My page - topic 1, topic 2, topic 3

பசுந்தாள் உரப் பயிர்களில் விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020

ண்ணில் அங்ககப் பொருள்களின் தன்மையைப் பெருக்கும் நோக்கில் பயிரிடப்படுவன பசுந்தாள் உரப் பயிர்கள். இவற்றை விவசாயிகளே பயிரிட்டுக் கொள்வதால் தேவையற்ற செலவும் இல்லை; நிலவளம் கெடுவதுமில்லை. ஆனால், இரசாயன உரங்களை இடுவதால் அதிகச் செலவும் நிலவளப் பாதிப்பும் ஏற்படும். பசுந்தாள் உரம் என்பது பசுமையான மற்றும் சிதையாத பொருள்களை உரமாக இடுவதாகும். இதை, பசுந்தாள் பயிர்களை வளர்ப்பதன் மூலம் அல்லது தரிசுநிலம், வயல், வரப்பு, காடுகளில் வளரும் மரங்களிலிருந்து எடுக்கப்படும் பசுந்தழைகளின் மூலம் பெறலாம்.

பசுந்தாள் உரம்

இது, பயறு வகைகளைப் பயரிட்டு, போதுமான வளர்ச்சியை அடைந்ததும் நிலத்தில் மடக்கி உழுவதாகும். தக்கைப்பூண்டு, சித்தகத்தி, மணிலா அகத்தி, சணப்பு, கொளுஞ்சி, நரிப்பயறு போன்றவை முக்கியமான பசுந்தாள் உரப்பயிர்களாகும்.

பசுந்தழை உரம்

இது, வேறு இடங்களிலிருந்து கொண்டு வரப்படும் இலைகள், புதர்ச் செடிகள் மற்றும் சிறு செடிகளாகும். காட்டு மரங்கள் தான் பசுந்தழை உரத்தின் முக்கிய மூலதனமாகும். தரிசு நிலங்கள், வயல் வரப்பைப் போன்ற இடங்களில் வளரும் செடிகளும் பசுந்தழை உரத்தின் ஆதாரமாகும். கிளைரிசிடியா, வேம்பு, புங்கன், கொடிப்பூவரசு, எருக்கு மற்றும் புதர்ச் செடிகள் பசுந்தழை உரமாகும்.

பசுந்தாள் உரப் பயிர்கள்

பயிர்களின் அறுவடைக்குப் பிறகுள்ள குறைவான மழைக்காலத்தில்  இவற்றை வளர்க்கலாம். இவை, முதன்மைப் பயிரின் பூச்சி மற்றும் நோய்களை வளர்க்கும் விதத்தில் இருக்கக் கூடாது, பூச்சி மற்றும் நோய்த் தாக்கம் குறைவாக இருக்க வேண்டும். எளிதில் பயிரிடவும் அதிக விதை உற்பத்திக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். கிழங்கு வகை விதைகளைத் தவிர்த்தல் நல்லது. பல்வகைப் பயன்பாடுகளுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும். எ.கா: தீவனம், கால்நடை வளர்ப்பு மற்றும் விறகு பயன்பாடு.

சாகுபடி முறைகள்

தக்கைப் பூண்டு: பாசன வசதியுள்ள இடங்களில் அனைத்துப் பருவங்களிலும், எல்லா மண்ணிலும் பயிரிடலாம். விதை உற்பத்திக்கு மார்ச் ஏப்ரல் காலம் ஏற்றதாகும். பசுந்தாள் உர உற்பத்திக்கு எக்டருக்கு 50 கிலோ விதைகள் தேவை. விதை உற்பத்திக்கு எக்டருக்கு 20 கிலோ விதைகள் தேவை. இவற்றை ஐந்து பொட்டல ரைசோபியத்தில் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும். விதை உற்பத்திக்கு 45×20 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். 15-20 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் அவசியம். நூறு நாட்களுக்குப் பிறகு அறுவடை செய்தால் 500-600 கிலோ விதைகளும், 25 டன் பசுந்தாள் உரமும் கிடைக்கும்.

சித்தகத்தி: அனைத்துப் பருவங்களிலும், எல்லா மண்ணிலும் பயிரிடலாம். விதை உற்பத்திக்கு மார்ச் ஏப்ரல் காலம் ஏற்றதாகும். பசுந்தாள் உர உற்பத்திக்கு எக்டருக்கு 30-40 கிலோ விதைகள் தேவை. விதை உற்பத்திக்கு எக்டருக்கு 15 கிலோ விதைகள் போதும். இவற்றை ஐந்து பொட்டல ரைசோபியத்தில் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும். விதை உற்பத்திக்கு 45×20 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். 15-20 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் அவசியமாகும். 130 நாட்களுக்குப் பிறகு அறுவடை செய்தால் 400-600 கிலோ விதைகளும், 15-18 டன் பசுந்தாள் உரமும் கிடைக்கும்.

மணிலா அகத்தி: அனைத்துப் பருவங்களிலும் விதைக்கலாம். மார்ச் – மே பருவம் விதை உற்பத்திக்கு ஏற்றது. செம்மண், கரிசல் மண்ணில் நன்கு வளரும். பசுந்தாள் உர உற்பத்திக்கு எக்டருக்கு 40 கிலோ விதைகள் தேவை. விதை உற்பத்திக்கு 7-8 கிலோ விதைகள் போதும். ஒரு கிலோ விதைகளுக்கு 100 மில்லி அடர் கந்தக அமிலம் வீதம் எடுத்து, அதில் 10 நிமிடங்கள் விதைகளை இட்டு எடுத்து நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். பிறகு ஐந்து பொட்டல ரைசோபியத்தில் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும்.

விதை உற்பத்திக்கு 45×20 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். 15-20 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் அவசியம். கிளைகள் அதிகமாக, 60 நாளில் நுனியைக் கிள்ளிவிட வேண்டும். விதை உற்பத்திக்கு, 100 நாட்களுக்குப் பிறகு 3-4 முறை அறுவடை செய்யலாம். 20 டன் பசுந்தாள் உரமும் 500-600 கிலோ விதைகளும் கிடைக்கும்.

சணப்பு: அனைத்துப் பருவங்களிலும் விதைக்கலாம். மார்ச் ஏப்ரல் காலம் விதை உற்பத்திக்கு ஏற்றது. வண்டல் மற்றும் மணல் கலந்த மண்ணில் நன்கு வளரும். பசுந்தாள் உற்பத்திக்கு எக்டருக்கு 25-30 கிலோ விதைகள் தேவை. விதை உற்பத்திக்கு 20 கிலோ விதைகள் போதும். விதைகளை ஐந்து பொட்டலம் ரைசோபியத்தில் கலந்து நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். விதை உற்பத்திக்கு 45×20 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். மாதம் ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். விதை உற்பத்திப் பயிரை 150 நாட்களுக்குப் பிறகு அறுவடை செய்யலாம். 13-15 டன் பசுந்தாள் உரமும், 400 கிலோ விதைகளும் கிடைக்கும்.

கொளுஞ்சி: அனைத்துப் பருவங்களிலும் எல்லா மண்ணிலும் விதைக்கலாம். மார்ச் ஏப்ரல் காலம் விதை உற்பத்திக்கு ஏற்றது. விதை உற்பத்திக்கு மணற்சாரியான மண் ஏற்றது. பசுந்தாள் உற்பத்திக்கு எக்டருக்கு 15-20 கிலோ விதைகள் தேவை. விதை உற்பத்திக்கு 10 கிலோ விதைகள் போதும். ஒரு கிலோ விதைகளுக்கு 100 மில்லி அடர் கந்தக அமிலம் வீதம் எடுத்து, அரைமணி நேரம் அதில் வைத்திருந்து, பிறகு 10-15 முறை நீரில் நன்றாகக் கழுவி விதைக்க வேண்டும்.

விதை உற்பத்திக்கு 30×10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். மாதம் ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். விதைக்காகப் பயிரிட்டால் 150 நாட்களுக்குப் பிறகு அறுவடை செய்யலாம். 6-7 டன் பசுந்தாள் உரமும், 400-500 கிலோ விதைகளும் கிடைக்கும்.

நரிப்பயறு: அனைத்துப் பருவங்களிலும், எல்லா மண்ணிலும் வளரும். மார்ச் ஏப்ரல் பருவம் விதை உற்பத்திக்கு ஏற்றதாகும். விதை உற்பத்திக்கு நெல் தரிசு ஏற்றது. பசுந்தாள் உர உற்பத்திக்கு எக்டருக்கு 10-15 கிலோ விதைகள் தேவை. விதை உற்பத்திக்கு 10 கிலோ விதைகள் போதும். விதை உற்பத்திக்கு 30×10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். 25-30 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் அவசியம். விதை உற்பத்திப் பயிரை 150 நாட்களுக்குப் பிறகு அறுவடை செய்யலாம். 6-7 டன் பசுந்தாள் உரமும், 400-500 கிலோ பயறும் கிடைக்கும்.

