நாமக்கல் மாவட்டத் தென்னை விவசாயிகள், மானியத்தில் இடுபொருள்களைப் பெற்றுப் பயனடையலாம் என, நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) இராஜகோபால் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளின் உடனடி தேவைகளை நிறைவு செய்யவும், அவர்களின் வருமானத்தை உயர்த்தவும், பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம் என்னும் புதிய திட்டம், தமிழ்நாடு அரசின் வேளாண்மை உழவர் நலத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வகையில், தென்னை வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தென்னையில் காய்ப்புத் திறனை அதிகரிக்கவும், எண்ணெய்ச் சத்தை உயர்த்தவும், குரும்பை உதிர்வைக் குறைக்கவும்; தென்னை நுண்ணூட்டக் கலவை, பசுந்தாள் உரப்பயிர் விதைகள், உயிர் உரங்கள், போராக்ஸ் ஆகியன 50% மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
ஒருங்கிணைந்த முறையில் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, இனக்கவர்ச்சிப் பொறி, உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியன 50% மானியத்தில் வழங்கப்பட உள்ளன. மேலும், தென்னையில் நிலக்கடலை மற்றும் பயறுவகைப் பயிர்களை ஊடுபயிராக இடுதல் குறித்த செயல் விளக்கத்திடல் அமைக்கவும் மானியம் வழங்கப்பட உள்ளது.
எனவே, தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் தென்னை வருமானத்தை உயர்த்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று, நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், நாமக்கல்.