நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில், மானாவாரிப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து, பரமத்தி வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் த.தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் நடப்பாண்டில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்ட கிராமங்களான, இருட்டணை, வில்லிபாளையம், பிள்ளைக்களத்தூர், நல்லூர் ஆகிய கிராமங்களில் மானாவாரிப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் விவசாயிகளுக்கு, ஊடுபயிர் சாகுபடி, கறவை மாடு, ஆடுகள், மண்புழுத் தொட்டி, தேனீப் பெட்டிகள் மற்றும் தீவனப்புல் வளர்ப்புக்கு என, மொத்தம் ரூ. 50,000 பின்னேற்பு மானியமும், இடுபொருள்களும் வழங்கப்பட உள்ளன.
எனவே, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள், நிலவுடைமை ஆவணங்களான சிட்டா, அடங்கல், ஆதார் எண், குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்கள், மார்பளவு நிழற்படம் 2 ஆகியவற்றுடன், பரமத்தி வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம்.
இத்திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள், ஒரு எக்டர் பரப்பளவில், மரவள்ளிக் கிழங்கை, ஊடுபயிருடன் சாகுபடி செய்ய வேண்டும். இவர்களிடம், ஆடு, மாடுகள் இருக்கக் கூடாது. தீவனப்புல் சாகுபடிக்குப் பத்து சென்ட் இடத்தை ஒதுக்க வேண்டும். திட்டப் பயனாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக் கூடாது.
ஆதி திராவிடர், பழங்குடி இன விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர்களைத் தொடர்ப்பு கொள்ளலாம். அல்லது தோட்டக்கலை விரிவாக்க மையத்தை அணுகிப் பயன் பெறலாம்.
பரமத்தி வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம்.
சந்தேகமா? கேளுங்கள்!