பசுந்தாள் உரத்தின் பயன்கள்

மண்ணின் இயற்பியல், வேதியியல் குணங்களை வேளாண்மைக்குச் சாதகமாக்கும். நிலத்தில் அங்ககப் பொருள்களின் தன்மையை நிலையாக்கும். நிலத்தில் மட்கிப் பயிருக்குச் சத்தாகும். மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தும். கடின மண்ணில் நுண் துளைகளை ஏற்படுத்தி, காற்றோட்டம் மற்றும் நீர் வடிகாலுக்கு உதவும்.

இளகிய மண்ணில் நீர் நிலைப்புத் தன்மையைப் பெருக்கும். நிலத்தை உழும்போது அடிமட்ட அடுக்குகளில் இருக்கும் சத்துகளை உறிஞ்சி மேலே கொண்டு வந்து பயிர்களுக்குக் கொடுக்கும்.

பசுந்தழைகள்

கிளைரிசிடியா: இந்தியாவுக்கு 1950களில் இது கொண்டு வரப்பட்டது. இது வாய்ப்புள்ள சூழலில் மரமாக வளர்ந்து நிழலைத் தரும். மேலும், தேயிலை, கோக்கோ தோட்ட உரமாகப் பயன்படும். நன்செய் நிலத்தில் 1-2 மீட்டர் அல்லது 0.5 மீட்டர் இடைவெளியில் 3-4 வரிசைகளில் நடப்படும். மேலும், நிலத்தின் ஓரப்பகுதி சாலையின் இருபுறமும் நடப்படும். பசுந்தழைக்காக வளர்த்தால் குறிப்பிட்ட உயரத்தில் கவாத்து செய்யப்படும். இதன் நிழலால் பயிர்கள் பாதிப்பதில்லை. தண்டுக்குச்சி, நாற்று மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். ஒரு மரம் 50-100 கிலோ தழையைத் தரும்.

புங்கன்: இம்மரம் 4-5 மீட்டர் உயரம் வளரும். இது, பசுமை மாறாப் பயறுவகை மரமாகும். சதுப்பு நிலம், ஆற்றோரம், நீர்நிலைகளின் ஓரம், தரிசு நிலம் மற்றும் சாலையோரங்களில் வளரும். நாற்றுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். ஒரு மரம் ஓராண்டில் 100-150 கிலோ பசுந்தழையைத் தரும்.

கொடிப்பூவரசு: மிக விரைவில் அதிகக் கிளைகளுடன் வறட்சியைத் தாங்கி வளரும். குறைந்த காலத்தில் அதிகத் தழைகளைத் தரும். ஓராண்டில் 2-3 முறை வெட்டலாம்.

வேம்பு: எல்லா மண்ணிலும் வளரும். நிலம், ஆற்றங்கரை, சாலையோரம் மற்றும் தரிசில் வளரும். கிளைக்கு 150-200 கிலோ தழை கிடைக்கும்.

பயிர்களை இடுவதிலுள்ள தடைகள்

தொடர்ந்து சாகுபடி நடக்கும் பகுதியில் வருவாயே இல்லாமல் 6-8 வாரங்கள் வரையில் இப்பயிர்களை வளர்க்க விவசாயிகள் விரும்புவதில்லை. கடும் வெப்பம் நிலவும் மே, சூன் காலத்தில் உழவடை வேலைகளைச் செய்வது கடினமாக இருக்கும். பசுந்தாள் பயிர் விதைகளின் விலை அதிகமாக இருப்பது மற்றும் தரமான விதைகள் கிடைப்பதில் சிக்கல் இருப்பது. இவற்றை ஊடுபயிராக இட்டால், முக்கியப் பயிருக்குப் போட்டியாக வளர்ந்து அதன் வளர்ச்சியைப் பாதிக்கச் செய்வது, தடையாக உள்ளது.

நன்மைகள்

மண்ணின் அமைப்பு மேம்படும். நீர்ப்பிடிப்புத் திறன் கூடும். மண் அரிப்பால் ஏற்படும் இழப்பும். களைச்செடிகளின் வளர்ச்சியும் குறையும். காரத்தன்மை உள்ள மண் சீராகும்.


DR.K.PARAMESWARI

முனைவர் கா.பரமேஸ்வரி,

முனைவர் கி.ஆனந்தி, முனைவர் ப.பரசுராமன், சிறுதானிய மகத்துவ மையம்,

அத்தியந்தல், திருவண்ணாமலை மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks