கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020
குறைந்த செலவில் அதிக மகசூலைப் பெறுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். செயற்கை உரங்களின் விலை கூடிக்கொண்டே இருக்கும் நிலையில், மண்வளத்தைக் காக்கவும், உரச் செலவைக் குறைக்கவும் ஏதுவாக இருப்பவை நுண்ணுயிர் உரங்கள். ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தில் நுண்ணுயிர் உரங்கள் பயன்படுவதால், நிலவளம் கூடுவதுடன், சுற்றுச்சூழலும் காக்கப்படுகிறது. கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையே நுண்ணுயிர் உரமாகும்.
மைக்கோரைசா
மைக்கோரைசா என்பது பூசண வகையைச் சேர்ந்த நுண்ணுயிர் உரமாகும். மைக்கோரைசா என்றால் வேர்ப்பூசணம் என்று பொருள். மண்ணிலுள்ள மணிச்சத்தை உறிஞ்சிப் பயிர்களுக்கு கொடுக்கும் இந்தப் பூசணம், வேர் உட்பூசணம், வேர் வெளிப்பூசணம் என இருவகைப்படும்.
உட்பூசணம், எல்லாப் பயிர்களின் வேர்களுடனும் கூட்டு வாழ்க்கை நடத்துகிறது. இது மண் மற்றும் பயிர்களின் வேர்களில் பரவுவதோடு, வேர்ச் செல்களின் உள்ளேயும் உடுருவி, அங்கே தனக்கே உரித்தான சிறப்பு அமைப்புகளான ஆர்பஸ்கியூல் மற்றும் வெசிக்கிளை உருவாக்குகிறது. வேர்வெளிப்பூசணம், மரவகைப் பயிர்களின் வேர்களில் பரவி வளர்கிறது. ஆனால் இது வேர்ச் செல்களுக்குள் ஊடுருவுவதில்லை.
ஆர்பஸ்குளார் மைக்கோரைசா
ஆர்பஸ்குளார் மைக்கோரைசா என்பது வேர் உட்பூசண வகையைச் சார்ந்தது. இது, அனைத்துப் பயிர்களின் வேர்களுடனும் கூட்டு வாழ்க்கை நடத்துகிறது. ஸ்குட்டலியோஸ்போரா குளோமஸ், ஜிகாஸ்போரா, அக்லாஸ்போரா ஆகியன, மண்ணில் மிகுந்திருக்கும் முக்கிய வேர் உட்பூசணங்களாகும்.
செயல் திறன்
மண்ணில் வாழும் ஆர்பஸ்குளார் மைக்கோரைசா வித்துகள், ஏற்ற சூழ்நிலையில் முளைத்து நூலிழை வடிவில் வேரின் செல்களுள் ஊடுருவி, ஆர்பஸ்கியூல், வெசிக்கிள் என்னும் அமைப்புகளை உருவாக்கும். இவை வேரிலும் மண்ணிலும் அடர்ந்து பரவி வெகு தொலைவுக்குச் சென்று மண்ணிலுள்ள மணிச்சத்து மற்றும் இதர சத்துகளையும் நீரையும் உறிஞ்சி, ஒரு குழாயைப் போல இயங்கி, வேரின் செல்களுக்கு வழங்குகின்றன.
இப்பூசணம் வேரில் அடர்ந்து பரவுவதால், வேரைத் தாக்கும் பூசணம் மற்றும் நூற்புழுக்களின் தாக்கம் கட்டுப்படுகிறது. இதனால், மணிச்சத்துக்கு ஆகும் செலவில் 25% மிச்சமாகிறது. பயிரின் வளர்ச்சியைத் தூண்டுவதால், 10-15% மகசூல் கூடுகிறது. வேர் முடிச்சுகள் உருவாகி, தழைச்சத்தை நிலைநிறுத்தும் திறனும் மேம்படுகிறது.
நாற்றங்காலில் இடுதல்
ஒரு சதுர மீட்டர் பரப்புக்கு 100 கிராம் வேர் உட்பூசணம் போதும். விதைப்பதற்கு முன் நாற்றங்காலில் 2-3 செ.மீ. ஆழத்தில் இட வேண்டும். நெகிழிப் பைகளில் வளர்க்கப்படும் நாற்றுகளுக்கு ஒரு பைக்கு 10 கிராம் உட்பூசணம் போதும். 1,000 கிலோ மண் கலவையில் 10 கிலோ வேர் உட்பூசணத்தைக் கலக்க வேண்டும்.
ஏற்ற பயிர்கள்
காய்கறிப் பயிர்கள், பழவகைப் பயிர்கள், மரக்கன்றுகள், மலைத் தோட்டப் பயிர்கள், அனைத்து நாற்றங்கால் பயிர்கள் மற்றும் அனைத்துப் பயிர்கள்.
கவனிக்க வேண்டியவை
நுண்ணுயிர் உரங்களை, வெய்யில் படாத, குளிர்ச்சியான மற்றும் உலர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும். காலாவதியாகுமுன் பயன்படுத்திவிட வேண்டும். இவற்றை, இரசாயன உரங்கள், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி மற்றும் பூசணக்கொல்லியுடன் கலக்கக் கூடாது. அங்ககப் பொருள்கள் மற்றும் தொழுவுரம் அதிகமாக இருக்கும் நிலத்தில் நுண்ணுயிர் உரங்களின் செயலும் அதிகமாக இருக்கும்.
முனைவர் ர.பரிமளாதேவி,
முனைவர் அ.சுகன்யா, தேசியப் பயறுவகை ஆராய்ச்சி மையம்,
வம்பன், புதுக்கோட்டை-622303.
சந்தேகமா? கேளுங்கள்!