கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019
தமிழ்நாட்டில் தென்னை சாகுபடி பரவலாக உள்ளது. பணப்பயிரான தென்னை, கேரளத்துக்கு அடுத்துத் தமிழ்நாட்டில் தான் அதிகளவில் உள்ளது. ஆண்டுக்கு 11 மில்லியன் தேங்காய்கள் விளைகின்றன. தமிழ்நாட்டில் உள்ள தென்னைநார் ஆலைகளிலிருந்து 4.5 இலட்சம் டன் கழிவு தினமும் கிடைக்கிறது. சாலையோரங்களில் குவிக்கப்படும் இதை, முறையாக மட்க வைத்து இயற்கை உரமாகப் பயன்படுத்தலாம்.
தென்னைநார்க் கழிவு
தேங்காய் மட்டைகளை ஊற வைத்துக் கயிறாகத் திரிக்கும் போது வெளிப்படும் துகள்களே நார்க்கழிவு ஆகும். இதில் லிக்னின், பென்டோசான், ஹெக்சோசான் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன. இந்தக் கழிவை மட்க விடாமல் தடுக்கும் இவற்றைத் தவிர, பயிருக்குத் தேவையான பேரூட்டங்கள் மற்றும் நுண்ணூட்டங்களும் இதிலுள்ளன.
மட்க வைக்கும் முறை
ஒரு டன் தென்னைநார்க் கழிவை மட்க வைக்க 5 கிலோ யூரியாவும் 5 புட்டி புளுரோட்டஸ் காளான் வித்தும் தேவை. 5×3 நீளம், அகலமுள்ள இடத்தை நிழலுக்கு அடியில் தேர்ந்தெடுக்க வேண்டும். இங்கே 100 கிலோ நார்க்கழிவைச் சீராகப் பரப்ப வேண்டும். இதற்கு மேல் ஒரு புட்டிக் காளான் வித்துகளைத் தூவ வேண்டும். அடுத்து 100 கிலோ கழிவைப் பரப்பி விட்டு ஒரு கிலோ யூரியாவைத் தூவ வேண்டும்.
பின்பு அதன் மேல் 100 கிலோ கழிவு, காளான் வித்து என, பத்து அடுக்குகளைப் போட்டு, எப்போதும் ஈரப்பதம் இருக்கும் வகையில் நீரைத் தெளித்து வந்தால், முப்பது நாளில் தென்னைநார்க் கழிவு மட்கி, கறுப்பாக மாறி விடும். இதன் அளவும் பாதியாகக் குறைந்து விடும். இதைச் சேமித்து வைத்துப் பயிருக்கு இடலாம்.
பயன்கள்
நார்க்கழிவில் உள்ள லிக்னின் மண்ணில் சேர்ந்து மட்கி, மண்வளத்துக்கு அடிப்படைப் பொருளான மண்மட்கு அமைய வழி செய்யும். மண்ணில் காற்றோட்டம், நீர் ஊடுருவும் திறன், நீர்ப்பிடிப்புத் திறன் ஆகியன மேம்பட்டு, பயிர் வளர்ச்சிக்கு உதவும். மண்ணில் ஈரத்தைக் காத்துப் பாசன நீரின் தேவையைக் குறைக்கும்.
மானாவாரி நிலங்களில் இட்டால், மழைநீரை நன்கு உறிஞ்சி மண்ணின் ஈரத் தன்மையைக் கூட்டி, நீண்ட நாட்கள் பயிர்கள் செழித்து வளர உதவும். கரிசலில் ஏற்படும் வெடிப்புகள் குறையும். தென்னை நார்க்கழிவு அதன் எடையைப் போல் இருமடங்கு நீரைப் பிடித்து வைப்பதால், வறட்சியின்றிப் பயிர்கள் வளரும். களர் உவர் நிலங்களைத் திருத்தவும் உதவும்.
பயன்படுத்தும் முறை
தானிய வகைகள், பயறு, காய்கறி மற்றும் பழ வகைகள் என அனைத்துப் பயிர்களுக்கும் மட்கிய தென்னைநார்க் கழிவு நல்ல இயற்கை உரமாகும். கடைசி உழவுக்கு முன், எக்டருக்கு 12.5 டன் உரத்தைச் சீராக இட வேண்டும். களர் நிலத்தில், பரிந்துரைக்கப்பட்ட உரம் மற்றும் ஜிப்சத்துடன், எக்டருக்கு 10 டன் மட்கிய தென்னைநார்க் கழிவையும் இட்டால், மண்ணின் காரத்தன்மை குறையும். புன்செய் மற்றும் மானாவாரி நிலங்களில் நிலப்போர்வையாகப் பயன்படுத்தலாம். மொத்தத்தில் இதை உரமாகப் பயன்படுத்தினால் மகசூலைக் கூட்டலாம்.
முனைவர் சா.ஷீபா,
முனைவர் ச.ஜீவா, முனைவர் தே.சரளாதேவி,
மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி, திருச்சி.
சந்தேகமா? கேளுங்கள்!