My page - topic 1, topic 2, topic 3

தென்னையைத் தாக்கும் வண்டுகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019

காண்டாமிருக வண்டு

இவ்வண்டு, இளங்கன்று மற்றும் வளரும் கன்றுகளை அதிகளவில் தாக்கும். விரியாத மட்டை, குருத்து, அடிமட்டை, விரியாத பாளையில் சேதத்தை ஏற்படுத்தும். தாக்கப்பட்ட ஓலை விரிந்தால், முக்கோணமாக வெட்டியதைப் போலிருக்கும். குருத்து வளைந்தும் சுருண்டும் இருக்கும். தென்னையில் இதன் சேதம் 10-15% இருக்கும்.

வாழ்க்கை: பெண் வண்டு தன் வாழ்நாளில் 40-60 முட்டைகளை, எருக்குழி மற்றும் மட்கிய மரத்துண்டில் இடும். பத்து நாட்களில் புழுக்கள் வெளிவரும். 4-5 மாதங்கள் எருக்குழியிலேயே இருக்கும் இப்புழுக்கள், 25-30 நாட்கள் கூட்டுப்புழு நிலையில் இருக்கும். பிறகு வெளிவரும் வண்டுகள், ஐந்து மாதங்கள் வரை குருத்துகளை உண்டு வாழும்.

மேலாண்மை: எருக்குழியில் இருக்கும் புழு, கூட்டுப்புழு மற்றும் வண்டுகளைப் பொறுக்கி அழிக்க வேண்டும். பச்சை மஸ்கார்டைன் என்னும் பூசணத்தை ஒரு கன மீட்டருக்கு 5×1011 வித்துகள் வீதம் ஊற்றினால், இவ்வண்டின் முட்டை, புழு, கூட்டுப்புழு மற்றும் முதிர்ந்த வண்டுகளும் அழிந்து விடும்.

பேக்குளோவைரஸ் என்னும் வைரஸ் கிருமி தாக்கிய வண்டுகளை எக்டருக்கு 10-15 வீதம் மாலையில் விட வேண்டும். மூன்று அந்துருண்டையை, குருத்தைச் சுற்றியுள்ள மூன்று மட்டை இடுக்குகளில் ஒன்று வீதம் வைக்க வேண்டும். அல்லது 12 கிராம் அந்துருண்டையைத் தூளாக்கி, 100 கிராம் மணலில் கலந்து நடுக்குருத்தைச் சுற்றி வைக்கலாம். 150 கிராம் வேப்பம் புண்ணாக்கை, சம அளவு மணலில் கலந்து நடுக்குருத்தில் இடலாம். எக்டருக்கு ஒரு கவர்ச்சிப்பொறி வீதம் வைத்து, இந்த வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம். ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிலோ ஆமணக்குப் புண்ணாக்கு வீதம் கலந்த கலவையைப் பானைகளில் ஊற்றி முப்பது இடங்களில் வைக்கலாம்.

சிவப்புக் கூன்வண்டு

இதன் தாக்குதலைத் தொடக்க நிலையில் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். குருத்தில் முட்டைகளை இடுவதுடன் அதற்குள் சென்று திசுக்களை உண்ணும். இதனால், நடுக்குருத்து வாடுவதுடன், அனைத்து மட்டைகளும் சரிந்து விடும். சில நேரங்களில் மரத்தில் ஏற்படும் காயங்கள் மூலம் உள்ளே சென்று திசுக்களை உண்ணும் இவ்வண்டு, சிறிய துளை வழியே கழிவை வெளியே தள்ளும். இந்தச் செம்பழுப்புக் கழிவு துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

வாழ்க்கை: பெண் வண்டு தன் வாழ்நாளில் 300 முட்டைகளை, மரத்திலுள்ள காயம் அல்லது காண்டாமிருக வண்டு தாக்கிய நடுக்குருத்தில் இடும். இவற்றிலிருந்து மூன்று நாட்களில் வெளிவரும் புழுக்கள் 55-60 நாட்கள் வரை குருத்து அல்லது தண்டின் மெல்லிய திசுக்களை உண்ணும். பிறகு தென்னை நாரால் கூட்டைப் பின்னி, அதனுள் 25 நாட்கள் கூட்டுப்புழுவாக இருக்கும். பிறகு வெளிவரும் வண்டுகள் 2-3 மாதங்கள் வரையில் வாழும்.

மேலாண்மை: மரங்களில் காயம் இருக்கக் கூடாது. பச்சை மட்டைகளை வெட்டக் கூடாது. தேவையானால் தண்டிலிருந்து மூன்றடி தள்ளி வெட்டலாம். இதன் வாழ்விடமாக இருக்கும், இடி மற்றும் காண்டாமிருக வண்டு தாக்கிய மரங்களை வெட்டி எரிக்க வேண்டும். கரும்புக்கோழை 2 லிட்டர், ஈஸ்ட் மாத்திரை 5 கிராம், 5 மில்லி அசிட்டிக் அமிலம், நீளவாக்கில் வெட்டப்பட்ட மட்டைத் துண்டுகள் இடப்பட்ட பானைகளை ஏக்கருக்கு 30 வீதம் வைக்க வேண்டும்.

எக்டருக்கு ஒரு கவர்ச்சிப்பொறியை வைக்கலாம். 15 மில்லி கார்போசல்பான் மருந்தை, சம அளவு நீரில் கலந்து வேர் மூலம் செலுத்தலாம். இம்மருந்தைச் செலுத்தினால் 45 நாட்களுக்கு இளநீர் மற்றும் காய்களை வெட்டக் கூடாது.


முனைவர் கோ.சீனிவாசன்,

முனைவர் மூ.சாந்தி, முனைவர் ஜெ.ஜெயராஜ்,

வேளாண் பூச்சியியல் துறை, வேளாண்மைக் கல்லூரி, மதுரை-625104.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks