்து விடும். இதனால், ஓலையில் பச்சையம் குறைவதால் மகசூலும் குறையும்.

வாழ்க்கைச் சுழற்சி

சுருள் வெள்ளை ஈக்கள் சுருள் வடிவில் மஞ்சள் நிற முட்டைகளை இலைகளின் அடிப்பரப்பில் இடும். இம்முட்டைகள் மெழுகுப் பொருளால் இணைக்கப்பட்டு அரை வட்டமாகக் காட்சியளிக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் முதல்நிலைக் குஞ்சுகள் கால்களுடன் நகரும். மற்ற நிலைக் குஞ்சுகள் நகரும் தன்மை அற்றவை. முதிர்ந்த ஈக்களின் இறக்கைகளில் இளம் பழுப்புநிறப் பட்டை காணப்படும்.

மேலாண்மை முறைகள்

இயந்திர முறை: ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை இயந்திர முறையில் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு ஐந்து மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்த வேண்டும். சுருள் வெள்ளை ஈக்கள் மஞ்சள் நிறத்தால் கவரப்படுவதால் மஞ்சள் நிற ஒட்டும் பொறி பயன்படுத்தப் படுகிறது. சூரிய ஒளியால் இயங்கக் கூடிய மஞ்சள் விளக்குப் பொறியை ஏக்கருக்கு ஒன்று வீதம் வைக்கலாம். பாதிக்கப்பட்ட இலைகளில் நீரைப் பீய்ச்சி அடித்தால், வெள்ளை ஈக்களின் முட்டைகள் சேதமடையும். இதனால், இந்த ஈக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம்.

நுண்ணுயிரிகளின் பயன்பாடு

ஐசேரியா-பியூ-மசரோச என்னும் பூசண வகை உயிரிப் பூச்சிக் கொல்லிகளை, ஒரு லிட்டர் நீருக்கு 5 மில்லி வீதம், 5 கிராம் காதி சோப்பையும் கரைத்துப் பயன்படுத்துவதன் மூலம் இந்த வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.

பூச்சிவகை ஒட்டுண்ணிகள்

என்கார்சியா என்னும் குளவி வகை ஒட்டுண்ணிகளைத் தோட்டத்தில் அதிகரித்தல் மூலம் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம். ஏக்கருக்கு ஐம்பதாயிரம் பொறி வண்டுகளை அதிகரிப்பதன் மூலமும் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம். இரை விழுங்கிகளான கண்ணாடி இறக்கை பூச்சியை ஏக்கருக்கு 4,000 வீதம் வெளியிடும் போது ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த முடியும்.

ஊடுபயிர், வரப்புபயிர்

ஊடுபயிராக உளுந்து, தட்டைப்பயறு மற்றும் வரப்புப் பயிராகச் சணப்பை, தக்கைப்பூண்டு ஆகியவற்றைப் பயிரிட்டால் நன்மை செய்யும் பூச்சிகள் பெருகி, வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி விடும்.

இயற்கைமுறை கட்டுப்பாடு

ஒரு லிட்டர் நீருக்கு 25 மில்லி வேப்ப எண்ணெய் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். ஐந்து சத வேப்பங் கொட்டைக் கரைசலைப் பயன்படுத்திச் சுருள் வெள்ளை ஈக்களின் ஆதிக்கத்தைக் குறைக்கலாம். பூச்சித் தாக்குதலால் உண்டாகும் கரும்பூசண வளர்ச்சியை அகற்ற, ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் மைதா மாவு வீதம் எடுத்துக் கரைத்து ஓலைகளின் மேற்பகுதி நனையும்படி தெளிக்க வேண்டும்.

இப்படி, ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளைச் செய்வதன் மூலம், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் பெருக்கத்தைக் குறைத்து, தென்னை மகசூலை அதிகரிக்கலாம்.


ச.ப்ரீத்தி,

பி.பிரியதர்ஷினி, ரா.ரூபிகா, ர.ரூபிணி, பி.சமிதா, ச.சந்தியா,

இளம் அறிவியல் தோட்டக்கலை, நான்காம் ஆண்டு,

மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் திருச்சி.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks