My page - topic 1, topic 2, topic 3

குறைந்த செலவில் கம்பு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021

ம்பானது சத்துகள் மிகுந்த சிறுதானியப் பயிராகும். இது  தானியம் மற்றும் தட்டைக்காக அதிகளவில் பயிரிடப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறை மற்றும் உயர் வெப்பத்தைத் தாங்கி வளரும் பயிர்களில் கம்பும் ஒன்றாகும். இது, தமிழ்நாட்டில் நெல். சோளம் மற்றும் கேழ்வரகு சாகுபடிக்கு அடுத்த இடத்தில் உள்ளது. நீர்வளமும் மண்வளமும் குறைந்த இடங்களிலும் செழித்து வளரும்.

பாசன நிலங்கள் வறண்டு கிடக்கும் சூழலில், கம்பு போன்ற சிறுதானியங்கள் நமக்குக் கிடைத்த பெரிய கொடுப்பினை ஆகும். இது வளர்வதற்குக் குறைந்த நீரே போதும் என்பதால், நிலத்தடி நீரை உறிஞ்சி, அடுத்த தலைமுறைக்கு நீர்ப் பற்றாக்குறையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்றவை சிறுதானியப் பயிர்கள். இவற்றில் கம்புக்கு முக்கிய இடமுண்டு.

மற்ற தானியங்களை விடச் சிறுதானியங்கள் அதிக ஆற்றல் மிக்கவை. புரதம் மற்றும் தாதுப்புகள் சிறுதானியங்களில் அதிகமாக உள்ளன. மேலும், அமினோ அமிலம், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின்கள் மிகுதியாக உள்ளன. கம்பிலும் புரதம், அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளன. போதியளவு மாவுச்சத்தும் அதிக ருசியைக் கொடுக்கும் கொழுப்பும், வைட்டமின்களும் தாதுப்புகளும் கம்பில் நிறைந்துள்ளன. இப்படிச் சிறப்புமிக்க கம்பை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம்.

கம்பு இரகங்கள்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் சிறுதானியத் துறையில் பல இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

கோ. 10 இரகம்: இதில் 12.7% புரதம் இருக்கும். அடிச்சாம்பல் நோயை எதிர்த்து வளரும். மணிகள் நெருக்கமாகவும் திரட்சியாகவும் இருக்கும். இறவையில் எக்டருக்கு 3,526 கிலோ, மானாவாரியில் 2,923 கிலோ மகசூலைத் தரும்.

கோ.(சியு)9 இரகம்: கதிர் 45-50 செ.மீ. நீளமிருக்கும். 13.68% புரதம் இருக்கும். அடிச்சாம்பல் நோயை எதிர்த்து வளரும். மணிகள் அடர்த்தியாக இருக்கும். இறவையில் எக்டருக்கு 2,865 கிலோ, மானாவாரியில் 1,950 கிலோ மகசூலைத் தரும். 80-85 நாட்களில் முதிரும். ஆடிப்பட்டம், புரட்டாசிப் பட்டம், இறவையில் மாசிப்பட்டம் மற்றும் சித்திரைப் பட்டத்தில் பயிரிடலாம்.

கோ.9 வீரிய ஒட்டு இரகம்: 75-80 நாட்களில் அறுவடைக்கு வரும். இரும்புச்சத்து நிறைந்தது. அடிச்சாம்பல் மற்றும் துரு நோயைத் தாங்கி வளரும். மணிகள் நெருக்கமாக, பெரிதாக இருக்கும். இறவையில் எக்டருக்கு 3,728 கிலோ, மானாவாரியில் 2,707 கிலோ மகசூல் கிடைக்கும். ஆடிப்பட்டம், புரட்டாசிப் பட்டம், இறவையில் மாசிப்பட்டம் மற்றும் சித்திரைப் பட்டத்தில் பயிரிடலாம்.

கோடையுழவு

கோடை மழையைப் பயன்படுத்தி நிலத்தை, சட்டிக் கலப்பையால் ஆழமாக உழ வேண்டும். பிறகு, இருமுறை இயந்திரக் கலப்பையால் உழ வேண்டும். கோடையுழவு மூலம், மண்ணரிப்பைத் தடுக்கலாம்; மழைநீரைச் சேமிக்கலாம். களைகள், பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

நிலம் தயாரித்தல்

நாட்டுக் கலப்பை அல்லது இரும்புக் கலப்பையால் நிலத்தை ஆழமாக உழ வேண்டும். பிறகு, புழுதி புரள 2-3 முறை உழுது, நிலத்தை விதைப்புக்குத் தயாரிக்க வேண்டும், கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 12.5 டன் மட்கிய தொழுவுரம் வீதம் சீராக இட வேண்டும்.

இறவை நாற்றங்கால் தயாரித்தல்

ஓர் எக்டர் நடவுக்கு 300 ச.மீ. பரப்புள்ள, 7.5 சென்ட் நாற்றங்கால் தேவை. இதில், 3×1.5 மீட்டர் நீள, அகலத்தில் மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும். பிறகு, ஓர் எக்டருக்குத் தேவையான 3.75 கிலோ விதைகளை ஒரு செ.மீ. ஆழத்தில் விரலால் கோடுகளைக் கிழித்து விதைகளைச் சீராக விதைக்க வேண்டும். குருத்து ஈக்கள் தொற்றும் பகுதியில் எக்டருக்கு 12.5 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதைத்ததும் மட்கிய 50 கிலோ தொழுவுரத்தால் விதைகளை மூடிவிட்டுப் பூவாளியால் நீரை லேசாகத் தெளிக்க வேண்டும். அடுத்து, மண்ணின் ஈரப்பதத்துக்கு ஏற்ப நீரைத் தெளித்து வர வேண்டும். வாய்க்கால்களை அமைத்தும், அந்த வாய்க்கால்கள் மட்டும் நனையும்படி நீரைப் பாய்ச்சலாம்.

விதை நேர்த்தி

விதைப்பு முறையைப் பொறுத்து விதையளவு மாறுபடும். விதைகளை 2% பொட்டாசியம் குளோரைடு அல்லது 3% சோடியம் குளோரைடு கரைசலில் ஆறு மணி நேரம் ஊற வைத்து எடுத்து, ஐந்து மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். இப்படிச் செய்தால், பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளர்ந்து நல்ல மகசூலைக் கொடுக்கும். விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் வீதம் கலக்க வேண்டும்.

விதைப்பு

வரிசைக்கு வரிசை 45 செ.மீ., செடிக்குச் செடி 15 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.

நுண்ணூட்டம்

எக்டருக்கு 12.5 கிலோ நுண்ணுரம் வீதம் எடுத்து 37.5 கிலோ மணலில் கலந்து, கடைசி உழவுக்கு முன் சாலில் சீராக இட வேண்டும். மண்ணில் கலந்து இடக்கூடாது.

ஊட்டமேற்றிய தொழுவுரம்

அங்கக வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்குச் சவாலாக இருப்பது சத்து நிர்வாகம். ஏனெனில், போதிய தொழுவுரம் கிடைப்பதில்லை; இந்தத் தொழுவுரத்தில் பயிர்களுக்கு வேண்டிய சத்துகள் நிறைவாக இருப்பதில்லை. எனவே, வெறும் தொழுவுரமாக இடாமல், அதை ஊட்டமேற்றிய தொழுவுரமாக இட்டால் நல்ல மகசூல் கிடைக்கும்.

ஈரப்பதம் பாதுகாத்தல்

தமிழகத்தில் பருவமழையைக் கொண்டு மானாவாரியாக அதிகளவில் கம்பு பயிரிடப்படுகிறது. இதில், சிறந்த மகசூல் கிடைக்க, மண்ணின் ஈரப்பதம் போதியளவில் இருக்க வேண்டும். இதற்கு, கோடையுழவு, உளிக்கலப்பையால் 3-5 மீட்டர் இடைவெளியில் உழுதல், நிலப்போர்வை அமைத்தல், நிலத்தின் நடுவில் பண்ணைக்குட்டை அமைத்தல், சரிவுக்குக் குறுக்கே உழுது மழைநீரைச் சேமித்தல், நிலச்சரிவின் இடையே குறுக்கு வரப்புகளை அமைத்தல் போன்ற உத்திகள் மூலம், மண்ணின் ஈரப்பதத்தைக் காக்கலாம். இறவையில் 7-10 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் அவசியமாகும்.

பயிர் இடைவெளி மற்றும் களை நிர்வாகம்

கம்பை விதைத்த இரண்டாம் வாரத்தில் களையெடுக்கும் போது, பயிருக்குப் பயிர் 15 செ.மீ. இடைவெளி இருக்குமாறு பயிர்களைக் கலைத்து விட வேண்டும். விதைத்த 15 மற்றும் 30 நாளில் களையெடுக்க வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

குருத்து ஈ: இதைக் கட்டுப்படுத்த 5% வேப்பங் கொட்டைச்சாறு அல்லது ஒரு சத நீம் அசாலைத் தெளிக்க வெண்டும்.

கதிர்நாவாய்ப்புப் பூச்சி: இதைக் கட்டுப்படுத்த, 25 கிலோ கார்பரில் 10% தூள் அல்லது மாலத்தியான் 5% தூளை, பயிர்கள் 50% பூக்கும் சமயத்தில் தூவ வேண்டும்.

நோய்கள்

அடிச்சாம்பல் நோய்: இதனால் பாதிக்கப்பட்ட பயிர்களில் கதிர்கள் வருவதில்லை. கதிர்கள் வந்தால், முழுவதும் அல்லது கதிரின் ஒரு பகுதி, மணிகள் இல்லாமல், நீண்ட இலையைப் போல இருக்கும். கதிர்களில் மணிகளுக்குப் பதிலாக, பச்சை நிறத்தில் சிறுசிறு இலையைப் போல இருப்பதால், இந்நோயைப் பசுங்கதிர் நோய் என்றும் சொல்வர்.

கட்டுப்படுத்துதல்: நோய் எதிர்ப்புத் திறனுள்ள கோ.10 மற்றும் கோ.9 வீரிய ஒட்டு இரகத்தைப் பயிரிடலாம். நாற்றாகப் பறித்து நட்டால் நோயின் தாக்கம் குறையும். நடவின் போது, நோயுற்ற நாற்றுகளைப் பிடுங்கி எறிந்து விட வேண்டும். நேரடி விதைப்பு நிலத்தில், விதைத்த 45 நாட்கள் வரை, பாதிக்கப்பட்ட பயிர்களை நீக்கிவிட வேண்டும்.

ஒரு கிலோ விதைக்கு 6 கிராம் மெட்டலாக்சில் வீதம் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். தொடர்ந்து, எக்டருக்கு 500 கிராம் மெட்டலாக்சில், ஒரு கிலோ மேங்கோசெப் வீதம் கலந்து தெளிக்கலாம்.

தேன் ஒழுகல் நோய்: பயிர்கள் பூக்கும் போது இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். நோயுற்ற கதிர்களில் இருந்து, பழுப்பு நிறத்தில், தேனைப் போன்ற இனிப்புத் திரவம் சொட்டுச் சொட்டாக வடியும். பிறகு, சில நாட்களில் இந்தத் திரவம் அடர் பழுப்பு நிறத்தில் கெட்டியாகி விடும்.

நாளடைவில் மணிகளுக்குப் பதிலாக, கரும்பழுப்பு நிறத்தில் கெட்டியான எர்கட் என்னும் இழை முடிச்சுகள் தோன்றும். இவை மணிகளை விடப் பெரிதாகவும் நீண்டும் இருக்கும். இதில் உருவாகும் ஸ்கிலிரோசியா, கதிர் மணியை விடப் பெரியதாக, ஒழுங்கற்ற வடிவில் இருக்கும். இது, கதிரடிக்கும் போது மணிகளுடன் கலந்து விடும்.

எர்கட்டை நீக்கும் முறை: ஒரு கிலோ உப்பைப் பத்து லிட்டர் நீரில் கலந்து உப்புக் கரைசலைத் தயாரிக்க வேண்டும். இதில் விதைகளைப் போட வேண்டும். அப்போது, கரைசலில் மிதக்கும் ஸ்கிலிரோசியா மற்றும் விதைகளை நீக்கிவிட்டு, மீதியுள்ள விதைகளை 2-3 முறை சுத்தமான நீரில் அலச வேண்டும். பிறகு, ஒரு கிலோ விதைக்கு 6 கிராம் மெட்டலாக்சில் வீதம் கலந்து, விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

கட்டுப்படுத்துதல்: எக்டருக்கு 500 கிராம் கார்பன்டாசிம் அல்லது ஒரு கிலோ மாங்கோசெப் வீதம் எடுத்துக் கரைசலாக்கி, பயிர்களில் 5-10% கதிர்கள் வரும் போதும், அடுத்து 50% கதிர்கள் வந்த பின்பும் தெளிக்கலாம்.

துரு நோய்: இலைகளின் மேல் சொரிசொரியாகப் பழுப்புப் புள்ளிகள் தோன்றும். சிவப்பு, பழுப்பு முதல் ஆரஞ்சு நிறம் வரையான பூசண வித்துகள், வட்டம் மற்றும் நீளமாக இலைகளில் தோன்றும். நோயின் தாக்கம் மிகுந்தால், இலைத் திசு வாடி இறந்து விடும்.

கட்டுப்படுத்துதல்: நோய் அறிகுறி தெரிந்ததும், எக்டருக்கு, கரையும் கந்தகம் 2.5 கிலோ அல்லது மாங்கோசெப் ஒரு கிலோ வீதம் எடுத்துத் தெளிக்கலாம். இதைப் பத்து நாட்கள் கழித்து மீண்டும் தெளிக்க வேண்டும். டிசம்பர்- மே காலத்தில் இந்நோயின் தாக்கம் குறைவாக இருக்கும். நோயின் தொடக்கக் காலத்திலேயே, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி 0.1% புரொப்பி கோனசோல் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். அடுத்து, 15 நாட்கள் கழித்து மீண்டும் இம்மருந்தைத் தெளிக்க வேண்டும்.

கரிப்பூட்டை நோய்: கதிரில் ஒருசில மணிகள் பூசண விதைக் கூடுகளாக மாறும். கதிர் மணிகள் இயல்பை விடப் பெரிதாக அல்லது முட்டை வடிவில், பச்சை உறையால் மூடப்பட்டிருக்கும். பிறகு, இந்த உறை கறுப்பாக மாறிக் கிழியும் போது கறுப்பு நிறத்திலான பொடி கீழே உதிரும்.

கட்டுப்படுத்துதல்: நோயுற்ற கதிர்களை நீக்கி அழிக்க வேண்டும். சுழற்சி முறையில் பயிரிட வேண்டும். கோடையுழவு அவசியம். நோயற்ற விதைகளை விதைக்க வேண்டும்.

கதிர்ப்பூசண நோய்: கதிர் மணிகளில் பல நிறங்கள் உள்ள பூசணங்கள் வளரும். மணிகள் உருவாகும் போது அல்லது அறுவடை தாமதமாகும் போது, ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் இவ்வகை நோய்கள் ஏற்படும். இந்தப் பூசண வளர்ச்சி இடத்துக்கு இடம், சாகுபடிக்கு ஏற்ப, நீர்நிலைக் காரணிக்கு ஏற்ப மாறி வளரும்.

கட்டுப்படுத்துதல்: எக்டருக்கு ஒரு கிலோ மேங்கோசெப் அல்லது ஒரு கிலோ கேப்டான், 100 கிராம் ஆரோபஞ்சிசால் வீதம் தெளிக்கலாம். தெளிக்கும் போது மழை பெய்தால் ஒரு வாரம் கழித்து மீண்டும் தெளிக்கலாம்.

இலைப்புள்ளி நோய்: இலை விளிம்பில் மஞ்சள் கோடுகள் தோன்றும். பின்பு, இவ்வகைப் புள்ளிகளின் நடுப்பகுதி வெள்ளை மற்றும் வெளிர் நிறத்தில் இருக்கும். இவ்வகைக் கோடுகள் தண்டுகளிலும் தோன்றும். இதைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு ஒரு கிலோ மாங்கோசெப் வீதம் தெளிக்கலாம்.

அறுவடை

இலைகள் மஞ்சளாக மாறிக் காய்ந்ததைப் போல இருக்கும். தானியங்கள் கடினமாக இருக்கும். இந்த நேரத்தில் கதிர்களை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். தட்டையை ஒரு வாரம் கழித்து அறுத்து நன்கு காய வைத்துச் சேமிக்க வேண்டும்.


முனைவர் கி.ஆனந்தி,

முனைவர் அ.நிர்மலா குமாரி, முனைவர் கு.சத்தியா, முனைவர் மா.இராஜேஷ், 

சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல், திருவண்ணாமலை.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks